திருக்குறட் சொல்லடைவு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருளடக்கம்
முதற்பக்கம்

திருக்குறட் சொல்லடைவு என்னும் திருக்குறள் ஆய்வு நூலை எழுதியவர் சாமி வேலாயுதம் பிள்ளை என்னும் அறிஞர் ஆவார்.

இந்த நூல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது. அதை மீண்டும் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அந்நூலைப் பதித்து, தன் முதல் பதிப்பாக 2002இல் தென்னிந்திய தமிழ்ச் சங்கம் வழியாக வெளியிட்டுள்ளது [1]

நூலின் ஆய்வுத் திறன்[தொகு]

இந்நூல் திருக்குறளை ஆழமாகவும் ஆய்வுக் கண்ணோட்டத்திலும் படித்து, உய்த்தறிய விரும்புவோருக்கு ஓர் அரிய கருவூலம் ஆகும்.

நூலின் "பதிப்புரை" தரும் செய்திகள்[தொகு]

இந்த நூலின் தனித்தன்மையையும் சிறப்பையும் குறித்து, "பதிப்புரை" இவ்வாறு கூறுகிறது:

இருபதாம் நூற்றாண்டு திருக்குறள் ஆய்வு உலகில் ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணியது. குறள் பற்றி ஓராயிரம் நூல்களுக்கு மேல் வெளிவந்தன. ஐம்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப் பெற்றது. நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் குறளுக்குப் புத்துரையும் தெளிவுரையும் கண்டனர். இவை அனைத்துக்கும் முற்றிலும் மாறுபட்ட, வேறான ஒரு குறள் ஆய்வு நூல் இந்த "திருக்குறட் சொல்லடைவு" என்னும் நூலாகும்.

ஒரு நூலை எழுத்தெண்ணிப் படிக்க வேண்டுமென்று கூறுவர். ஆனால் அவ்வாறு யாரும் படிப்பதில்லை. பலர் நூல் முழுவதையும் மனனம் செய்வர். செய்ததை ஒப்பிப்பர். ஆனால் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக் கொண்டு அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்ப்பதில்லை.

இந்நூலில் திருக்குறளில் பயின்றுவரும் சொற்களையெல்லாம் பிரித்தெடுத்து, அகரவரிசைப்படுத்தி, ஒவ்வொரு சொல்லின் வரன்முறையையும் பகுபதவுறுப்புகளையும் விளம்பியதுடன், அது எவ்வெவ் இலக்கணங்களில், எவ்வெப் பொருள்களுடன், எவ்வெத் திருக்குறள்களில் வந்துள்ளது என்பன விடாது குறிக்கப்பட்டுள்ளன. திருக்குறள் பகுபத உறுப்புக்களாய எழுத்தெண்ணியும், முறையாகவே சொல்லெண்ணியும், ஒவ்வொரு சொல்லின் கீழும் அதன் இலக்கணம் எண்ணியும், பொருளெண்ணியும், மரபெண்ணியும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

இது கணினி யுகம். திருக்குறளில் எந்தச் சொல் எந்தெந்தக் குறளில் இடம் பெற்றுள்ளது என்பதைக் காட்டும் குறுந்தட்டுகள் - அடர் வட்டுகள் (சி.டி - காம்பேக்ட் டிஸ்க்) வெளியாகியுள்ளது. கணினி தன் நினைவுத் திறனால் இந்தப் பணியைச் செய்துள்ளது. ஆற்றல் மிகு கணினியாலும் சொல் இடம் பெற்றுள்ள குறள்களைக் காட்ட முடியுமே தவிர, அச்சொல்லின் பகுபத இலக்கணக் குறிப்பைத் தர இயலாது. கணினியும் செய்ய முடியாத ஒரு சிறந்த, அரிய பணியை, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் செய்து முடித்தவர் "மொழியரசி" என்னும் தமிழ்த்தாயின் பெருமைகளை விதந்து கூறும் பாடல்களைத் தொகுத்தளித்த தமிழடியார்க்குமடியனான பேரறிஞர் சாமி. வேலாயுதம் பிள்ளை அவர்கள்.

