உள்ளடக்கத்துக்குச் செல்

தியோடோர் மைமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோடோர் ஆரோல்டு மைமான்
பிறப்பு(1927-07-11)சூலை 11, 1927
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
இறப்புமே 5, 2007(2007-05-05) (அகவை 79)
வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா
குடியுரிமைஅமெரிக்கக் கூட்டுநாடுகள்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஹியூஸ் ஆய்வகம்
குவாண்டாட்ரான் (Quantatron)
கல்வி கற்ற இடங்கள்கொலராடோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசீரொளி
விருதுகள்வுல்ஃவ் பரிசு (1983)
Japan Prize (1987)

தியோடோர் ஆரோல்டு "டெட்" மைமான் (Theodore Harold "Ted" Maiman) (ஜூலை 11, 1927 - மே 5, 2007) ஓர் அமெரிக்க இயற்பியலாளர். இவர் 1960 இல் சீரொளி (லேசர்) யைக் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டியவர்[1]. 1983 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். லேசர் ஆடிசி என்னும் நூலை எழுதினார்.

மைமான் லாஸ் ஏஞ்சலிசில் 1927 ஆம் ஆண்டு ஜூலை 11, 1927 பிறந்தார். தன் பள்ளி நாட்களில் மின் கருவிகளையும் வானொலி வாங்கிகளை செப்பனிட்டும் பணம் ஈட்டி அதைப் பயன்படுத்தி கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியல் துறையில் இளங்கலை (B.S.) படிப்பைத் துவங்கினார். 1949 இல் பட்டம் பெற்றபின், மேற்படிப்புக்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மின்னியல் துறையில் முதுநிலை பட்டத்தை 1951 இலும், முனைவர் ஆராய்ச்சிப் பட்டத்தை 1955 இலும் பெற்றார். அவருடைய முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்பு, செய்முறை இயற்பியலில், வில்லிசு லாம்பு (Willis Lamb) வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது. தன் முனைவர் பட்டப் படிப்பில் ஆற்றலால் தூண்டப்பட்ட ஹீலியம் அணுக்களின் எதிர்மின்னிகளின் நுட்ப ஆற்றல் நிலை மாற்றங்களை (fine structure) நுண்ணலை-ஒளியலை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தார்.

மைமானின் சீரொளிக் கருவியை முனைவர் ரால்ஃவ் எல். அட்சின்சன் ( Dr. Ralph L. Hutcheson) வளர்த்துத் தந்த சிகப்புக்கல் அல்லது கெம்பு என்னும் படிகத்தைக் கொண்டு உருவாக்கி மே 16, 1960 இல் வெற்றிகரமாக இயக்கிப் புதுமை படைத்தார். அப்பொழுது இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள மாலிபு என்னும் இடத்தில் உள்ள ஹியூஸ் ஆய்வகத்தில் செய்தார்.

சீரொளியை யார் கண்டுபிடித்தார்கள் என்பதில் கார்டன் கூல்டு (Gordon Gould ) பல வழக்குகள் ஏற்பட்டு, கடைசியில் கார்டன் கூல்டு என்பார்தான் முதலில் வகுத்து (design) கண்டுபிடித்தார் என்றுகூறி அவருடைய காப்புரிமங்களுக்கே முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன, ஆனால் மைமானுடைய காப்புரிமம் மற்ரும் அவருடைய ஆய்வின் பயனாகவும் அவர்தான் முதன்முதலில் சீரொளியை செய்து காட்டினார் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லாமல் முடிவாகியது.

ஹியூஸ் ஆய்வகத்தை விட்டுச் சென்றபின் குவாண்ட்ரான் என்னும் நிறுவனத்தில் சேர்ந்து அங்கு லேசர் மேம்பாட்டுப்பணிகளைச் செய்து வந்தார். 1962 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு முழுச்சொந்தமான, புதிதாக நிறுவப்பட்ட, கோராட் கார்ப்பொரேசனின் (Korad Corporation) தலைவராக (president) பொறுப்பேற்றார். பின்னர் 1968 இல் மைமான் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இவருடைய லேசர் கண்டுபிடிப்புக்காக இருமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் எனினும் இவர் அப்பரிசைப் பெறவில்லை. அமெரிக்காவின் தேசிய .அறிவியல் உயர்கல்விக்கழகம், தேசிய பொறியியல் உயர்கல்விக்கழகம் ( National Academies of Science and Engineering) ஆகிய இரண்டிலும் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்[2] . 1966 இல் ஆலிவர் இ. பக்லி பரிசும் (Oliver E. Buckley Prize) 1983/84 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். பல பல்கலைக்கழகங்கள் கௌரவ (பெருமை) முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப் படுத்தின. அவற்றுள் கடைசியாக 2002 இல் கனடாவில் வான்கூவரில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழம் பெருமை முனைவர் பட்டம் அளித்தது.

மைமான் சிஸ்டெமிக் மாஸ்டோசைட்டோசிஸ் (systemic mastocytosis) நிலையால் மே 5, 2007 இல் கனடாவில் உள்ள வான்கூவரில் இறந்தார். அங்கு இவர் தன் மனைவியுடன் வாழ்ந்திருந்தார்[3]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Johnson, John, Jr. (May 11, 2007). Theodore H. Maiman, 79; scientist built the first laser. Los Angeles Times
  2. Douglas Martin (11 May 2007). "Maiman built world's first laser". The New York Times இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110613212217/http://www.presstelegram.com/news/ci_5875493. 
  3. Douglas, Martin (May 11, 2007). Theodore Maiman, 79, Dies; Demonstrated First Laser த நியூயார்க் டைம்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோடோர்_மைமான்&oldid=3925228" இலிருந்து மீள்விக்கப்பட்டது