திருப்படைக் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருக்கோவில் - கிழக்கிலங்கையின் புகழ்வாய்ந்த தேசத்துக்கோவிலும் திருப்படைக்கோவிலும் ஆகும்.

திருப்படைக் கோவில் என்பது, கிழக்கிலங்கையின் மட்டக்களப்புத் தேசத்தை ஆண்ட சிற்றரசர்களாலும் கண்டி மன்னர்களாலும் புரக்கப்பட்ட சைவக் கோவில்கள் ஆகும்.[1](p3) பண்டைய மன்னர்களின் மானியமும் மதிப்பும் சீர்வரிசைகளும் பெற்ற, மட்டக்களப்பின் பழைமைவாய்ந்த ஆலயங்களே இப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டன.[2] இவற்றின் எண்ணிக்கை மூன்று[3] என்றும் ஆறு[1] என்றும் ஏழு[4] என்றும் பலவிதமாகச் சொல்லப்படுகின்றது.


பெயர்க்காரணம்[தொகு]

பொதுவாகக் கூறப்படும் ஏழு திருப்படைக்கோவில்களில், தான்தோன்றீச்சரம் தவிர்ந்த ஆறும், முருகன் கோவில்களாகும். எனவே, இது தமிழக ஆறு படைவீடுகளை ஒத்த ஈழத்து வழக்காகக் கொள்ளப்படுகின்றது. இங்கு "படை" என்பது, படைவீட்டைக் குறிக்காமல், முருகனின் படையான (ஆயுதமான) "வேலையே" குறிக்கும் என்பர். திருப்படைக்கோவில்களில் பெரும்பாலானவை, மூலவராக, வேலையே கொண்டிருந்ததையும், அவற்றில் பல, "சித்திரவேலாயுத சுவாமி" ஆலயங்களாகவே இனங்காணப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.[1]

தேசத்துக் கோவில்[தொகு]

தேசத்துக்கோவிலும் திருப்படைக்கோவிலும், கிழக்கிலங்கையில் ஒரே ஆலயத்தொகுதியையே குறிப்பதாகக்கொள்வதே வழமை.[5] எனினும், இரண்டும் ஒன்றல்ல! திருப்படைக்கோவில் என்பது மன்னர்களின் மானியம் பெற்ற ஆலயங்களைக் குறிக்கப்பயன்பட, தேசத்துக்கோவில் என்பது, பூசனையிலும், நிருவாகத்திலும் முழு மட்டக்களப்புத் தேசமுமே உரிமை கொண்டாடிய ஆலயம் ஆகும்.[1](p49) திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஒன்றே, தேசத்துக்கோவிலாக விளங்கியிருக்கின்றது. சிலவேளைகளில், பல ஊர்களும் இணைந்து தேரோட்டம் நிகழ்த்தும் தான்தோன்றீச்சரத்தையும் தேசத்துக்கோவிலாகக் கொள்வதுண்டு.

கோவிற் பட்டியல்[தொகு]

திருப்படைக் கோவில்கள் என்று வகைப்படுத்தப்படும் ஏழு ஆலயங்களின் பட்டியல் வருமாறு:

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் - திருப்படைக்கோவிலாகக் கொள்ளப்படும் ஒரேயொரு சிவாலயம்.
திருக்கோவில்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக் கோவில் ஆகும். இன்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, மாகோன், குளக்கோட்டன், மனுராசா, விஜயபாகு VII, விமலதரும சூரியன் முதலான கண்டி. கோட்டை, மட்டக்களப்பு மன்னர்கள் பல திருப்பணிகள் செய்தமைக்கான செவிவழி மற்றும் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன.[1][6][7][8]

கொக்கட்டிச்சோலை

தான்தோன்றீச்சரம் மட்டக்களப்புத் தேசத்தின் ஒரேயொரு பழம்பெருஞ் சிவாலயம் இது மாத்திரமே. இலங்கையில் சைவக்கோவில்கள் பலவற்றை அழித்த போர்த்துக்கேயர், இங்கிருந்த கல்நந்தி புல்லுண்ட சம்பவத்தால் இக்கோவிலை இடிக்காது திரும்பினர் என்பது மக்கள் நம்பிக்கை. இக்கோவிலும் திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த பல மன்னர்கள் போற்றிய ஆலயமாகக் கொள்ளப்படுகின்றது.[1](p30)

கோயிற்போரதீவு

மட்டக்களப்பின் தென்புறமாக 31 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிற்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மாகோன் வகுத்த வன்னிமைப் படி பூசை ஒழுகலாறுகள் நிகழ்ந்து வந்த ஆலயம் ஆகும்.


