திருமணப் பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு திருமண ஒப்பந்தம் தொடர்பிலான பொருளியல், திருமணப் பொருளியல் ஆகும். உலகிலுள்ள பல்வேறு வகையான சமுதாயங்களில் திருமணம் என்பது பல்வேறு வடிவங்களில் காணப்பட்டாலும் திருமணம் பொதுவாக எல்லாச் சமுதாயங்களுக்கும் உரிய ஒரு பொதுமை ஆகும். அடிப்படையில், ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு குடும்பமாக வாழ்வது என்பது, அடிப்படையில் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த உயிரியல் தேவையாக இருந்தாலும், அவற்றுக்கும் புறம்பாகத் திருமணம் ஒரு சமுதாயத் தேவையாகவும் உள்ளது. அது சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கான ஒரு நிறுவனமும் ஆகும். திருமணத்தின் மூலம் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைவது மட்டுமன்றி, இரு குடும்பங்களுக்கு இடையேயும், இரண்டு குழுக்களுக்கு இடையேயும் பலவகைப் பிணைப்புக்கள் உருவாகின்றன. இத் தொடர்புகள் பல சந்தர்ப்பங்களில் பொருளியல் முக்கியத்துவம் கொண்டவையாகவும் உள்ளன.

பெரும்பாலான சமுதாயங்களில் திருமணத்தின்போது ஏதோ ஒரு வகையில் பணம் அல்லது வேறுவகையான சொத்துக்கள் பரிமாறப் படுவதைக் காணமுடியும். சில சமுதாயங்களில், ஆணின் குடும்பம் அல்லது ஆண், பெண்ணின் குடும்பத்துக்குப் பணமோ, பொருளோ கொடுக்க வேண்டியுள்ளது. இதை மணப்பெண் பணம் எனலாம். வேறு சில சமுதாயங்களில், ஆணின் குடும்பத்துக்குப் பெண்ணின் குடும்பத்தினர் பணம் கொடுக்கின்றனர். இது மணக்கொடை, சீதனம் அல்லது வரதட்சணை எனப் பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இவ்வாறான கொடுக்கல் வாங்கல் திருமணம் தொடர்புடைய நேரடியான பொருளாதாரப் பரிமாற்றம் ஆகும்.

திருமணம் என்பது ஒரு பரிமாற்ற முறை என்னும் கருத்தை லெவிஸ்ட்ட்ராஸ் என்பார் தனது மண ஒப்பந்தக் கோட்பாடு (alliance theory), மற்றும் பரிமாற்றக் கோட்பாடுகள் (exchange theory) மூலம் முன்வைத்துள்ளார். இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு அடிப்படையாகப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாகத் திருமாணமானதும் பெண்கள் கணவனின் குடும்பத்தோடு வாழுகின்ற முறை நடைமுறையில் உள்ள சமுதாயங்களில், அப் பெண் பிள்ளையின் உழைப்பைப் பிறந்தகம் இழக்கின்றது. இதற்கான ஒரு நட்ட ஈடே மணப்பெண் பணம் என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சீதன முறை வழக்கில் உள்ள சமுதாயங்களில், மணமகன் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்படும் பொருளானது, செல்வநிலை, உழைக்கும் தகுதி, சமுதாயத் தகுதி என்பவற்றைக் கொண்ட குடும்பங்களில் தங்கள் பெண்ணை வாழவைப்பதற்கும், அத்தகையவர்களுடன் குடும்பத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்குமான ஒரு விலையாகவே கருதப்படுகின்றது.

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமணப்_பொருளியல்&oldid=3216501" இலிருந்து மீள்விக்கப்பட்டது