திலகவதியார்
திலகவதியார் திருவாமூர் என்ற தலத்தில் வசித்த வேளாளர் குடும்பத்தில் புகழனார்-மாதினியார் தம்பதி. இவர்களது மகள் திலகவதி.[1] இவரையடுத்து பிறந்த மகனுக்கு மருள்நீக்கி என்று பெயரிட்டனர். அக்காவுக்கும், தம்பிக்கும் வயது வித்தியாசம் அதிகம். திலகவதிக்கு பல்லவமன்னனின் சேனாதிபதியாக இருந்த கலிப் பகையாருக்கு திருமணம் செய்து வைப்பதென முடிவு செய்தனர். இந்நிலையில் திலகவதியின் தந்தை புகழனார் இறந்து போனார்.கணவன் சென்ற வருத்தம் தாளாமல் மனைவி மாதினியாரும் பின்தொடர்ந்து விட்டார். திலகவதியும், மருள்நீக்கியும் அனாதையாக விடப்பட்டனர். இருப்பினும், கலிப்பகையாரின் குடும்பத்தார், திலகவதியாரை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வதில் பின்வாங்கவில்லை. வடநாட்டிற்கு போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் கலிப்பகையார். வெற்றியுடன் திரும்புவேன், என் மணநாள் பரிசாக அதை உங்கள் திருவடியில் சமர்பிப்பேன், என மன்னரிடம் சூளுரைத்து கலிப்பகையார் கிளம்பினார். கொடிய சண்டை நடந்தது. கலிப்பகையாரின் வீரம் கண்டு வடநாட்டு மன்னன் அஞ்சினான். படைகள் பின்வாங்கி ஓடின. வீரத்தால் அவரை வெற்றி கொள்ள இயலாது எனக்கருதிய வடமாநில மன்னன், வஞ்சகமாக அவரைக் கொன்று விட்டான். வீரமரணம் அடைந்தார் கலிப்பகையார். திலகவதி தன் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து விட்டாள்.அவள் மரணத்தை தழுவ இருந்த வேளையில் இரண்டு பிஞ்சுக் கரங்கள் அவளது கால்களைக் கட்டிக் கொண்டன. தாய் தந்தைக்குப் பிறகு இப்போது நீயே என் பெற்றோர், சகலமும் நீயே, என்று கதறினார் மருள்நீக்கி. அக்கா தன் தம்பியை வாரி அணைத்துக் கொண்டாள். திக்கற்ற பெண் இவ்வுலகில் வாழ இயலாது. இருப்பினும், உனக்காக வாழ்வேனடா! ஆனால், கணவனை இழந்த பெண்கள் எப்படி இந்த பூமியில் கைம்மை நோன்பு பூண்டு வாழ்கிறார்களோ அப்படி வாழ்வேன். அதுவும் உனக்காக, என்றாள். மருள்நீக்கியை பெரும் சிவ பக்தனாக வளர்த்தாள். ஆனால் சைவ சமயத்தை விடுத்து சமணர்களின் போதனையால் வசமான மருள்நீக்கியார் சமண் சமயமே சிறந்தது எனக் கருதிச் சமணமுனிவர்கள் நிறைந்த பாடலிபுரத்திற்குச்சென்று மதம் மாறி சமண மதப் பிரச்சாரம் செய்தார்.அப்போது சமணர்கள் அவருக்கு தருமசேனன் என்றுப் பெயர் வைத்தனர். அப்போது தனது அக்கையைக் காண வந்த தருமசேனரை "நீறணியாதவன் முகத்தைக் காணமாட்டேன்" என்று திருநீற்றின் பெருமையை உணர்ந்து தன் தம்பியின் முகத்தைப் பார்க்க மாட்டேன் என உறுதியாக நின்றார். இருப்பினும் சமணத்தின் மீதிருந்த நம்பிக்கையால் தனது அக்கையைக் காணாமலேயே பாடலிபுத்திரம் திரும்பினார் தருமசேனர்.
சமண சமயத்தைச் சேர்ந்த தனது தம்பியை மீண்டும் சைவ சமயத்திற்கு கொண்டுவரும் படி திலகவதியம்மையார் திருவதிகை பெருமானிடம் வேண்டி நிற்க அதற்கு இறைவனும் திருச்செவி சாய்த்தார். அதன் படி தருமசேனருக்கு கடும் சூளை நோய் கொடுத்து விளையாடினார் இறைவன். சமணர்களின் தந்திரமும், வைத்தியங்களும் தருமசேனரைக் குணப்படுத்தவில்லை. ஆதலால் சமணத்தின் மீதிருந்த விருப்பத்தை தருமசேனர் விடுத்து தற் அக்கையைக் காண திருவதிகைக்கு வந்தார். வந்தவரை மீண்டும் திலகவதியார் "நீறணியாதவன் நெற்றியைக் காணமாட்டேன்" என்றுக் கூறி பார்க்க மறுத்தார். அக்கையாரின் பாதங்களில் விழுந்து வணங்கிய தருமசேனருக்கு திலகவதியார் தனது கைகளால் திருநீறு பூசி, திருவதிகைப் பெருமான் முன்னர் அழைத்துச்சென்றார்.
ஆங்கு திருவதிகைப் பெருமானின் முன்னர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனும் திருப்பதிகம் பாடி சூளை நோய் மற்றும் சமணம் எனும் நோயில் இருந்து விடுபெற்று, மீண்டும் சிவனடியாராகினார் தருமசேனர். அப்போது திலகவதியார் அவருக்கு "திருநாவுக்கரசர்" என்றுப் பெயர் வைத்தார்.
அதன் பின்னர் பெரும் மனநிறைவுடன் தன்னுடைய வாழ்நாளின் கடைசி மூச்சு வரை சிவ தொண்டைச் செய்து இறைவனின் திருப்பாதங்களை அடைந்தார் திலகவதியார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எஸ்.ஜயலக்ஷ்மி (August 26, 2014). "கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்". பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.