உள்ளடக்கத்துக்குச் செல்

திரியம்பாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரியம்பாவையோடு தொடர்புடைய புகழ்வாய்ந்த தாய்லாந்துப் பேரூஞ்சல்

திரியம்பாவை என்பது, தாய்லாந்து (பழைய சயாம்) நாட்டில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் சைவத் தமிழரின் திருவெம்பாவையின் திரிந்த வடிவம் ஆகும்.[1] இன்று பாங்கொக் நகரில் உள்ள "பிராமணக் கோயில்" என்றழைக்கப்படும் இந்துக் கோயிலில் மட்டும் திரியம்பாவை கொண்டாடப்பட்டு வருகின்றது.

வரலாற்றுச் சான்றுகள்

[தொகு]

தாய்லாந்துக்குக் குடிபெயர்ந்த தமிழ்ப் பிராமணர்களாலேயே திருவெம்பாவை விழா அங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று நம்பப்படுகின்றது. தாய்லாந்தின் பழைமை வாய்ந்த நகரங்களான சுகோதை, அயூத்தியா, சவங்கலொக், ப்சானுலோக் முதலிய இடங்களிலெல்லாம் திரியம்பாவை கொண்டாடப்பட்டதற்கு, பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

கி.பி 1348இல் சுகோதையை ஆண்ட, லிதாய் மன்னனின் அரசியென நம்பப்படும்[2] "நங் நோப்பமாசி" (nang noppamas) எனும் சோதிட அறிஞர், தான் எழுதிய "தாவோ சிறிச்சுலாரக்" (Tao Sri Chulalak) எனும் நூலில், திரியம்பாவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சுகோதையின் அரச குடும்பத்தாரின் ஆலயத்தில் ஆண்டின் முதல் மாதமன்று, திரியம்பாவை கொண்டாடப்பட்டதையும், மக்கள் புத்தாடை பூண்டு அதில் கலந்து கொண்டதையும், அன்று ஊஞ்சல் திருவிழா இடம்பெற்றதையும், அன்றிரவு, சிவபெருமான் மற்றும் நாராய் ஆகியோரின் ஊர்வலம் இடம்பெற்றதையும், அவர் விவரித்துள்ளார்.[3]

பொ.பி1461இல் அயூத்தியாவிலிருந்து சயாம் நாட்டை ஆண்ட "பரம் திரிலோகநாத்" (Baromtrilokanat) மன்னர் காலத்தைய அரசகுடும்ப விதிநூலான "கொட்மந்தியம்பன்" (Kodmonthienban), ஆண்டின் முதல் மாதத்தில், பிராமணர்கள் திரியம்பாவைப் பிரசாதமான நெற்பொரி, மலர்கள் என்பவற்றுடன் அரண்மனையுள் நுழைவதற்கான விதிமுறைகளைச் சொல்கின்றது.[4] 1455இல் வெளியிடப்பட்ட "கொட்மேய் சட்கின"(Kodmay Sadkina) விதிநூல், ஊஞ்சற் திருவிழாவுக்குப் பொறுப்பாக இருந்த "குன் புரோமசாமாய்" எனும் பிராமணரைப் பற்றிச் சொல்கின்றது. இன்னொரு குறிப்பில், நாராய் மன்னன் (பொ.பி 1656-1688) திரியம்பாவையில், சிவனும் திருமாலும் கலந்துகொண்ட ஊர்வலத்தைச் சிறப்பிக்க அரண்மனையிலிருந்து கலந்துகொண்டதைச் சொல்கின்றது.[5]

சுகோதையின் இரட்டை நகராகச் சொல்லப்படும்[6] "சவங்கலோக்"கிலும் திரியம்பாவை கொண்டாடப்பட்டிருக்கின்றது. "சிறிசட்சனாலை" என்ற பெயரில் அங்கு ஓர் புதிய நகரை எழுப்பியபோது, பிராமணர்கள் ஏழு நாள் பத்தியம் காத்து, திரியம்பாவை நோன்பு நோற்றதாக ஓரு குறிப்பு சொல்கின்றது.[7] இக்குறிப்புகள் மூலம் திரியம்பாவையானது அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தாய்லாந்தில் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது என நம்பலாம்.

