திருவாரூர் புத்தகத் திருவிழா 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாரூர் புத்தகத் திருவிழா 2023 (Tiruvarur Book Festival 2023) 2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25ஆம் தேதியன்று தொடங்கி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெற்றது.

புத்தகங்களை கையில் எடுத்து படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவாரூர் நகரத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து இப்புத்தகத் திருவிழாவை திருவாரூரில் நடத்தின. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் எசு.எசு. நகரில் இப்புத்தகத் திருவிழா நடைபெற்றது. அரசு சார்பில் புத்தகத் திருவிழாவிற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்துடன் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நன்கொடையாளர்களும் வழங்கிய நிதி உதவியுடன் இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புத்தகத் திருவிழாவில் சுமார் 60- எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. ரூ.10 முதல் 1000- ரூபாய்க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஆட்சிப்பணி தேர்வு தொடர்பான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ஆயிரக் கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கென சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. [1] புத்தக திருவிழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பல தரப்பினரும் வந்து பார்வையிடவும் வசதிகள் செய்யப்பட்டன.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் கூண்டுக்குள் வானம் என்கிற பெயரில் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. இங்கு புத்தக தானப் பெட்டி என்று குறிப்பிடப்பட்டு அட்டைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டது. புத்தக திருவிழாவிற்கு வருவோர் சிறந்த கருத்துடைய புத்தகங்களை வாங்கி இந்த பெட்டியில் தானமாக போடவும் அப்புத்தகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை கைதிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.[2]

முன்னெடுப்புகள்[தொகு]

முன்னதாக புத்தகத் திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ப. சிதம்பரம் முன்னிலை வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் சேவை சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். நிகழ்வில், கோட்டாட்சியர் சங்கீதா, பொதுநல அமைப்பினர், தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தமிழக அரசு, வாசிப்புத்திறனை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், மார்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இந்த விழா சிறப்பாக நடைபெற, இத்தகவல் உங்களைச் சார்ந்த குடும்பங்கள், நண்பர்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். இதுகுறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் ஒவ்வொருக்கும் பங்கு உள்ளது. பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்படுத்தும் ஒன்றாக இந்த புத்தகத் திருவிழா அமையும். அரசு பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த புத்தக திரு விழாவில் உள்ளூர் கலைஞர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், சொற் பொழிவாளர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். எதிர்கால சந்ததிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றங்காலாக புத்தகத் திருவிழா அமைவதற்கு, அனைத்துத் துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தனது உரையில் பேசினார். பின்னர் புத்தகத் திருவிழா இலச்சினையை அவர் வெளியிட்டார்.[3]

புத்தக திருவிழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பல தரப்பினரும் வந்து பார்வையிட்டனர்.

கலையும் கருத்துரையும்[தொகு]

புத்தகத் திருவிழாவில் மாலை நேரங்களில் சிந்தனையாளர்கள் பேச்சாளர்கள் பங்குபெறும் கருத்தரங்கு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்குபெறும் பேச்சு கட்டுரை கவிதை உள்நிட்ட போட்டிகள் தினம் தோறும் நடத்தப்பட்டன. கவிஞர் மேரி சுரேஷ் எழுதிய மனச்சிப்பாயின் நகர்வு என்ற கவிதை நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்நூலை பவா செல்லத்துரை வெளியிட மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். இறுதி நாளில் பைங்காட்டூர் தங்க கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் சத்யசோதனை என்ற நாடகம் நடத்தப்பட்டது. விழா நடைபெற்ற ஒன்பது நாள்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் விழாவில் பங்கேற்றார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

