திருவாய்மொழி நூற்றந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாய்மொழி நூற்றந்தாதி 15-ஆம் நூற்றாண்டு நூல். மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ்நூல்களில் இது ஒன்று.

நம்மாழ்வார் பாடிய நூல் திருவாய்மொழி. இதில் 100 பதிகங்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன.

இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு

இரண்டாம் திருமொழி முதற்பாட்டு:

வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை
வீடு செய்ம்மினே

இது ‘வீடு’ என்னும் சொல்லில் தொடங்குகிறது.

இரண்டாம் திருமொழி இறுதிப்பாடல்:

சேர்த்தடத் தென்குரு
கூர்ச்சட கோபன் சொல்
சீர்த்தொடை ஆயிரத்து
ஓர்த்த இப் பத்தே

இது பத்து என்னும் சொல்லில் முடிகிறது.

திருவாய்மொழி நூற்றந்தாதியில் இதன் பாடல்:

வீடுசெய்து மற்றெவையும் மிக்கபுகழ் நாரணன்தாள்
நாடுநலத் தாலடைய நன்குரைக்கும் – நீடுபுகழ்
வண்குருகூர் மாறனிந்த மாநிலத்தோர் தாம்வாழப்
பண்புடனே பாடியருள் பத்து.

இந்த வெண்பா ‘வீடு’ எனத் தொடங்கி, ‘பத்து’ என முடிந்துள்ளது காண்க.

கருவிநூல்[தொகு]

  • பகவத் விஷயம் (திருவாய்மொழி) 1958
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005