திருவருணைக் கலம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவருணைக் கலம்பகம் என்னும் நூல் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது.[1] இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டு. கலம்பகம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று; அருணை என்பது திருவண்ணாமலையைக் குறிக்கும். திருவண்ணாமலையின் புகழைப் பாடும் சிற்றிலக்கியங்கள் பலவற்றுள் இந்த நூலும் ஒன்று.

திருவருணைக் கலம்பகத்தில் 100 பாடல்களும், இரண்டு காப்புச் செய்யுள்களும் உள்ளன. தமிழிலுள்ள சிறப்பான கலம்பகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதற்குக் காரணம் உண்டு. வசணந்தி மாலை என்னும் பாட்டியல் நூல் 18 கலம்பக உறுப்புகளைக் குறிப்பிடுகிறது. இந்தக் கலம்பகம் மேலும் சில உறுப்புகளை இணைத்துக் கொண்டுள்ளது. பிச்சி, குற்றி, இடைச்சி, வலைச்சி, குறம், மடல் ஆகியவை புதிதாக இதில் இணைத்துக் கொள்ளப்பட்டவை.

 • ’களி’ என்னும் உறுப்பில் வரும் பாடலில் ‘கஞ்சா’ இலையைத் தாளித்துத் தின்பதை இது குறிப்பிடுகிறது.
 • திருவண்ணாமலையை ‘மலைமேல் மருந்து’ என இந்நூல் குறிப்பிடுகிறது.

எடுத்துக்காட்டுப் பாடல்[தொகு]

(பாடல் பொருள் விளங்கும்படி பிரித்துப் பதியப்பட்டுள்ளது)

வேற்று மருந்தால் விடாத எம் பிறவியை
மாற்று மருந்தா, மலைமேல் தருந்தா,
அழகிய நாயகி அருளுடை நாயகி
புழுகணி நாயகி பொருந்திய புனிதா
காசியில் இறந்தும், கமலையில் பிறந்தும்,
தேசமர் தில்லைநில் திருநடம் மண்டும்
அரிதினில் பெறும்பேறு அனைத்தையும் ஒருகால்
கருதினார்க்கு அளிக்கும் கருணையை விரும்பி
அடைகலம் புகுந்தனன் அடியேன்
இடர்க்கடல் புகுதாது எடுத்து அருள் எனவே.

மற்றொரு பாடல் பகுதி

ஆராலும் அளவிடுதற்கு அரிய உனை
நீரீலும் மலராலும் நெஞ்சுருகப் பணலாமே.

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. பதிப்பு
  1. சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர் குறிப்புரையுடன், மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு
  2. கதிரைவேல் பிள்ளை எழுதிய உரை உண்டு. வெளிவரவில்லை
  3. நகராமலை இராமலிங்கம் பிள்ளை விளக்கவுரை காழி சிவ கண்ணுசாமிப்பிள்ளையால் வெளியிடப்பட்டது. 1934
  4. பி. நா. சிதம்பர முதலியார் பதிப்பித்த ‘அருணாசல புராணக்கொத்து’ தொகுப்பில் இந்தூலின் பாடல்களின் மூலம்.

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவருணைக்_கலம்பகம்&oldid=3528069" இலிருந்து மீள்விக்கப்பட்டது