திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்ததாகும். திருஞான சம்பந்தருக்கு ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன. இந்நூல் ஆசிரியர் திருவாடுதுறை ஆதீனத்து ஞானாசாரியர் பரம்பரையில் வந்த திரு. மாசிலாமணி தேசிகர் அவர்கள். காலம் 17 ஆம் நூற்றாண்டு.

நூலமைப்பு[தொகு]

காப்புச் செய்யுளாக ஒரு வெண்பா அமைந்துள்ளது. காப்புப்பருவம், வாரானைப் பருவம் ஆகியவற்றில் பருவத்திற்கு பதினோரு பாடல்களும் முத்தம், சிறுபறை ஆகியவற்றில் பருவத்திற்கு ஒன்பது பாடல்களும் மற்றைப் பருவங்களில் முறையே பத்து பாடல்களும் அமைந்துள்ளன. மொத்த பாடல்களின் எண்ணிக்கை 101 ஆகும்

நூலாசிரியர்[தொகு]

இநூலாசிரியர் மாசிலாமணி தேசிகர் திருக்கயிலாய பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனக் குருமூர்த்திகளுள் ஒருவர். இவர் ஞானபீடத்திலேயே 1625 முதல் 1658 வரை ஆசாரியராய் இருந்தார் என்பர்.இளமையிலேயே திருஞான சம்பந்த பெருமானிடம் மிக்க ஈடுபாடு கொண்டிருந்த இவர் சைவத்திருமுறைகளையும் வட மொழி- தமிழ்மொழி நூல்கள் பலவற்றையும் கற்று ஏழாவது பட்டத்தில் எழுந்தருளியிருந்த பிற்குமார சுவாமி தேசிகரிடம் மூவகைத் தீட்சைகளையும் பெற்றார் என்பர். திருவெண்காடு இவர் தவம் செய்த இடமாகும்.

நூல் கூறும் செய்திகள்[தொகு]

இந்நூலின் காப்பு பருவத்தில் முதற்கண் அம்மையப்பரை ஒரே பாடலில் வைத்துப் போற்றப்பட்டுள்ளது. பின் திருநீறு, நடராசன், சிற்சக்தி, மூத்த பிள்லையார், முருகன், திருப்பொய்கை, நீர்காழிப்பதி, திருப்பதிகம் சட்டை நாதர் மற்றை தெய்வங்கள் ஆகியனவும் போற்றப்படுகின்றன. கடவுளர் வரிசையில் திருத்தலங்கள் வைத்துப் போற்றப் பட்டுள்ளது இதன் சிறப்பாகும். திருஞான சம்பந்தரை திருமால், பிரமன், திக்கு பாலகர், அருக்கர், உருத்திரர், மருத்துவர், கன்னியர் ஆகியோர் காப்பர் என்று கூறாமல் திரு முத்தின் சிவிகை மிசை அசையவரு மணியை சேவித்தங்குடன் வருவார்' என்று கூறும் திறம் புதுமையாகும். இந்நூலில் திருநாவுக்கரசரின் தோற்றம், பதி அறிவால் இறைவனைக் காணுதல் ஆகியன கூறப்பட்டுள்ளன. திருஞான சம்பந்தர் , அரவு தீண்டி இறந்த வணிகன் ஒருவனையும், சாம்பலாய் இருந்த பூம்பாவையை உயிர்ப்பித்த வரலாறும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
மேலும் இராவணன் கயிலையை பெயர்த்தது, இரணியனை கிழித்த நரசிங்கம், போன்ற புராணச் செய்திக்ளும், கண்ணப்பர், அப்பர் போன்ற நாயன்மார் பற்றிய வரலாறும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் இடம் பெறுகின்றன.

உசாத்துணை[தொகு]

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984