புத்தகத் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்
வ.எண் தேதி கருத்தாளர் தலைப்பு கலைநிகழ்ச்சி
1 25.03.2023 1. அர. சக்கரபாணி
2. ப.சுரேஷ் பிரதீப்
3. தஞ்சை சித்தர்
4. சமஸ்
5. கீரனூர் ஜாகீர் ராஜா
1. தொடக்கவிழா பேருரை
2. ஆளுமைகளை மதிப்பிடுதல்
3. இயற்கை உணவும் இன்றைய அவசியமும்
4. வரலாறு ஏன் நமக்கு முக்கியம்
5. எட்டு திக்கும் புத்தகங்கள்
1. பி.ஜெகதீசன் குழுவினர்
நாத சங்கமம் நிகழ்ச்சி
2 26.03.2023 1. விஷ்ணுபுரம் சரவணன்
2. ஈசன்
3. பவா செல்லத்துரை
1. குழந்தைகளும் கதைகளும்
2. யார் உங்கள் ஹீரோ
3. தமிழ்க் கதைகளின் ஆழமும் அகலமும்
1. ரமேஷ் குமார் குழுவினர்
தப்பாட்டம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சி
3 27.03.2023 1. ஆரூர் சீனிவாசன்
2. திருநாவுக்கரசு.
3. பாவலர் அறிவுமதி
1. தமிழே!
2. நுகர்வோர் விழிப்புணர்வில் நமது கடமையும் பொறுப்பும்
3. தாய்த்தமிழ்
1. வே. பெல்லோரா பெனடிக்ட் குழுவினர்
தப்பாட்டக் கலை நிகழ்ச்சி
4 28.03.2023 1. மேரி சுரேஷ்
2. செந்தில் ஜெகன்நாதன்.
3. சண்முகவடிவேல்
1. கவிதை பழகு
2. இலக்கியத்தில் மண்ணும் மனிதரும்
3. இன்று புதியதாய்ப் பிறந்தோம்
1. இந்து மணி குழுவினர்
பாட்டு மன்றம்
5 29.03.2023 1. இரா. சங்கரலிங்கம்
2. சிவப்பிரியா செல்வரத்தினம்
3. மு. இராமச்சந்திரன்
1. நன்றின் பால் உய்ப்பது அறிவு
2. சைபர் கிரைமும் தடுக்கும் முறைகளும்
3. எல்லோரும் கொண்டாடுவோம்
1. இள. அகிலன்
மாபெரும் மேஜிக்‌ஷோ
6 30.03.2023 1. கோமல் தமிழமுதன்
2. அருண்மொழிவர்மன்
3. கவிதா ஜவகர்
1. ஒரு சொல் கேளீர்
2. எழுத்துப்பணியும் அனுபவங்களும்
3. கனவு மெய்ப்படும்
1. உலகத்தமிழ்கூடல் குழுவினர்
பட்டிமன்றம்
7 31.03.2023 1. இ. சிவக்குமார்
2. எண்கண். ச.மணி
3. இரா. காமராசு
4. நந்தலாலா
1. யோகாவும் அவசியமும்
2. தமிழ் வளர்ச்சி
3. இலக்கியமும் வாழ்க்கையும்
4. வணக்கம் வள்ளுவா
1. மாணவ மாணவியர்
கலைநிகழ்ச்சி
8 01.04.2023 1. அருண்மொழி நங்கை
2. காளிப்ரசாத்
3. பாரதி கிருஷ்ணகுமார்
1. தஞ்சை எழுத்து எழுதப்பட்டதும் எழுதப்பட வேண்டியதும்
2. இலக்கியத்தில் பன்மைத்துவம்
3. ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர்
1. சுற்றுலா துறை
கலைநிகழ்ச்சிகள்
9 02.04.2023 1. எம். கிருஷ்ணன்
2. கணேச குமாரன்
3. நக்கீரன்
4. ஜோ. மல்லூரி
1. மாணவர்களும் புத்தக வாசிப்பும்
2. எழுத வந்த கதை
3. சூழல் அறிவோம்
4.பாரதி ஏற்றிய பைந்தமிழ் நெருப்பு
1. பரிசளிப்பு மற்றும்
நிறைவு விழா[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புத்தக திருவிழா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/awareness-among-students-about-book-festival-919635. பார்த்த நாள்: 2 April 2023. 
  2. இளவரசன். "இரண்டே நாளில் 1000 புத்தகங்கள் சிறை கைதிகளுக்காக தானம்". thegreatindianews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
  3. "திருவாரூரில் புத்தகத் திருவிழா மாா்ச் 25- இல் தொடங்குகிறது". தீக்கதிர். https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/thiruvarur-book-festival-starts-on-25th-march. பார்த்த நாள்: 2 April 2023. 
  4. "திருவாரூர் புத்தகத் திருவிழா நிறைவு: ஆண்டுதோறும் நடத்த கோரிக்கை". தீக்கதிர். https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/tiruvarur-book-festival-ends. பார்த்த நாள்: 4 April 2023.