உள்ளடக்கத்துக்குச் செல்

தி. கோ. சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. கோ. சீனிவாசன்
பிறப்பு(1922-11-14)14 நவம்பர் 1922
திருச்சினாப்பள்ளி, மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு9 அக்டோபர் 1989(1989-10-09) (அகவை 66)
பணிஅரசியலர், எழுத்தாளர், இதழாசிரியர், பேச்சாளர்,
பெற்றோர்ஆனந்தவல்லி (தாய்)
கோதண்டபாணி (தந்தை)
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி
பிள்ளைகள்

தி. கோ. சீனிவாசன் அல்லது டி. கே. சீனிவாசன் எனப் பரவலாக அறியப்படும் திருச்சிராப்பள்ளி கோதண்டபாணி சீனிவாசன் (14 நவம்பர் 1922 - 9 அக்டோபர் 1989) ஒரு தமிழ்நாட்டு அரசியலர், திராவிட இயக்க எழுத்தாளர், இதழாசிரியர், மற்றும் பேச்சாளர் ஆவார். இவரது சிறுகதைகள் பலவும் திராவிடப் பரப்புரைத்தன்மை கொண்டவை.

தொடக்க வாழ்க்கை

[தொகு]

திருச்சிராப்பள்ளி நகரில் 14 நவம்பர் 1922 அன்று ஆனந்தவல்லி - கோதண்டபாணி இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் திருச்சிராப்பள்ளியிலும் மதுரை நகரை அடுத்த பசுமலையிலும் பயின்றார். பள்ளி இறுதிப் படிப்பை இராமநாதபுரத்தில் தொடர்ந்தார். 1941 முதல் 1959 வரை தொடர்வண்டித் துறையில் எழுத்தராகப் பணியாற்றினார். 1944-இல் சரஸ்வதி என்பவரைத் திருமணம் செய்தார்.[1]

இளமை முதலே தமிழ், இலக்கியம், அரசியல், ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றைப் படித்து அவற்றில் தோய்ந்தார். தன் வயதொத்த இளைஞர்களை ஒன்றுசேர்த்து படிப்பகம், கழகங்கள் அமைத்தார். திருச்சியில் இருந்தபோது 'ஞாயிறு இலக்கியக் கழகம்' என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். அதன் மூலம் ஞாயிறு என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். ஏ. கே. வேலன் நடத்தி வந்த ஞாயிறு இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிட வாலிபர் கழகம் எனும் அமைப்பையும் தொடங்கி நடத்தினார்.

சென்னை வாழ்க்கை

[தொகு]

1960-இல் மதராசு (தற்போது சென்னை) மாநகருக்குக் குடியேறினார். முன்னதாக 17 செப்டம்பர் 1959 முதல் சென்னையிலிருந்து வெளிவந்த தாய்நாடு எனும் வார இதழில் ஆசிரியராகப் பணிசெய்தார்.[2] இருப்பினும் பொருளியல் நலிவும் குடும்பச்சுமையும் தொடர்ந்தன.

இலக்கியப் பணி

[தொகு]

இவரது முதல் சிறுகதையான கண்ணாடி, 1947-ல் பொன்னி இதழில் வெளியானது. தொடர்ந்து எரிமலை, ஞாயிறு, முரசொலி போன்ற இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதினார். ‘ஞாயிறு’ என்னும் கையெழுத்து இதழையும் நடத்தினார். 1 நவம்பர் 1951 அன்று அவ்விதழில் "பதிவு செய்யப்படாதவள்" என்ற சிறுகதை வெளியானது.[1] தாமரைச்செல்வன், தாமரை, தேவன், கண்ணாடி போன்ற புனைப்பெயர்களில் எழுதினார். தன் இணையர் சரஸ்வதி பெயராலேயே நூல்களை வெளியிட்டார்.

சிறுகதைகள்

[தொகு]

சீனிவாசன் எழுதிய உலக அரங்கில், கொள்கையும் குழப்பமும், எல்லைக்கு அப்பால் ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளில் மொத்தம் 30 சிறுகதைகள் உள்ளன. அவை எல்லாம் கணவன் மனைவி உறவு, பெண்ணுரிமை, சாதி வேற்றுமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தாய் மொழிப்பற்று போன்றவற்றைக் கருப் பொருள்களாகக் கொண்டவை. குறிப்பாக விதவை மறுவாழ்வுக் கொள்கையை, பலத்த எதிர்ப்புக்கிடையே பல கதைகளில் வலியுறுத்தியுள்ளார்.

கட்டுரைகள்

[தொகு]

அரசியல், குமுகாயம் ஆகிய தளங்களில் கட்டுரைகளை எழுதினார். ‘ஞாயிறு’ என்னும் இதழில் அரசியல் கட்டுரைகளை எழுதினார். திருக்குறள் பற்றி வானொலியில் உரையாற்றினார். அவ்வுரையை 'வாழ்வு உணர்த்துகிறது' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை ஆக்கினார்.

