உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குர்ஆன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்குரான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குர்ஆன் அல்லது திருக்குர்ஆன் (அரபு: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் முதன்மையான புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.[1][2] இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.[3] ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் தூதுத்துவத்திற்கான அத்தாட்சி எனவும் குர்ஆனைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.[4].அரபு மொழியில் எழுதப்பட்ட இந்நூலானது இசுலாமிய உலகில் அதிகம் மொழிப்பெயர்க்கப்பட்ட நூலாகும்.

முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குர்ஆனின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார்.[5] அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் தாபித்(ரலி) என்பவரின் தலைமையில் குர்ஆனின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான்(ரலி) காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன.

பெயர் விளக்கம்

குர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் கிதாப் (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது.

திருகுர்ஆனில் குறிப்பிட்டுள்ள பெயர்கள்

எண் அரபுத் தமிழ் தமிழாக்கம் வசன எண்
1 ஹப்லுல்லாஹ் அல்லாஹ்வின் கயிறு ۞3:103
2 அல் திக்ரா நல்லுபதேசம் ۞7:2
3 அல் அஜப் ஆச்சரியமானது ۞72:1
4 அல் பஸாயிர் அறிவொளி ۞7:203
5 அல் மர்ஃபூஆ உயர்வானது ۞80:14
6 அல் அரபிய்யு அரபி மொழியிலுள்ளது ۞12:2
7 அல் மஜீத் கண்ணியம் மிக்கது ۞50:1
8 அல் முகர்ராமா சங்கையானது ۞80:13
9 அல் முதஹ்ஹர் பரிசுத்தமானது ۞80:14
10 அந் நதீர் அச்சமூட்டி எச்சரிப்பது ۞41:4
11 அல் பஷீர் நன்மாராயங் கூறுவது ۞41:4
12 அல் முஸத்திக் முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது ۞6:92
13 அல் முபாரக் நல்லாசிகள் ۞6:92
14 அல் ஹுக்மு சட்ட திட்டங்கள் ۞13:37
15 அத் தன்ஸீல் இறக்கியருளப் பெற்றது ۞20:4
16 அர் ரூஹ் ஆன்மா ۞42:52
17 அந் நிஃமத் அருட்கொடை ۞93:11
18 அல் கய்யிம் உறுதியானது நிலைபெற்றது ۞18:1-2
19 அல் முஹைமின் பாதுகாப்பது ۞5:48
20 அல் ஹிக்மத் ஞானம் நிறைந்தது ۞2:151
21 அல் மவ்இளத் நற்போதனை ۞3:138
22 அஷ் ஷிஃபா அருமருந்து ۞10:57
23 அர் ரஹ்மத் அருள் ۞6:157
24 அல் ஹுதா நேர் வழிகாட்டி ۞3:138
25 அல் அஜீஸ் சங்கையானது வல்லமையுடையது ۞41:41
26 அல் ஹகீம் ஞானம் மிக்கது ۞36:2
27 அல் முபீன் தெளிவானது ۞5:17
28 அல் கரீம் கண்ணியமானது ۞56:77
29 அல் ஹக்கு மெய்யானது ۞2:91
30 அந் நூர் பேரொளி ۞4:174
31 அத் திக்ரு ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது ۞3:58
32 அல் புர்ஹான் உறுதியான அத்தாட்சி ۞4:174
33 அல் பயான் தெளிவான விளக்கம் ۞3:138

திருகுர்ஆனின் அமைப்பு

திருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன. மேலும் சில வசனங்கள் நினைவூட்டலுக்காக பல இடங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன.

திருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில் ஒத்ததாக இல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன.

திருகுர்ஆனின் உள்ளடக்கம்

திருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் சூரா என அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன.