பழைய மரபுகள்

[தொகு]

ஆண்டின் முதல் மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாள் முதல் பத்து நாட்கள், சிவன் கயிலையிலிருந்து உலகுக்கு இறங்கி வருவதால், அவரை வரவேற்பதற்காக பத்து நாட்கள் எடுக்கப்பட்ட விழாவே சயாம் நாட்டின் திரியம்பாவை விழாவாகும்.[8] சிவன் நீங்கும் பத்தாம் நாளன்று, திருமால் உலகுக்கு வருவதாகவும், அவர் இன்னும் ஐந்து நாட்கள் தங்கியிருப்பதாகவும் அவர்கள் நம்பினர்.

திரியம்பாவையில், மரக்கறிகள், கரும்பு, பழங்கள், மலர்கள் சேர்த்து தாய்லாந்துப் பிராமணர்கள் சிவனை வழிபட்டனர். சங்கு ஊதுவதும் 'பாண்டோ' எனும் உடுக்கையை ஒலிப்பதும், திருவெம்பாவை ஓதுவதும், மன்னனால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் சிவனாக அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலாடுவதும்.[9] இவ்வழிபாட்டின் போது இடம்பெற்றது. விழாவின் ஒன்பதாம் நாள் (பௌர்ணமி) அன்று, சிவனும் கணபதியும் ஆலயத்தைச் சுற்றி திருவுலா வந்தனர். அடுத்த நாளிலிருந்து ஐந்து நாட்கள் திருமாலுக்கு திருவீதியுலா இடம்பெற்றதுடன், பௌர்ணமி அன்று அவர்கள் படைக்கும் உணவு பழுதடைந்தால், திருமாலின் கோபத்துக்கஞ்சி, அவருக்கான வீதியுலா நிறுத்தப்பட்டது.[10] இவ்வாறு பதினான்கு நாட்கள், திரியம்பாவை கொண்டாடப்பட்டது.

சயாமிய "திரியம்பாவையில்" சிவன், திருமால் இருவருமே முதன்மைப்படுத்தப்பட்ட போதும், வழக்கமான இந்துப்பண்பாட்டில் கூறப்படும் சிவன், திருமால் ஆகியோரின் இயல்புகள், இங்கு இருவருக்கும் எதிர்மறையாகக் கருத்திற்கொள்ளப்படுவதை காணலாம். எவ்வாறாயினும், பல இந்திய ஆய்வாளர்கள் கூறுவது போல், திரியம்பாவையின் போது, திருமால் முன்னிலையில் திருப்பாவை பாடப்பட்டதில்லை.[11]

திருவெம்பாவையும் திரியம்பாவையும்

[தொகு]

திருவெம்பாவையானது, நல்ல கணவன் வேண்டி இளம்பெண்கள் நோற்ற நோன்பாக இருக்க, திரியம்பாவையோ, சிவனை மகிழ்விப்பதற்காகவும், சிறுபான்மையாக மழைவளம் வேண்டியும் கொண்டாடப்பட்டது. திரியம்பாவையானது தாய்லாந்தின் பன்னிரெண்டு அரச விழாக்களில் ஒன்றாக[12] விளங்குவதுடன், அதனுடன் இணைந்த ஊஞ்சல் திருவிழா அண்மைக்காலம் வரை சிறப்பாக இடம்பெற்று வந்திருக்கின்றது. திருவெம்பாவை மார்கழித் திருவாதிரைக்கு ஒன்பது நாட்கள் முன் தொடங்கி, பத்து நாட்கள் இடம்பெறுகின்றது. திரியம்பாவை, தாய் பஞ்சாங்கத்தின் படி, முதலாம் மாதம் (தமிழ் கார்த்திகை, மார்கழி மாதங்களில்) பூரணைக்கு முன் ஒன்பது நாட்கள் தொடங்கி, பத்து நாட்கள் இடம்பெறுகின்றது. இரு நோன்புகளிலும் மாணிக்கவாசகர் அருளிய தமிழ்த் திருவெம்பாவை இருபது பாடல்கள் பாடப்பட்டன என்பதே முக்கியமான ஒற்றுமை ஆகும்.

