உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பனந்தாள் காசிமடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பனந்தாள் காசிமடம் (Thiruppanandal Adheenam) தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு சைவ ஆதீனம் ஆகும்

வரலாறு

[தொகு]

ஆதீனம் என்ற சொல்லிற்குச் சைவமடம் என்று பொருள் மடம் என்ற சொல்லுக்கு முனிவர் வாழிடம் என்று பொருள்.[1] பனசை காசிமடத்தைத் தோற்றுவித்தவர் குமரகுருபரர். இவர் திருவைகுண்டத்தில் சண்முகசிகாமணிக்கவிராயருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் காசிப் பயணம் மேற்கொண்டபோது முகலாய மன்னர் அவுரங்கசீப்பை வாதப்போரில் வென்றார். அதற்கீடாகக் காசியில் கருடன் வட்டமிட்ட பகுதிகளைக் கொடையாகப் பெற்றார். அங்கு மடமொன்றை நிறுவினார். தமது குருநாதர் மாசிலாமணி தேசிகரின் ஆணைக்கிணங்க காசியிலேயே தங்கி வழிபாடுகளைச் செய்தார். மடத்தின் ஆறாவது அதிபராகிய தில்லைநாயகத் தம்பிரான் சுவாமிகள் மடத்தின் தலைமையகத்தைத் திருப்பனந்தாளுக்கு மாற்றினார். காசியிலிருந்து இங்கு வந்து தொடங்கப்பெற்றதால் காசிமடம் என்றழைக்கப்படுகிறது. காலப்போக்கில் திருப்பனந்தாள், காசிமடத்தின் தலைமை மையமாகத் தொண்டாற்றி வருகின்றது.[2]

மடத்தின் அதிபர்

[தொகு]

காசிமடத்தில் இதுவரை 20 சுவாமிகள் அருளாட்சி செய்துள்ளார்கள். இம்மடத்தின் அதிபரை எஜமான் சுவாமிகள் என்றே அழைப்பது வழக்கம். தற்போது அருளாட்சி செய்து வருபவர் 21-வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் ஆவார். இவர் இளம் வயது முதலாக இறைப்பற்றுடையவராகத் திகழ்ந்தார். நடனசபாபதி என்ற பெயருடன் சிதம்பரம் காசிமடக் கிளைமடத்தில் தங்கி பயின்றார். அன்றைய தருமை ஆதீனத்து 25 ஆவது குருமகாசந்நிதானம் அவர்களின் திருவுளப்பாங்கின் வண்ணம் முத்துக்குமாரசுவாமி என்ற பெயருடன் சமய தீட்சை செய்விக்கப் பெற்றார். தரும்புர ஆதீனக் கோயில்களில் கட்டளைத் தம்பிரானாகச் சிறப்பாகப் பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டு காசிமடத்தின் 20 ஆவது அதிபர் இவரைக் காசிமடத்தின் இளவரசாக நியமித்தார். 20 ஆவது அதிபர் 1972 மே 18 இல் பரிபூரணம் அடைந்தார். அது முதலாக 21 ஆவது அதிபராக காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் என்ற திருநாமத்துடன் பதவி வகித்து வருகிறார்.

மடத்தின் தமிழ்ப் பணிகள்

[தொகு]

திருக்குறள் (முப்பால்) உரைக் கொத்து, பெரியபுராணம், கந்த புராணம் உரை நூல்கள் ஆகியன இம்மடம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறக்கட்டளைகள் மூலமாகத் தேவாரம், திருவாசகம் வெளியிட்டுள்ளது. ஸ்ரீகுமரகுருபரர் எனும் மாத இதழைத் தொடர்ந்து சிறப்பாக வெளியிட்டு வருகின்றது.

சமூகப் பணிகள்

[தொகு]

திருப்பனந்தாளிலும், திருவைகுண்டத்திலும் கலைக் கல்லூரிகள், திருப்பனந்தாளில் மேல்நிலை, நடுநிலைப் பள்ளி எனப் பல பள்ளிகள் மடத்தின் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றது.

இதனையும் காண்க

[தொகு]

உசாத்துணைகள்:

[தொகு]
  1. சைவ சமய வரலாற்றுப் பார்வை - தருமையாதீன வெளியீடு
  2. முனைவர் சீர்காழி வி. இராம்தாஸ், ஸ்ரீகாசிமடம் அருள் வரலாறு
  • முனைவர் மு.சிவச்சந்திரன், சமய, மொழி வளர்ச்சியில் காசிமடத்தின் பங்கு, சென்னைப் பல்கலைக்கழகம்