இதழியல்

[தொகு]

1959 ஆம் ஆண்டில் ‘தாய் நாடு’ என்னும் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். ஆனால் பொருளாதாரச் சிக்கலால் அதனைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை.

நூல் பட்டியல்

[தொகு]
ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம் குறிப்பு
1952 ஆடும் மாடும் (நெடுங்கதை) புதினம் மங்கை வெளியீடு பொன்னி இதழில் தொடராக வெளிவந்து பின் நூல் வடிவம் பெற்றது
1957 குறள் கொடுத்த குரல் சாந்தி நிலையம், சென்னை [3]
1961 உதிர்ந்த இதழ்கள் படைப்பிலக்கியம் சென்னை காவியக் கழகம்
1975 ஊர்ந்தது உயர்ந்தால் புதினம் டி.கே.எசு. சரசுவதி,

பி-3 லாயிட்சுசாலை, சென்னை -14

வாழ்த்தும் வணக்கமும் கட்டுரைத் தொகுப்பு
மலர்ச்சியும் வளர்ச்சியும் புதினம்
உலக அரங்கில் சிறுகதைத் தொகுப்பு
கொள்கையும் குழப்பமும் சிறுகதைத் தொகுப்பு
எல்லைக்கு அப்பால் சிறுகதைத் தொகுப்பு

அரசியல்

[தொகு]

முதல் கட்டம்

[தொகு]

திராவிட இயக்க முன்னோடி அமைப்புகளான நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் (1955-72)

[தொகு]

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பொதுச்செயலாளரான 'பேரறிஞர்' கா. ந. அண்ணாதுரையின் பேச்சால் ஈர்க்கப்பட்டு 1955-ல் திமுக-வில் சேர்ந்தார். 1960 முதல் திமுக வின் பொதுக் குழு, செயற்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும், தலைமைக் கழகத்தால் அறிந்தேற்பு பெற்ற முதன்மைப் பேச்சாளராகவும் இருந்தார். பேச்சிலும் தோற்றத்திலும் அண்ணாவைப் போல இருந்தமையால் சின்ன அண்ணா என்றும் அழைக்கப்பெற்றார். அண்ணாவின் இணையர் உள்ளிட்டோர், தொலைவிலிருந்து சீனிவாசனின் பேச்சைக் கேட்டு அண்ணாதான் பேசுகிறாரோ என்று ஐயப்படும் அளவுக்கு அவரது பேச்சிலும் ஒற்றுமை இருந்தது.[1]

திருச்சியில் நிகழ்ந்த தி.மு.க இரண்டாம் மாநில மாநாட்டில் 'தத்துவ வரலாறு' என்னும் தலைப்பில், மேலைநாட்டுத் தத்துவங்களைக் கீழைநாட்டுத் தத்துவங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். அதுமுதல் தத்துவ மேதை தி.கோ.சீ. எனும் பெயர் பெற்றார். 'கலைஞர்' மு. கருணாநிதியுடன் இணைந்து தூக்குமேடை நாடகத்தில் நடித்தார். பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்றார்.

1962-இல் அகவிலை உயர்வை எதிர்த்து திமுக நடத்திய மறியல் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். தஞ்சாவூர் நகரில் எஸ்.எம்.டி. பேருந்துத் தொழிலாளர் போராட்டத்தில் திராவிட முன்னேற்ற போராட்டக்குழு எனும் அமைப்பைத் தொடங்கி தொழிலாளர் நலனுக்காகப் போராடியமையால் தனது ஒன்றிய அரசுப் பணியை இழந்தார். இன்னும் பல போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

1962 இந்திய மக்களவைத் தேர்தல்

[தொகு]

1962 இந்திய மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளராக கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றார்.

கட்சி வேட்பாளர் வாக்குகள் %
இதேகா சி. ஆர். பட்டாபிராமன் 155,389 45.8%
திமுக தி. கோ. சீனிவாசன் 144,490 42.6%
பிசோக எஸ். ஏ. ரஹீம் 18,268 5.4%
சுயேச்சை டி. எஸ். கிருஷ்ணமூர்த்தி 7,820 2.3%
சுயேச்சை இருசப்ப பக்தர் 3,187 0.9%
வெற்றி விளிம்பு 10,899 3.2%
வாக்குப்பதிவு 329,154 72.9%
இதேகா தக்கவைப்பு

இந்திய மாநிலங்களவை உறுப்பினர் (1970-76)

[தொகு]

3 ஏப்ரல் 1970 முதல் 2 ஏப்ரல் 1976 வரை தமிழ்நாடு சார்பிலான இந்திய மாநிலங்களவை உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தார். அதே காலகட்டத்தில் திமுக மாநிலங்களவை கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (1972- 1989[?])

