திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள் (தொகுதி - 1) என்ற தலைப்பில் முனைவர் கு. மோகனராசு ஓர் ஆய்வு நூலை 2005இல் மணிவாசகர் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்[1]

நூலின் நோக்கம்[தொகு]

இந்நூலின் நோக்கத்தை நூலாசிரியர் பின்வருமாறு விளக்குகிறார்:

தனிமனிதனை முதன்மைப்படுத்திப் பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளை வரையறுத்து வழங்கிய திருவள்ளுவர், சமுதாயத்தை ஒரு கூறாகக் கொண்டும் பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளை வரையறுத்து வழங்கியுள்ளார். ஒரு சில தனி மனித நெறிமுறைகளும் சமுதாய நெறிமுறைகளின் வட்டத்திற்குள் வந்து அமைந்து விரிந்த பொருள் தந்து நிற்கும்...

சமுதாய நெறிமுறைகளை வரையறுக்கும்போது, சமுதாயங்களில் காணும் சீர்கேடுகளையும் - சீர் நெறிகள் எனக் கருதப்பட்ட சீர்கேடுகளையும் - துணிந்து களைய முற்பட்டால்தான், மனித சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என உணர்ந்த திருவள்ளுவர், அந்தச் சீர்கேடுகளைக் களையும் பணியைத் துணிவோடு மேற்கொண்டுள்ளார். அவையனைத்தும் அவருடைய சீர்திருத்தங்களாக - சமுதாயச் சீர்திருத்தங்களாக - வள்ளுவத்தில் இழையோடி உள்ளன.

அந்தச் சமுதாயச் சீர்திருத்தங்களை இனம் கண்டு, அவற்றுள் சிலவற்றை முன்வைத்து, இன்றைய சமுதாயத்தைச் சீர்திருத்தும் நோக்கோடு உருவாக்கம் பெற்றதே திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள் என்னும் இந்த ஆய்வு நூல். (பக்கம்: 4)

நூலின் உள்ளடக்கம்[தொகு]

திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் கொணர விழைந்தார். அத்துறைகளை ஒவ்வொன்றாக இனம் கண்டு அவற்றை நூலாசிரியர் கீழ்வருமாறு வரிசைப்படுத்துகிறார்:

1. காதல் மணம்
2. பாலியல் உணர்வும் கட்டுப்பாடும்
3. ஒருவனுக்கு ஒருத்தி
4. பெண்ணின விழிப்புணர்வு
5. துறவு வாழ்க்கை
6. எல்லார்க்கும் எல்லாம்
7. ஊனமுற்றோர் மறுவாழ்வு
8. மன்னிக்க முடியாத குற்றங்கள்
9. வருணப் பகுப்பும் மாற்றுக் கருத்தும்
10. புராணக் கற்பனையும் புதிய பார்வையும்
11. வன்முறை எதிர்ப்பு

நூலிலிருந்து ஒரு பகுதி[தொகு]

வருணப் பகுப்பும் மாற்றுக் கருத்தும் என்ற தலைப்பில் நூலாசிரியர், திருவள்ளுவர் சமுதாயத்தில் அனைவரும் சமமே என்றும், சாதி இன அடிப்படையில் உயர்வுதாழ்வு கற்பித்தல் தவறு என்றும் எண்பித்து, சீர்திருத்த வழியைக் காட்டுவதைப் பின்வருமாறு விளக்குகின்றார்:

மாமனிதராகிய திருவள்ளுவரிடம் ஓர் உயர்ந்த போக்கு காணப்படுகின்றது; மனிதத்திற்கு முரண்பாடான தத்துவப் போக்குகள் காணப்பட்டால், அவற்றைச் சுட்டி எதிர்க்காமல், அவற்றின் குறைகளைச் சுட்டாமல், அவற்றிற்கான மாற்றுக்கருத்தைப் பக்குவமாக வழங்குவது என்பதுதான் அந்தப் போக்கு. அந்தப் போக்கை, மனிதத்திற்கு முரண்பட்ட வருணாசிரமத் தத்துவங்களை எதிர்க்கும் நோக்கிலும் திருவள்ளுவர் பின்பற்றியுள்ளார்.