பத்தாண்டுகளுக்கு மேலாகக் கடுமையாக உழைத்து இந்நூலை உருவாக்கிய ஆசிரியர் ஐந்து முறை அடி முதல் நுனிவரை முழுமையாக ஒத்துப்பார்த்துள்ளார். ஒன்பது முறை மெய்ப்புகளைத் திருத்தியுள்ளார். இவ்வேலைப்பாட்டின் புதுமையைப் பாராட்டி "ஆசிரியரது கலைப்புலமை, புலமை அடைவு, ஆராய்ச்சித் திறன், அறிவு, உழைப்பு முதலியன புலனாகின்றன" என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் பாராட்டியுள்ளார்.

இவ்வரிய நூல் முதல் பதிப்போடு நின்று ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையில், இன்றும் இதன் அருமைப்பாடு கருதி இதனை வாங்கிப்படிக்க விரும்புவோர் பலருள்ளனர். எனவே இத்தகைய தமிழன்பர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதற் பொருட்டே இந்நூல் மீண்டும் புதிய பதிப்பைக் கண்டுள்ளது.

இப்பதிப்பு வெளிவருவதற்குப் பெரிதும் துணை நின்றவர் இந்நூலாசிரியரின் மகனாரான திரு. வே. சொக்கப்பா, எம்.ஏ. ஆவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இந்நாள் கழக ஆட்சியாளரான திரு இரா. முத்துக்குமாரசாமியுடன் மூதறிஞர், முனைவர் மு. வரதராசனாரிடம் தமிழ் இலக்கியம் பயின்றவர். ஆட்சியாளரின் ஐம்பதாண்டுக்கால உயிர்த் தோழர்; உற்ற நண்பர். எனவே இப்பதிப்பு கழக வழி வெளிவர இசைவு தந்தார்.

இதுபோல் நூல் பிறிதொன்றுமில்லை என்று கூறும் அளவிற்கு அருமையான நூலைத் தமிழன்பர்கள் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்களாக. - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் - (பக்கங்கள்: iv-v).

ஆசிரியரின் முன்னுரை தரும் விளக்கக் குறிப்புகள்[தொகு]

இந்த நூலின் ஆசிரியர் தம் நூலின் முதல் பதிப்புக்கு, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய "முன்னுரையில்" பல அரிய நுணுக்கங்களை விளக்கியுள்ளார். அம்முன்னுரை கீழ்வருமாறு:

1. உலக உயர்நூல்களுள் ஒப்புயர்வற்று, எழுத்து ஏற்றம், சொற்சுவை, பொருட் பொலிவுமிக்கு விளங்குவது திருக்குறளேயாகும். அந்நூலை நுனித்தறிந்து, மகிழ்ந்து, பயன்பெறுவதற்கு உதவியாக அதில் கையாளப் பெற்றுள்ள சொற்களை யெல்லாம் பிரித்தெடுத்து, அகரவரிசைப்படுத்தி, ஒவ்வொரு சொல்லின் வரன்முறையையும் (Derivation) பகுபதவுறுப்புக்களையும் விளம்பியதுடன் அது எவ்வெவ் இலக்கணங்களில், எவ்வெப் பொருள்களுடன், எவ்வெவ் திருக்குறள்களில் வந்துளது என்பன, இந்நூலில் விடாது குறிக்கப்படுகின்றன. அதே சொல் வேறு எச்சொல்லுடனாவது முன்னோ பின்னோ சேர்ந்து வேறு தொடரிலக்கணங்களுடனும், புதுப்பொருள்களுடனும் வழங்கப்பட்டிருப்பின் அம்மரபும் (idiom) தொடரிலக்கணமும், கூட்டுச் சொற்களின் பகுபதவுறுப்புகளும் தவறாது விளக்கப்படுகின்றன. இடை உரிச் சொற்களும் அவை தொக்கு நிற்கும் இடங்களும் தேடித் தொகுக்கப்பட்டு அவற்றின் இலக்கணக் கூறுபாட்டிற்கேற்பவும், பொருளிற் கேற்பவும் வரிசைப்படுத்தி வருமிடங் கொடுக்கப்படுகின்றன. இங்ஙனம் திருக்குறட் சொற்கள் எவ்வெவ் வகையில் எவ்வெத்திருக்குறளை அடைந்திருக்கின்றன என விதந்து கூறுவதால் இந்நூல் திருக்குறட் சொல்லடைவு எனும் பெயர் பெற்றுள்ளது. உலகில் மற்றெல்லா நூல்களினும் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய முதல் நூலாகிய திருக்குறள் ஈண்டு இவ்வாறு பகுபத உறுப்புக்களாய எழுத்தெண்ணியும், முறையாகவே சொல்லெண்ணியும், ஒவ்வொரு சொல்லின் கீழும் அதன் இலக்கணம் எண்ணியும், பொருளெண்ணியும், மரபு எண்ணியும் தொகுக்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

