திருமலை சமணர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலை சமணர் ஆலயம் என்பது திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், திருமலை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு ஆலயம் ஆகும். போளூர் நகரத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வடபாதிமங்கலத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடம் வைகாவூர் என அழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்குள்ள மலை அரகந்தகிரி மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலையில் 20 அடி அளவில் மலைக்குன்றில் செதுக்கப்பட்டிருக்கும் சமண முனியின் சிற்பம் இக்கோயிலின் சிறப்பு ஆகும். ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மக்கள் ஒன்றுகூடி இக்கோயிலில் உள்ள சமண முனியை வழிபாடு செய்வது வழக்கம்.[1]

வரலாறு[தொகு]

சுருதக்கேவலி பத்திரபாகு மாமுனிகள் வட இந்தியாவிலிருந்து எண்ணாயிரம் முனிகளுடன் திருமலைக்கு வந்ததாகவும், விசாகாச்சாரியார் எனும் முனிவரும் சங்கத்துடன் வந்து தொண்டாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அரகந்தகிரியில் குகைக்கோயில், பாறைக்கோயில், சுவர் ஓவியங்கள் ஆகியவை உள்ளன. சேரர்,சோழர், பல்லவர்,ஹொய்சளர், சம்புவராயர் முதலிய அரசர் காலக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள குகைக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தீர்த்தங்கரர்களான அறம் அருளிய ஆதிநாதர், நாற்கதி வென்ற நேமிநாதர், பச்சைநிற பாரீசநாதர், யட்சி தருமதேவி ஆகியோரின் அழகிய நான்கடி உயர கற்சிலைகள் ஆகியவை உள்ளன. மலை மீது தீர்த்தங்கரர்,நிரம்பரர் நேமிநாதரின் 18அடி உயர புடைப்பு சிலை செதுக்கப்பட்டுள்ளது. இராஜராஜசோழனை நினைவுறுத்த குந்தவையால் அமைக்கப்பட்ட இச்சிலை, இந்நாட்டிலேயே உயரமான நேமிநாதர் சிலையாகும். நேமிநாதர் இங்கு சிகாமணிநாதர் எனப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சமணத் திருத்தலங்கள்: குந்தவை தந்த கொடை- திருமலை". Hindu Tamil Thisai. 2022-08-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. "திருமலை ஸ்ரீ பார்சுவநாதர் சிற்பமும் பாறை திருவடிகளும் – தமிழகத்தில் சமணம் (Jainism in Tamil Nadu)" (ஆங்கிலம்). 2022-08-28 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_சமணர்_ஆலயம்&oldid=3503083" இருந்து மீள்விக்கப்பட்டது