1. தோற்றுவாய்
2. பசு மாடு
3. இம்ரானின் சந்ததிகள்
4. பெண்கள்
5. ஆகாரம்
6. ஒட்டகம்
7. சிகரங்கள்
8. வெற்றிப்பொருள்கள்
9. மன்னிப்பு தேடுதல்
10. யூனுசு
11. யூது
12. யூசுப்
13. இடி
14. இப்ராகிம்
15. மலைப்பாறை
16. தேனி
17. இசுராயீலின் சந்ததிகள்
18. குகை
19. மர்யம்
20. தாஃகா
21. நபிமார்கள்
22. புனிதப் பயனம்
23. விசுவாசிகள்

24. பேரொளி
25. பிரித்தறிவித்தல்
26. கவிஞர்கள்
27. எறும்புகள்
28. வரலாறுகள்
29. சிலந்தி
30. ரோமப் பேரரசு
31. லுக்மான்
32. சிரம் பணிதல்
33. சதிகார அணியினர்
34. சபா
35. படைப்பவன்
36. யாசீன்
37. அணிவகுப்புகள்
38. சாத்
39. கூட்டங்கள்
40. ஈமான் கொண்டவர்
41. ஃகாமீம் சசிதா
42. கலந்தாலோசித்தல்
43. பொன் அலங்காரம்
44. புகை
45. முழந்தாளிடுதல்
46. மணல் திட்டுகள்

47. முகம்மது
48. வெற்றி
49. அறைகள்
50. காஃப்
51. சூராவளி
52. மலை
53. நட்சத்திரம்
54. சந்திரன்
55. அளவற்ற அருளாளன்
56. மாபெரும் நிகழ்ச்சி
57. இரும்பு
58. தர்க்கித்தல்
59. ஒன்று கூட்டுதல்
60. பரிசோதித்தல்
61. அணிவகுப்பு
62. வெள்ளிக் கிழமை
63. நயவஞ்சகர்கள்
64. நட்டம்
65. விவாகரத்து
66. விலக்குதல்
67. ஆட்சி
68. எழுதுகோல்
69. நிச்சயமானது

70. உயர்வழிகள்
71. நூகு
72. ஃசின்கள்
73. போர்வை போர்த்தியவர்
74. போர்த்திக்கொண்டிருப்பவர்
75. மறுமை நாள்
76. காலம்
77. அனுப்பப்படுபவை
78. பெரும் செய்தி
79. பறிப்பவர்கள்
80. கடுகடுத்தார்
81. சுருட்டுதல்
82. வெடித்துப் போதல்
83. நிறுவை மோசம் செய்தல்
84. பிளந்து போதல்
85. கிரகங்கள்
86. விடிவெள்ளி
87. மிக்க மேலானவன்
88. மூடிக் கொள்ளுதல்
89. விடியற்காலை
90. நகரம்
91. சூரியன்
92. இரவு

93. முற்பகல்
94. விரிவாக்கல்
95. அத்தி
96. இரத்தக்கட்டி
97. கண்ணியமிக்க இரவு
98. தெளிவான ஆதாரம்
99. அதிர்ச்சி
100. வேகமாகச் செல்லுபவை
101. திடுக்கிடசெய்யும் நிகழ்வு
102. பேராசை
103. காலம்
104. புறங்கூறல்
105. யானை
106. குறைசிகள்
107. அற்பப் பொருட்கள்
108. மிகுந்த நன்மைகள்
109. காபிர்கள்
110. உதவி
111. சுடர்
112. ஏகத்துவம்
113. அதிகாலை
114. மனிதர்கள்

வரலாறு

திருகுர்ஆனின் தோற்றம்

திருகுர்ஆனின் 96வது அத்தியாயமான "இரத்தக்கட்டி"-ன் முதல் 5 ஆயத்துகள் ஹிரா குகையில் வைத்து முதன் முதலாக முகம்மது நபிக்கு கற்றுக்கொடுக்கப்பட வசனமாக நம்பப்படுவது

முகம்மது நபி இறைவன் குறித்த உண்மையான அணுகுமுறையை அறிய மெக்காவின் அருகில் இருக்கும் ஹிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீஜாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் முஹம்மது நபியே கற்பித்தார். வானவர் ஜிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முஹம்மது நபி கூறினார்.

ஒட்டகத்தின் எலும்பில் எழுதப்பட்ட திருகுர்ஆனின் வசனங்கள்

முஹம்மது நபி கூறிய திருகுர்ஆன் வசனங்கள் அவரது தோழர்களால் மனனம் செய்யப்பட்டும், காய்ந்த களிமண் சட்டங்கள், பனை ஓலைகள், விலங்குகளின் தோல் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டன. மேலும் இசுலாமியர்கள் தங்களின் பிராத்தனைகளின் போது, திருகுர்ஆனின் வசனங்களை ஓதவும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலமும் திருகுர்ஆனின் வசனங்கள் சுலபமாக மனனம் செய்யபட்டன. இருப்பினும் முகம்மது நபியின் காலத்தில் திருகுர்ஆன் முழுமையாக எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை.