திரியம்பாவை

[தொகு]

இன்று திரியம்பாவையானது, பாங்கொக் நகரிலுள்ள "தேவசாதன்" என்றழைக்கப்படும் "பிராமணக் கோயி"லிலேயே இடம்பெற்று வருகின்றது. இங்கு "பிராமணர்கள்" என்ற பதம், இந்தியப் பொதுப் பயன்பாட்டில் இருப்பது போல், குல அடையாளமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.[13] தாய்லாந்து பௌத்தத்திற்கு இசைவாக்கமடைந்த பூசாரிகள் என்ற நிலையிலேயே இங்கு "பிராமணர்" என்று அழைக்கப்படும் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

தாய் நாட்காட்டியின் படி, முதலாம் மாதம் ஏழாம் நாளிலிருந்து, பத்து நாட்கள் திரியம்பாவை கொண்டாடப்பட்டு வருகின்றது. இங்கு பாடப்படும் தமிழ்த் திருவெம்பாவையானது நாலடி கொண்ட இருபது பாடல்களையும் இரு பாகங்களையும் கொண்டிருக்கின்றது. ஒன்று முதல் பதினொன்று வரையான பாடல்கள் "பொத்முறை யாய்" என்றும், மீதி ஒன்பதும் "பொத்முறை க்ளாங்" என்றும் அழைக்கப்படுகின்றன. பொத்முறை யாய், பிராமணக் கோயிலின் சிவன் சன்னதியிலும், பொத்முறை க்ளாங், திருமால் சன்னதியிலும் பாடப்படுகின்றன. பொருட்சிதைவும் சொற்சிதைவும் காணப்படும் போதும், திரியம்பாவை இருபது பாடல்களும், மணிவாசகரின் திருவெம்பாவையே என்பதில் எந்த ஐயமும் இல்லை.[14]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Rāma Karaṇa Śarmā, ‎Radhavallabh Tripathi (2008) "Glory of Sanskrit tradition" p.591
  2. Dawn Rooney(2008) "Ancient Sukhothai: Thailand's Cultural Heritage" P.37
  3. Rajanupab Prince Damrong (1982) "Praraja Kranya Nusorn and Nung Nobpamass" p.316
  4. Muang Boran journal, Vol 05, (1977) p.95
  5. Muang Boran journal, ibid, pp.97,98
  6. Tanistha Dansilp, ‎Michael Freeman (2002) "Things Thai" p.17
  7. Muang Boran journal, ibid, pp.95
  8. Pranee Liamputtong (2014) "Contemporary Socio-Cultural and Political Perspectives in Thailand" P.43
  9. Wales Quatrich (1969) "Siamese State Ceremonies:Their history and Function" p.220-246
  10. Suwit, Thongsrigeat (1981) "Kansuksa Vikraw Itiphon Khong Sasanaphram Time to Pruttikam Tang Sasanaput Naichangvat Nakornrajasrima" pp.58-64
  11. Pannipa Kaveetanathum, (1995) "A comparative study of Tiruvempavai: Tradition in Thailand and Tamil Nadu in Historical and musical contexts" pp. 66
  12. Rāma Karaṇa Śarmā, ‎Radhavallabh Tripathi, ibid, p.591
  13. Pannipa Kaveetanathum, ibid,pp.117-132
  14. Pannipa Kaveetanathum, ibid,pp.170-197

உசாத்துணை

[தொகு]

Pannipa Kaveetanathum, (1995) "A comparative study of Tiruvempavai: Tradition in Thailand and Tamil Nadu in Historical and musical contexts"

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரியம்பாவை&oldid=2753658" இலிருந்து மீள்விக்கப்பட்டது