2. இந்நூல் இவ்வாறு திருக்குறளை ஆழ்ந்தறிவதற்குத் தமிழில் வெளி வருகிற முதற் பேரகராதி ஆகும். இன்னும் வெளி வர வேண்டியதாயுள்ள இலக்கண விளக்க, வரன்முறை, மரபு அகராதிக்கு (Etymological, Derivative & Idiomatic Dictionary) எடுத்துக்காட்டாக விளங்குகின்ற தமிழ்ச் சிற்றகராதியாகும்; சிறந்ததொரு இலக்கியத்தின் வழி இலக்கணங்கற்பதற்கு ஏற்றதொரு கருவி நூலாகும்; சொற்களே எண்ணங்களின் வேராதலின் திருவள்ளுவர் கருத்துக்கள் எல்லாவற்றினுடைய விடாத்தொகுப்பாகும்; யாவர் தேவைக்கும் இசைந்த திருக்குறள் மேற்கோள்களை வேண்டியாங்கு உளப்படுத்துவற்கு உதவவல்ல உறுதுணையாகும்; திருவள்ளுவர் காலத்துச் சொல்லாட்சி நிலையை வரையறுத்து விளக்குகின்ற வழக்கு நூலுமாகும். தமிழில் வேறெவரும் விளக்காத சொல்வன்மையைப் பற்றி விரித்துரைத்ததுடன் அமையாது அதற்கான அடிப்படைகளை யெல்லாம் கையாண்டிருப்பதிலும் திருவள்ளுவர் இணையற்றவராய் இலங்குவதையும், அவரது எழுத்து, சொல், பொருள், வளப் பொலிவையும் இந்நூல் இனிது விளக்குவதைக் காணலாம். தனித்தமிழ்ச் சொற்களின் உறுப்புக்களாய பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை முதலியன பொருள் பயக்கும் வழியை இனிதுணர்ந்து இன்புறுவதற்கு இந்நூல்போல் உதவுவது வேறில்லையென்னலாம்.

3. "எல்லாப் பொருளும் இதன் பாலுள; இதன்கணில்லாத எப்பொருளும் இல்லையால்" எனக் குறிப்பிடக் கூடிய பல் பொருட் பயில்வில் (University) திருவள்ளுவருக்கு அடுத்தபடியாகவே விளங்குகின்ற செகப்பிரியர் (Shakespeare) எனும் ஆங்கில நாடகக் கவியின் நூலை விளக்கப் பல்வேறு தொகுப்பு நூல்கள் பல்கோடிக் கணக்கில் வெளிவந்து கொண்டிருக்க, அளவில் மிகச்சிறிய ஆனால் கருத்தில் மிகப் பெரிய திருக்குறளுக்கு இத்தகைய வேலைப்பாடு இல்லாதிருந்தது வருந்தத்தக்கதாகும். இந்நூலும் இதனின்றெழுந்த இதன் பிற்பகுதியாய் விரைவில் வெளிவர இருக்கின்ற, திருக்குறட் பொருளடைவும் அவற்றின் பொருள் வளங்களை யெல்லாம் பொதியப் பெற்று இன்னும் சில வகையில் மேம்பட்டும் விளங்குவதைக் காணலாம். "மிக்க எளிமையான வேலைப்பாடுகளும் செல்வமிக்க பயனை அளிக்கவல்லன" (Most poor matters point to great ends - Shakespeare) எனின் இப்பெருந் தொகுப்பு நூல், தக்க தமிழறிஞர் கையில், இன்னும் மேலான ஆராய்ச்சிகளுக்கு அடி கோலுவது திண்ணமாகும்.