திருகுர்ஆன் தொகுப்பு

முஹம்மது நபியின் மறைவுக்கு பின்பு இசுலாமியர்களின் முதல் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில் யமாமா போர் ஏற்பட்டது. பொ.ஆ 633ல் ஏற்பட்ட இந்த போரின் போது திருகுர்ஆனை மனனம் செய்த இசுலாமியர்களில் 70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரும், பலருக்கு அதை கற்பித்தவருமான சலீமின் மரணம் மிக முக்கியமானது. இதனைத் தொடர்ந்து அபுபக்கரைச் சந்தித்த உமர் பின் கத்தாப், திருகுர்ஆனின் பிரதிகளை எழுத்து வடிவில் தொகுக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவித்தார். இதற்கு முதலில் தயங்கிய அபூபக்கர், பின்னர் உமரின் கோரிக்கையை ஏற்று சைத் பின் சாபித் என்பவரை இந்த தொகுக்கும் பணிக்கு நியமித்தார்.[6]

சைத் பின் சாபித், முஹம்மது நபியின் வீட்டிலும் மற்றவர்களிடம் இருந்த திருகுர்ஆனின் எழுத்துப் பிரதிகளை சேகரிக்கத் தொடங்கினார். கூடவே திருகுர்ஆனை மனனம் செய்தவர்கள் மூலமாகவும் புதிய எழுத்துப் பிரதிகளையும் உருவாக்கினார். பின்னர் இவை பலமுறை முகம்மது நபியால் கற்பிக்கப்பட்ட வரிசையின்படி சரிபார்க்கப்பட்ட பின் மூல பிரதி தயாரிக்கப்பட்டு அபுபக்கரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு பின் அந்த மூலப் பிரதி, உமர் பின் கத்தாப் மூலம் அவரின் மகளும், முகம்மது நபியின் மனைவியுமான ஹப்சா அம்மையாரை வந்தடைந்தது.

திருகுர்ஆன் நகலாக்கம்

சமர்கன்ட் கையெழுத்துப் பிரதிகள். உதுமானின் காலத்திய திருகுர்ஆனின் கையெழுத்துப்பிரதியாக நம்பப்படுவது.

அபுபக்கர் காலத்தில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட போதிலும், அது முழுமையான மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இது ஒரே புத்தக வடிவில் இல்லாமல், தனித்தனி அத்தியாயங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருகுர்ஆனை கற்பிப்பதில் பல தவறுகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக மூன்றாவது கலீபாவான உதுமான் காலத்தின், இஸ்லாமிய பேரரசு எகிப்து முதல் பாரசீகம் வரை பரந்து விரிந்திருந்தது. இந்த காலத்தில் பல பிரதேசங்களில் இருந்த கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அளவிலே திருகுர்ஆனை கற்பிக்க முற்பட்டனர். இது பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், உதுமானின் அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார்[7] இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன.[8]

தொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் தாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன.[8] இந்த திருகுர்ஆனின் நகல்களின் அடிப்படையிலேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன.

பிற சேர்க்கைகள்

படிப்பதற்கு ஏதுவான வகையில் வெவ்வேறு நிறங்களுடனும், நிறுத்தக் குறிகளுடனும் அச்சடிக்கப்பட்ட திருகுர்ஆன்

திருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன.

ஜுஸ்உ

திருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு (ஜுஸ்வு) என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 வாரத்தில் ஓதி முடிக்க ஏதுவாக 7 மன்ஜில்-லாக தொகுக்கப்பட்டுள்ளன "யுசூவு அட்டவணை "