பிராமணர்கள், மற்றவர்களிலிருந்து தம்மை உயர்த்திக் கொள்வதற்குப் பயன்படுத்திய நயமான உத்திகளைத் தெளிந்து, அவற்றுக்கு மாற்றுக் கருத்துகளைத் தமக்கே உரிய நயமான போக்கில் வழங்கியுள்ளார். அவற்றைக் காண்போம்:

கடவுள்

ஆரியர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்குக் கையாண்ட உத்திகளுள் ஒன்று, கடவுள் பற்றிய தத்துவங்கள்; கடவுள் சார்ந்த தத்துவங்களில், பின்வரும் அடிப்படைகளைக் கருத்தில் கொள்ளலாம்.
1. வருணப் பாகுபாட்டைக் கடவுள்தான் படைத்தார் என்றது
2. நான்கு வருணத்தாரையும் பிரமன் தன் உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து படைத்தார் என்றது
3. கடவுளுக்கு நெருக்கமானவர்கள் தாங்கள்தான் என்றது
4. மற்ற வருணத்தார் கடவுள் அருளைத் தங்கள் மூலந்தான் பெற முடியும் என்றது

இவற்றுள் சில வெளிப்படையானவை, சில நுட்பமாகப் புலனாகி நிற்பவை.

இக்கடவுள் தத்துவத்தின் உள்நோக்கை உணர்ந்த திருவள்ளுவர், இந்தக் கடவுள் தத்துவத்திற்கு மாற்றாகத் தாமே ஒரு கடவுளைப் படைத்துள்ளார்; அந்தக் கடவுள்,

1. எல்லார்க்கும் பொதுவானது;
2. யாரையும் பிளவுபடுத்தாதது;
3. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்கள் இல்லாதது;
4. பண்பு அடிப்படையிலானது; மனிதர்கள் அடைய வேண்டிய பண்புகளின் நிறைநிலைப் பண்பாய் அமைவது;
5. தன்னை உணர இடைத்தரகர் தேவை இல்லாதது;
6. சடங்குகள் வழிபாடுகள் என எதுவும் தேவை இல்லாதது;
7. தன்னைப் பற்றி எல்லாரும் மெய்யுணர்வு பெற வாய்ப்பாய் அமைவது;
8. தன் நெறி முயல்வார்க்கு, முயன்ற அளவிற்குப் பயனாய் அமைவது.

இப்படிப்பட்ட புதிய/புரட்சிகரமான/பொதுவான கடவுளைப் படைத்து, சமுதாயத்தில் நிலவும் பகுப்புணர்வைச் சீரமைக்க முயன்றுள்ளார்.

தெய்வங்கள்

ஒரு வருணத்தார் தங்களை மட்டும் தெய்வநிலைக்கு உரியவர்களாக உயர்த்திக் கொண்டார்கள். அதை மாற்றி, சமுதாயத்தில் வாழ்வாங்கு வாழும் யார் ஒருவரும் தெய்வ நிலையை அடைய முடியும் என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர் திருவள்ளுவர். அதன்படி, யார்யார் எல்லாம் தெய்வ நிலையை அடைதற்குரியவர்கள் என்பதற்குச் சில முன்வரைவுகளையும் முன்வைத்தார். அந்த முன்வரைவில் மனித தெய்வங்களாகக் கருதத்தக்கவர்களைப் பின்வருமாறு பகுத்துள்ளார்:

1. தெய்வத்திற்குச் சமமானவர்கள்
 • வையத்துள் வாழும் முறைப்படி வாழ்பவர் (குறள். 50)
 • ஐயப்பாடு இல்லாமல் பிறர் உள்ளத்தில் இருப்பதை உள்ளவாறு உணர வல்லவர் (குறள். 702)
 • உயர்ந்த கேள்வி அறிவு உடையவர் (குறள். 413)
 • முறை செய்து காப்பாற்றும் மன்னன் (குறள். 388)
2. தெய்வ உலகின் வரவேற்புக்கு உரியோர்
 • வந்த விருந்தினரைப் பேணி, வழியனுப்பி வைத்துவிட்டு, வரும் விருந்தினருக்காகக் காத்திருக்கும் இல்லறத்தார் (குறள். 86)
 • நல்ல பண்புகள் நிறைந்த கணவனைப் பெற்ற மகளிர் (குறள். 58)
 • நிலவுலகில் நீள்புகழ் பெற்றோர் (குறள். 234)
 • கள்ள உள்ளம் இல்லாதவர் (குறள். 290)
3. தேவர் உலகிற்குத் தாமாகச் செல்லும் தகுதி உடையோர்
 • அடக்கம் உடையவர்கள் (குறள். 121)
 • அருள் உணர்வு பெற்றவர்கள் (குறள். 247)
4. தெய்வங்களாவார்
 • கொல்லான் புலாலை மறுத்தான் (குறள். 260)
 • தன் உயிர், தான் என்னும் உணர்வுகளிலிருந்து விடுபட்டவர் (குறள். 268)
5. வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுவோர்
 • யான் எனது என்னும் செருக்கு அறுத்தவர் (குறள். 346).
வேள்வி