[தொகு]

திமுக பொருளாளராக இருந்த ம. கோ. இராமச்சந்திரன், அதிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தொடங்கியபோது சீனிவாசனும் அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

பிற பொறுப்புகள்

[தொகு]

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் தமிழ்நாடு திட்டக் குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

இறுதிக்காலமும் மறைவும்

[தொகு]

சீனிவாசன் தம் இறுதி நாள்களில் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். இறுதியாக 9 அக்டோபர் 1989 அன்று மாரடைப்பால், தன் 67-ஆம் பிறந்தநாளுக்கு ஒரு மாதம் முன்பே காலமானார்.

அவர் மறைவுக்கான இரங்கல் தீர்மானம் மாநிலங்களவையில் அக்டோபர் 13 அன்று துணைத் தலைவர் நச்மா எப்துல்லா தலைமையில் நிறைவேற்றப்பட்டது.[4]

வழிமரபினர்

[தொகு]

சீனிவாசன்-சரஸ்வதி இணையருக்கு ஆண் மக்கள் இருவர். அவர்களில் ஒருவரான டி. கே. எஸ். இளங்கோவன் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கிறார். மற்றொரு மகன் வில்லாளன், பேராசிரியராக உள்ளார்.

புகழ்

[தொகு]

சாதி வேற்றுமை, சனாதன எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண்ணுரிமை, பகுத்தறிவு என திராவிட இயக்கக் கொள்கைகள் சார்ந்த படைப்புகளை எழுதினார் சீனிவாசன் அண்ணா, மு. கருணாநிதி, தில்லை வில்லாளன், ஏ. வி. பி. ஆசைத்தம்பி, ராதாமணாளன், சி. பி. சிற்றரசு, பண்ணன், முல்லை சக்தி, எஸ். எஸ். தென்னரசு போன்ற திராவிட இயக்கப் படைப்பாளிகளின் வரிசையில் இடம் பெறுபவர்.

"மிகத் துணிவுடன் கதையின் கருவை மிக அழுத்தமாக வெளியிட்ட கொள்கை வீரர்... 'மஞ்சளோடு மங்களமும் மறைய வேண்டும்' என்று விதண்டாவாதம் பேசிய பழைமைவாதிகளுக்குப் பதில் கூறுவதுபோல், "மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது' என்று எழுதினார். "கண்டதும் தோன்றுவதற்குப் பெயர் காதலன்று; உடற்கவர்ச்சி. யாராவது ஒருவருடைய ஏதாவது சில நடவடிக்கைகள் நமக்குப் பிடித்துப் போகின்றன. அப்போது பிறக்கிறது அன்பு. அதே நடவடிக்கைகள் தொடர்ந்து நம் வாழ்க்கையில் குறுக்கிடும்போது நட்பு உருவாகிறது. அந்த நடவடிக்கைக்குரியவரைச் சந்திக்காவிட்டால் என்னவோபோலத் தோன்றும்போதுதான், அது காதல் என்ற பெயரை அடைகிறது'' என்று காதல் தத்துவத்தை டி.கே .சீனிவாசனைப்போல் எளிமையாக விளக்கியவர் யாருமில்லை எனப் புகழப்பெற்றுள்ளார்.[1]

கொள்கை விளக்க மேடைப் பேச்சுகள் மூலமாக மட்டுமல்லாமல் இவரது புதினம், சிறுகதை , கட்டுரைகள் ஆகியவை திமுகவின் பிற்காலப் படைப்பாளிகளுக்கு ஊக்கமாக அமைந்தன. திராவிட இயக்கத்துக்கென்று தனி படைப்புக் கலை உருவானது. திராவிட இயக்கக் கொள்கைகளை, சிந்தனைகளை , சமூக மறுமலர்ச்சியை, தன்மான உணர்வை வளர்த்தன.[1]

சீனிவாசனின் முதல் புதினமான ஆடும் மாடும், "கதைக்காக ஒருமுறை - கருத்துக்காக ஒருமுறை - நடைக்காக ஒருமுறை என்று படித்து ரசிக்கக்கூடிய புதினம்'  என்று திறனாய்வாளர்கள் பாராட்டியுள்ளனர். தன் கதைகளிலும், புதினங்களிலும் திருவள்ளுவர், பாரதிதாசன் ஆகியோரை "சாட்சியாக நிற்க" வைத்துள்ளார்.[1]

சீனிவாசனின் நூல்கள், தமிழ்நாடு அரசால் 2008-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் டி.கே. சீனிவாசனின் வாழ்க்கை, இராம. குருநாதனால் (2005) தொகுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 விக்​கி​ர​மன், கலை​மா​மணி (2020-11-18). "தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்". Dinamani. Retrieved 2026-01-01. {{cite web}}: zero width space character in |first= at position 4 (help); zero width space character in |last= at position 5 (help)
  2. தென்னகம்; 7-8-1959; பக்.6
  3. திராவிடநாடு (இதழ்), 13-10-1957, பக்.12
  4. "OBITUARY REFERENCES" (PDF).

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._கோ._சீனிவாசன்&oldid=4437362" இலிருந்து மீள்விக்கப்பட்டது