எண் அரபு அரபுத் தமிழ் ஆங்கிலம் வசன எண்
1 الم அலிஃப் லாம் மீம் Alif Lam Meem ۞2:1
2 سَيَقُولُ ஸயகூல் Sayaqool ۞2:142
3 تِلْكَ الرُّسُلُ தில்கர் ருஸீலு Tilkal Rusull ۞2:253
4 لَنْ تَنَالُوا லன்தனாலு Lan Tana Loo ۞3:92
5 وَالْمُحْصَنَاتُ வல்முஹ்ஸனாத்து Wal Mohsanat ۞4:24
6 لَا يُحِبُّ اللَّهُ லா யுஹிப்புல்லாஹ் La Yuhibbullah ۞4:148
7 وَإِذَا سَمِعُوا வ இதா ஸமிஊ Wa Iza Samiu ۞5:83
8 وَلَوْ أَنَّنَا வலவ் அன்னனா Wa Lau Annana ۞6:111
9 قَالَ الْمَلَأُ காலல் மலவு Qalal Malao ۞7:88
10 وَاعْلَمُوا வஃலமு Wa A'lamu ۞8:41
11 يَعْتَذِرُونَ யஃததிரூன Yatazeroon ۞9:94
12 وَمَا مِنْ دَابَّةٍ வமாமின் தாப்பத் Wa Mamin Da'abat ۞11:6
13 وَمَا أُبَرِّئُ வமா உபர்ரிவு Wa Ma Ubrioo ۞12:53
14 رُبَمَا ருபமா Rubama ۞15:2
15 سُبْحَانَ الَّذِي ஸுப்ஹானல்லதீ Subhanallazi ۞17:1
16 قَالَ أَلَمْ கால அலம் Qal Alam ۞18:75
17 اقْتَرَبَ இக்தரப Aqtarabo ۞21:1
18 قَدْ أَفْلَحَ கத் அஃப்லஹ Qadd Aflaha ۞23:1
19 وَقَالَ الَّذِينَ வ காலல்லதீன Wa Qalallazina ۞25:21
20 أَمَّنْ خَلَقَ அம்மன் கலக A'man Khala ۞27:60
21 اتْلُ مَا أُوحِيَ உத்லு மா ஊஹி Utlu Ma Oohi ۞29:45
22 وَمَنْ يَقْنُتْ வமய்யக்னுத் Wa Manyaqnut ۞33:31
23 وَمَا لِيَ வமாலிய Wa Mali ۞36:22
24 فَمَنْ أَظْلَمُ ஃபமன் அள்லமு Faman Azlamu ۞39:32
25 إِلَيْهِ يُرَدُّ இலைஹி யுறத்து Elahe Yuruddo ۞41:47
26 حم ஹாமீம் Ha'a Meem ۞46:1
27 قَالَ فَمَا خَطْبُكُمْ கால ஃபமா கத்புகும் Qala Fama Khatbukum ۞51:31
28 قَدْ سَمِعَ اللَّهُ கத் ஸமிஅல்லாஹ் Qadd Sami Allah ۞58:1
29 تَبَارَكَ الَّذِي தபாரகல்லதீ Tabarakallazi ۞67:1
30 عَمَّ يَتَسَاءَلُونَ அம்ம Amma Yatasa'aloon ۞78:1

மன்சில்

முப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் குர்ஆன் ஏழு பிரிவாகவும் சிலரால் பிரிக்கப்பட்டுள்ளது. இது மன்சில் என அழைக்கப்படுகின்றது. இதன் அடையாளம் திருகுர்ஆனின் ஓரங்களில் குறிப்பிடப்படுகின்றன.

ருக்உ

பிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கணக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன.

மக்கீ, மதனீ

திருகுர்ஆனின் வசனங்கள் அவை முகம்மது நபியால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. மெக்காவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மக்கீ எனவும், மதினாவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மதனீ எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன.

திருக்குர்ஆன் ஓதும் முறை

திருக்குர்ஆனை சரியான முறையில், எங்கு எவ்வாறு நிறுத்தி ஓத வேண்டும், நிறுத்திய பின் எவ்வாறு திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என என்பதை அரபி மொழியில் 'தஜ்வீத்' என்பர். திருக்குர்ஆன் 'தஜ்வீத்' முறைப்படி ஓதுவது 'பர்ளு ஐன்' ஆகும் தஜ்வீத்-துடைய கல்வியை படிப்பது 'பர்ளு கிஃபாயா' ஆகும்

குர்ஆன் மொழிபெயர்ப்பு

1647ல் அச்சிடப்பட்ட இலத்தீன் குரான்

அரபு மொழியில் இருக்கும் குர்ஆனின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குர்ஆனை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் உதுமானால் தொகுக்கப்பட்ட குர்ஆனானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது.

இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், மரியம் அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான அல்-பாத்திகா பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குர்ஆனின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும்.[9] ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143இல் இலத்தீன் மொழிக்கு குர்ஆன் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[10] இதன் அச்சுப்பதிப்பு 1543இல் வெளிவந்தது. தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. முதல் ஆங்கில குர்ஆன் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.

தமிழ் குர்ஆன்

தமிழில் முதல் குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ல் வெளிவந்தது.[11] அப்துல் ஹமீத் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது.[12] தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983இல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குர்ஆன் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன.

இசுலாத்தில் குர்ஆனின் முக்கியத்துவம்

குர்ஆன் இசுலாமிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கம் ஆகும். இதில் உள்ளவை இறைவனின் நேரடி வார்த்தைகள் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. உலகின் மிகவும் தூய்மையான, அழிவற்ற, மாற்றமில்லாத ஒரே பொருள் குர்ஆன் என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. மேலும் இது மனிதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்த வந்த கடைசிக் கொடை எனவும் சொல்லப்படுவதுண்டு. குரான் முகம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட நாளாக கருதப்படும் லைலத்துல் கத்ர், இசுலாமிய வணக்க வழிபாட்டின் முக்கிய இரவு ஆகும். ஆயிரம் மாதங்களுக்கு சமமான ஒரு இரவாக இது இசுலாமியர்களால் மதிக்கப்படுகின்றது.[13]

இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக குர்ஆன் திகழ்கின்றது. மனிதனின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் தொடங்கி சட்ட திட்டம் வரை அனைத்திற்குமான ஆதாரக் குறிப்புகள் இதிலிருந்தே பெறப்படுகின்றன. இசுலாமிய சரீஅத் சட்டங்களும் குர்ஆன் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமிய வணக்கத்திலும் குரானின் வசனங்களே படிக்கப்படுகின்றன.

இசுலாமிய கலைகளில் குர்ஆனின் தாக்கம்

இசுலாமியக் கலைகளில், குறிப்பாக இசுலாமிய கட்டடக்கலையில் குர்ஆனின் தாக்கம் அதிகம். மனித மற்றும் விலங்குகளின் சிலைகளை உருவாக்குவதற்கான இதன் தடையை அடுத்து அவ்வாறான சிலைகள் மற்றும் சித்திரங்கள் இல்லாத வகையில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் அலங்காரங்கள் மற்றும் குரானின் வசனங்கள் அந்த கட்டிடங்களில் செதுக்கப்பட்டன. இது புதிய இசுலாமிய கட்டிடக்கலையின் தொடக்கமாக அமைந்தது.

அதே போல தோட்டக்கலையிலும், குர்ஆனின் ஆதிக்கம் இருந்தது. இசுலாமிய கலீபாக்களின் காலத்தில், அவர்களின் அரண்மனைகள், பள்ளிவாயில்கள், சமாதிகள் போன்றவற்றை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை குர்ஆனில் கூறப்படும் சொர்க்கத்தின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டன. இவ்வகையான தோட்ட அமைப்பு முறை பிற்காலத்தில் இசுலாமிய தோட்டக்கலை என அறியப்பட்டு பிரபலமானது. இவை தவிர்த்து, இசுலாமிய எழுத்தணிக்கலை, ஓவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "குரான் 2:252". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013.
  2. "சஹீஹ் புகாரி 1.1.3". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013.
  3. G. Rice (2011). Handbook of Islamic Marketing. p. 38.
  4. "சஹீஹ் புகாரி 6.61.504". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013.
  5. ""Qurʼān" - Encyclopædia Britannica Online". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013.
  6. "சஹீஹ் புகாரி 6.61.509". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013.
  7. "சஹீஹ் புகாரி 6.61.507". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013.
  8. 8.0 8.1 "சஹீஹ் புகாரி 6.61.510". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013.
  9. "monthlycrescent.com". Archived from the original on 29 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Islam: A Thousand Years of Faith and Power. New Haven: Yale University Press. 2002. pp. 42.
  11. Subbiah Muthiah. "Madras: Chennai a 400-year Record of the First City of Modern India".
  12. "மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி (றஹ்)". Archived from the original on 2016-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.
  13. "குரான் - 97:1-5".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குர்ஆன்&oldid=4112511" இலிருந்து மீள்விக்கப்பட்டது