திருக்குறள் திருப்பணிகள் திட்டம்
திருக்குறள் திருப்பணிகள் திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முழுதும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.[1]
இத்திட்டத்தின் வழியாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 'திருக்குறள் திருப்பணிகள்' தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும். இதற்காக ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
கண்காணிப்புக் குழு
[தொகு]திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தினைச் செயல்படுத்திட மாவட்ட அளவில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கண்காணிப்புக் குழுவின் தலைவராக, மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடர்புடைய மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்ற விருதாளர்கள் இருவர், ஆர்வமுள்ள எழுத்தாளர் அல்லது பேச்சாளர் அல்லது கவிஞர் ஒருவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அல்லது தமிழாசிரியர் ஒருவர், தமிழ் அமைப்புகளின் தலைவர் அல்லது செயலர் ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். தொடர்புடைய மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர் உறுப்பினர் மற்றும் செயலாளராகச் செயல்படுவார் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (தவ1.2)த் துறையின் அரசாணை (நிலை) எண்:72, நாள்: 28.04.2025 வழியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.