மண்டூர்

மிகப்பழைமைவாய்ந்த வழிபாட்டு நடைமுறைகளைக் கைக்கொண்டுவரும் மண்டூர் கந்தசுவாமி கோயில், பாரம்பரிய மரபுகளை இன்றும் காத்துவரும் ஆலயம் ஆகும்.

வெருகல்

மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை மாவட்டங்களின் எல்லையான வெருகலாற்றின் கரையில் அமைந்துள்ளது வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்.

சித்தாண்டி

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மூலவராக வேலாயுதத்தைக் கொண்டதுடன், இதன் அருகில் அமைந்துள்ள குமாரத்தன் கோயில், இத்தலத்தின் பழைமைக்குச் சான்று கூறுகின்றது.

உகந்தை

இன்றைய அம்பாறை மாவட்டத்தின் தென்னெல்லையில் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலயம், திருப்படைக்கோவிலாக விளங்கியமைக்கான போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் இக்கோவிலின் வரலாற்றைக் குறிபிடுவதாலும், கதிர்காமப் பாதயாத்திரிகரின் முக்கிய வழித்தடக் கோயிலாக இது விளங்குவதாலும், திரைமறைவில் வழிபடப்படும் வேலை மூலவராகக் கொண்டிருப்பதாலும் இது புராதனமான கோயிலாகக் கருதப்படுகின்றது.

உகந்தை முருகன் கோவில்

வேறுமங்கள்[தொகு]

மேற்கூறிய பட்டியலில் முதல் மூன்று ஆலயங்களுமே "மாகோன் வகுத்த வன்னிமை"ப் படி வழிபாட்டுநடைமுறைகளைக் கொண்டிருப்பதால், அவை மட்டுமே திருப்படைக் கோவில்கள் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.[3] உகந்தை தவிர்ந்த ஏனைய ஆறும், பண்டிதர்.வீ.சீ.கந்தையாவால், திருப்படைக்கோவில்களாக வகைப்படுத்தப்படுகின்றன.[1](p49)


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 கந்தையா, வீ.சீ. (1983), மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் I, கூடல் வெளியீடு
  2. Journal of the Institute of Asian Studies Volume 19, Institute of Asian Studies (Madras, India), 2001
  3. 3.0 3.1 எஸ்.கோபாலசிங்கம், சி.மௌனகுரு (2003), "மட்டக்களப்புத் தேசத்துக் கோவில்களும் வழிபாடும்" கட்டுரை, "மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப் பண்பாடு", இரண்டாம் உலக இந்து மாநாடு மட்டக்களப்புக் கிளை
  4. "தான்தோன்றீஸ்வரம் (கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)". சிவன்நாமம். 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "கருங்கல் நந்தி எழுந்து நின்று வாலை முறுக்கி புல்லுக்கட்டை உண்டு சாணமும் போட்ட ஸ்ரீ தான்தோன்றீச்சரம்". இரா.தெய்வராஜன். 2015-09-27 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. நடராசா, எப்..எக்ஸ்.சி. (1962), மட்டக்களப்பு மான்மியம், கலா நிலையம்
  7. கமலா கமலநாதன்n, வித்துவான் கமலநாதன். (2005), மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், குமரன் புத்தக இல்லம், ISBN 955-9429-66-3
  8. பத்மநாதன், சி (2013), இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ISBN 978-955-9233-31-2


உசாத்துணை[தொகு]

  • Dennis B., McGilvray (2008), Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka, Duke University Press, ISBN 9780822341611
  • கந்தையா, வீ.சீ. (1983), மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் I, கூடல் வெளியீடு


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்படைக்_கோவில்&oldid=3216431" இருந்து மீள்விக்கப்பட்டது