4. இந்நூலைப் பயன்படுத்துங்கால் வேண்டிய திருக்குறளையும் பார்த்துக் கொள்வதற்கு இசைவாகத் திருக்குறள் மூலம், ஒவ்வொரு குறளின் வரிசை எண்ணுடன், இரண்டாவது பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. தேவையான திருக்குறளைத் தேடியெடுக்கத் திருக்குறள் முதற் குறிப்படைவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. "ஆயிரம் பாட்டிற்கு அடி தெரியும், நூறுபாட்டிற்கு நுனி தெரியும்" என்பதற்கு ஏற்பக் குறிப்பிட விரும்புங் குறளின் முற்பகுதி (அடி) மறந்து, பிற்பகுதி (நுனி) நினைவிற்கு வந்து, அக்குறளைத் தேட இயலாது இடர்ப்படும் பொழுது எளிதில் எடுக்கத் திருக்குறட் கடைச்சொல் அடைவு ஒன்றும் அக்கடைச் சொற்களின் முன் சொற்களுடன் ஏற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ளது. குறள்போன்ற மனப்பாடஞ் செய்து அடிக்கடி மேற்கோள் காட்டத்தக்க நூலிற்கு இத்தகைய தேவை யாவர்க்கும் பெரிதென்பதையும் இதைப்போல் ஏனைய நூல்களுக்கும் இயற்ற இது ஓர் நல்வழிகாட்டியாகும் என்பதையுங் காணலாம். ஒவ்வொரு குறளின் கடைச் சொல்லிலும் ஊன்றி வைக்கப்பட்டுள்ள அழுத்தம் (emphasis) வியக்கத் தக்கதாயிருப்பதைக் கண்டு களிக்கவும் இக்கடைச் சொல்லடைவு பயன்படுவதாகும். இன்னும் இந்நூலைப் பயன்படுத்துவதற்கு உதவக் கூடிய சில குறிப்புகளைக் கீழே காணலாம்.

5. இந்நூலை இயற்றப் பேருதவி புரிந்தவர் தஞ்சைக் குத்தாலம், உயர் பள்ளிச் சமக்கிருத ஆசிரியர், வித்துவான் அரங்க.பொன்னுச்சாமி பிள்ளை ஆவர். அவர் உழைப்பின்றி இந்நூல் இத்துணை முழுமையுற்றிராதென்பது திண்ணம். அவருக்கு என்றுங்குன்றா நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இயன்ற இலக்கணத் திருத்தங்களைத் தெரிவித்தருளிய கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர், வித்துவான் பூவராகம் பிள்ளை, யாழ்ப்பாணத்து இலக்கணத் தம்பிரான் என்னும் பெயர் பெற்ற, காலஞ் சென்ற முத்துக்குமரசாமித் தம்பிரான் சுவாமிகள் இவர்களுக்கு எம் நன்றி உரித்தானதாகும். - தமிழடியார்க்குமடியன், சாமி. வேலாயுதம் பிள்ளை (பக்கங்கள்: vi-ix).

குறிப்பு[தொகு]

  1. சாமி வேலாயுதம் பிள்ளை, திருக்குறட் சொல்லடைவு, தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சென்னை, (கழகம்) முதல் பதிப்பு, 2002, பக்கங்கள்: 348.