திருப்பூவணம் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடமொழியில் உள்ள பிரமகைவர்த்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகத் திருப்பூவணப் புராணம் உள்ளது. பதினெண் புராணங்களில், பிரமகைவர்த்த புராணமும் ஒன்று.

பிரமகைவர்த்த புராணம்[தொகு]

" .... முந்த மறைநான்கினொடு புராண மூவாறு முழுதுல கமிறைஞ்ச வன்பின் மொழிந்த வியாதன்...."

(பாடல் எண் 60) கூறிய பதினெண் புராணங்களில் பிரமகைவர்த்த புராணமும் ஒன்று.

இதில் 70 முதல் 84முடிய உள்ள அத்தியாயங்களில் திருப்பூவணப் புராணம் கூறப்பெற்றுள்ளது.

பிரமகைவர்த்தத்திலுள்ள பிற தலபுராணங்கள்[தொகு]

பிரமகைவர்த்த புராணத்தில் திருப்பூவணப் புராணத்தைத் தவிர மற்றபிற திருத்தலங்களின் புராணங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

வரிசை எண் வடமொழி நூல் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப் பெற்ற புராணங்கள்
1. பிரமகைவர்த்த புராணம் சிவசேத்திர காண்டம் கருவூர்ப் புராணம்
2. பிரமகைவர்த்த புராணம் உத்தரபாகம் சேத்திர காண்டம் பாரிஜாதவன அககேசுவர மகாத்மியம் (திருவாடானைத் தலபுராணம்)
3. பிரமகைவர்த்த புராணம் திருவையாற்றுப் புராணம்
4. பிரமகைவர்த்த புராணம் மடவார் வளாகம் என்னும் புதுவைத் தலபுராணம்
5. பிரமகைவர்த்த புராணம் சேத்திர காண்டம் மாயூரப் புராணம்
6. பிரமகைவர்த்த புராணம் திருவெண்காட்டுப் (சுவேதவனம்) புராணம்
7. பிரமகைவர்த்த புராணம் அத்தியாயம் 70 முதல் 84 முடிய திருப்பூவணப் (புட்பவனம்)புராணம்

திருப்பூவணப் புராணத் தோற்றம்[தொகு]

புராணக் கதைகளை முதலில் முருகப் பெருமானே நந்திதேவருக்கு உரைத்தார். நந்தி தேவர் அவற்றைச் சனகாதி முனிவர்களுக்கு எடுத்து உரைக்க, அம்முனிவர்கள் வியாசருக்கு விரித்துக் கூறினர் என்றும், வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவருக்குத் தொகுத்துக் கூறினார் என்றும் பாடப் பெற்றுள்ளது.

"பங்கயத் திருமங்கை சாபந்தவிர்த்திடு காதைதான்
றங்கு நற் சொல்பகர்ந்துளோர் தஞ்செவிக ;கொடுநாடுவோர்
துங்கமிக்க பலன்கள் சீர்துன்றுளத் தருள்கூரவே
மங்கலத்தினி னந்திநேர் வந்துரைக்கினுமாதரோ"

(பாடல் 858) என்ற இப்பாடல் அமைந்துள்ளது.

திருநந்தி தேவரே ​நேரில் வந்தாலும் அனைத்துப் பலன்களையும் விடுதலின்றி எடுத்துக் கூறிடுவது அரிதாகும் என்று பாடப்பெற்றுள்ளது. அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகிறது.

திருப்பூவணப் புராணம் - பொது அமைப்பு[தொகு]

தலபுராண நூல்களில், அத்தலம் ​தேவாரப் பாடல் பெற்ற தலமாக இருந்தால், முதலில் அத்தலத்திற்கு உரிய தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் பின்னர் தலபுராணப் பாடல்கள் உள்ளன. கி.பி.1897ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட திருப்பூவணப் புராணப் புத்தகத்திலும் முதலில் தேவாரப் பாடல்களும் அடுத்து புராணப் பாடல்களும் அச்சடிக்கப்பெற்றுள்ளன. முதலில், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் முதலாம் திருமுறையில் அமைந்துள்ள தேவாரப் பாடல்களும், அடுத்து மூன்றாம் திருமுறையில் உள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அடுத்து திருநாவுக்கரசு நாயனார் பாடல்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களும், கருவூர்த் தேவர் திருவிசைப்பா பாடல்களும் உள்ளன. அருணகிரி நாதரின் பாடல்கள் மூன்று உள்ளன. ஆனால் இம் மூன்று பாடல்களும் இடம் பெறவில்லை.

காலம்[தொகு]

திருப்பூவணப் புராணம் பாடப்பெற்ற காலம் கி.பி. 1620 ஆகும்.

திருப்புவணப் புராணச் சருக்கங்கள்[தொகு]

திருப்பூவணப் புராணத்தில், கடவுள் வாழ்த்து என்று தனிப் பகுதியும், பின்னர் பாயிரம் என்று ஒரு தனிப்பகுதியும் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில் திருப்பூணக் கோயிலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே இடம் பெற்றுள்ளன. வேறுபிற தெய்வங்களின் பெயர்களேதும் இடம் பெறவில்லை. கடவுள் வாழ்த்திற்கும் பாயிரத்திற்கும் இடையே கீழ்க்கண்டபடி சருக்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும், முதற் பாடல் விநாயகர் துதி என்று இல்லாமல் காப்பு என்று உள்ளது.

1) காப்பு,
2) நூற்பயன்,
3) கடவுள் வாழ்த்து,
4) அவையடக்கம்,
5) நைமிசாரணயச் சருக்கம்,
6) சவுனகர் சூதரை வினவிய சருக்கம்,
7) திருக்கைலாயச் சருக்கம்,
8) ஆற்றுச் சருக்கம்,
9) நாட்டுச் சருக்கம்,
10) நகரச் சருக்கம்,
11) பாயிரம்
12) முதல் 31) முடிய இருபது சருக்கங்களில் புராணக்கதைகள் அமைக்கப் பெற்றுள்ளன.

ஆசிரியர்[தொகு]

திருப்பூவணப் புராணத்​தைத் தமிழில் ​மொழி​பெயர்த்து எழுதியவர் கந்தசாமிப் புலவர் ஆவார், இவரது காலம் கி,பி, 1620 ஆகும்,