திஸ்காசஸ் ஆன் லிவி
திஸ்காசஸ் ஆன் லிவி ( இத்தாலியம்: Discorsi sopra la prima deca di Tito Livio, அதாவது "டிட்டஸ் லீவியசின் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி ") என்பது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (சி. 1517) தி பிரின்ஸ் நூலை எழுதியதற்காக சிறப்பாக அறியப்படும் இத்தாலிய எழுத்தாளரும் அரசியல் கோட்பாட்டாளருமான நிக்கோலோ மாக்கியவெல்லி எழுதிய அரசியல் வரலாறு மற்றும் மெய்யியல் படைப்பாகும் . திஸ்காசஸ் ஆன் லிவி நூலானது இவர் இறந்த பிறகு 1531 இல் போப்பாண்டவர் அனுமதியுடன் வெளியிடப்பட்டது.
கி.மு. 293 இல் மூன்றாம் சாம்னைட் போரின் முடிவில் உரோமைக் குடியரசு விரிவாக்கம் தொடர்பான லிவியின் ஆப் உர்பே கான்டிடாவின் [1] முதல் பத்து புத்தகங்களை ஆராய்ந்து எழுதப்பட்டதை இந்த நூலின் பெயர் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இருப்பினும் இந்த நூலில் சமகால அரசியல் உட்பட பல சகாப்தங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடியவற்றை மச்சியாவெல்லி விவாதித்துள்ளார். மச்சியாவெல்லி பொதுவாக கடந்தகால வரலாற்றிலிருந்து நிகழ்காலத்திற்கான பயனுள்ள படிப்பினைகளைப் பெறுவதற்கான ஒரு வழியாகவும் பார்த்தார்.
மச்சியாவெல்லி அடிக்கடி ரோமானியர்களையும் பிற பண்டைய மக்களை பற்றியும் தனது சமகாலத்தவர்களுக்கு உயர்வாக போற்றிக் குறிப்பிடுகிறார்.
நூல்
[தொகு]இந்த ஆராய்ச்சி நூலுக்கு காரணமாயிருந்தவை லீவி என்ற புகழ்பெற்ற உரோம நூலாசிரியர் எழுதிய நூல்கள் ஆகும். படுவா நகரில் கி.மு. 59-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 17ஆம் ஆண்டுவரை வாழ்ந்த லீவி, அதற்கு முந்திய காலத்து உரோமானிய வரலாற்றி நூற்றி நாற்பத்திரண்டு நூல்களைத் தொகுத்து எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகங்களில் உரோமானியரின் புகழையும், அற முறையையும் விளக்கக்கூடிய தேசீய வரலாற்றையும் கொண்டுள்ளது. இந்த நூற்றி நாற்பத்தி இரண்டு நூல்களில் முதல் பத்து நூல்களை பற்றி மட்டுமே மாக்கியவெல்லி இதில் ஆராய்ந்திருக்கிறார்.
மாக்கியவெல்லி எழுதிய நூல்களில் மிகப் பெரியது இதுதான். 1512-ஆம் ஆண்டில் இந்நூலை எழுத ஆரம்பித்து 1522-ஆம் ஆண்டில் எழுதி முடித்தார். இந்த பத்து ஆண்டுகளில் பத்துப் புத்தகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து இந்த நூலை எழுதியுள்ளார்.
மாக்கியவெல்லி இந்த நூலில் உரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகிறார். தன் காலத்தவர்கள், வரலாறு படிக்காத காரணத்தினால்தான், புகழ் வாய்ந்த முன்னோடிகளான அந்தக் காலத்துப் பேரரசர்கள், பெரியோர் போன்றவர்களின் பாதையைவிட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றார். முற்காலத்துப் பெரிய மனிதர்களின் வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தை மாக்கியவெல்லி தன்னுடைய இந்த ஆராய்ச்சி நூலில் பெரும்பாலான இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.[2]
வெளி இணைப்புகள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Livy, Ab urbe condita libri
- ↑ நாரா. நாச்சியப்பன் (1993). "சிந்தனையாளன் மாக்கியவெல்லி". நூல். பிரேமா பிரசுரம். pp. 18–22. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)