வேள்வியால் தெய்வங்களை மனம் குளிர வைக்கலாம் என்றும் அதனால் தெய்வங்களின் அருளைப் பெறலாம் என்றும் பல நன்மைகள் வாய்க்கும் என்றும், அந்த வேள்வி செய்வதற்குத் தகுதியுடையவர்கள் ஒரு குறிப்பிட்ட வருணத்தவரே என்றும் கருத்தை உருவாக்கம் செய்தும் தம்மை உயர்த்திக் கொண்டார்கள்; வேள்விகளில் உயிர்க் கொலைகள் செய்து, தெய்வத்திற்குப் படைத்துத் தாங்கள் உண்டார்கள். வேள்வியால் தம்மை மட்டும் உயர்த்திக் கொள்ள நினைத்தவர்களின் செயலை மறுத்து,

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள். 259)

என்னும் கருத்தை முன்வைத்தார் திருவள்ளுவர்.

அந்தணர்

தாம் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் நோக்கில் அந்தணர் என்னும் மதிப்பிற்குரிய பெயரைப் பிராமணர்கள் தமதாக்கிக் கொண்டனர்; அந்தப் பெயர் தமக்கே உரிய பெயர் எனவும் கொண்டனர். அந்தணர் என்னும் பெயரால் உயர்வு தாழ்வு உருவாக்கம் பெறுவதைக் கண்ட திருவள்ளுவர், அந்தப் பெயரை எல்லா வருணத்தார்க்கும் உரிய பொதுப் பெயர் ஆக்க எண்ணியுள்ளார். அதற்கான ஒரு வரைவையும் வழங்கியுள்ளார். எல்லா உயிர்களிடமும் அருளுணர்வு கொண்டவர்களாக விளங்கும் அறவோர் ஒருவர் எந்த வருணத்தில் பிறந்திருந்தாலும் அவர் அந்தணர் ஆவார் என்னும் புது வரைவை/பொது வரைவை முன்வைத்தார் திருவள்ளுவர். சமுதாயச் சீர்திருத்தம் கருதி அவர் வடிவமைத்த குறள்தான்,

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுக லான் (குறள். 30)

என்பது...

திருவள்ளுவர் முன்வைத்த இந்த மாற்றுக் கருத்துகள் எல்லாம் பிராமணர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அன்று; அது, அவருடைய நோக்கமும் அன்று. மனிதனைப் பிளவுபடுத்தும் வருணப் பாகுபாட்டால், மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிவிடக் கூடாது; எல்லாரும் சமமாக வாழ வேண்டும்; யாருக்கும் சமுதாய மதிப்பு என்பது பிறப்பினால் உருவாக்கப்படக் கூடாது, படிப்பு, பண்பு, பயன்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட வேண்டும் என்னும் சமுதாய விழிப்புணர்வை உண்டாக்குவதற்குத்தான் இந்தச் சீர்திருத்தங்களைத் திருவள்ளுவர் உருவாக்கம் செய்து சமுதாய அரங்கில் முன்வைத்துள்ளர்.

இவை எல்லாம், திருவள்ளுவர் தக்க காலத்தில் செய்த பெரிய சமுதாயச் சீர்திருத்தங்கள் எனலாம். (பக்கங்கள்: 59-65).

குறிப்பு[தொகு]

 1. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள் (தொகுதி - 1), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005, பக்கங்கள்: 80.