திமிங்கில எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போத்தலில் அடைக்கப்பட்ட திமிங்கில எண்ணெய்
விளக்கில் திமிங்கில எண்ணெய்

திமிங்கில எண்ணெய் (whale oil) என்பது திமிங்கில கொழுப்புக்களில் பெறப்படும் எண்ணெய் ஆகும்.[1] [எண்ணெய்த் திமிங்கிலம்|எண்ணெய்த் திமிங்கிலத்தின்]] தலைக்குழிவுகளில் இருந்து இசுப்பேர்ம் எண்ணெய் எனப்படும் சிறப்பு வகை எண்ணெய் பெறப்படுகின்றது. இது வேதியல் அடிப்படையில் மற்ற திமிங்கில எண்ணெய்களில் இருந்து வேறுபடுகிறது. பெரும்பாலும் திரவ மெழுகால் ஆன இசுப்பேர்ம் எண்ணெய் அதிக விலையை கொண்டது.

தயாரிப்பும் பயன்களும்[தொகு]

ஆரம்பகால தொழிற் சங்கங்கள்  சவர்க்காரம் தயாரிப்பதற்கும், எண்ணெய் விளக்குகளை எரியச் செய்யவும் திமிங்கில எண்ணெயை பயன்படுத்தின. பின்பு இருபதாம் நூற்றாண்டுகளில் செயற்கை வெண்ணெய் தயாரிக்க திமிங்கில எண்ணெய் பயன்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் உச்சத்தில் இருந்த திமிங்கில எண்ணெய்களின் பயன்பாடு இருபதாம் நூற்றாண்டில் பெற்றோலிய தொழில் மற்றும் தாவர எண்ணெய்களின் வணிக வளர்ச்சிகளினால் கணிசமாக குறைந்தது. 21 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான நாடுகள் திமிங்கில வேட்டையை தடை செய்துள்ள நிலையில் திமிங்கில எண்ணெயின் விற்பனை மற்றும் பயன்பாடுகள் நடைமுறையில் நிறுத்தப்பட்டுள்ளது.

வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்களின் கொழுப்புக்களை கொதிக்கச் செய்தல் மூலம் திமிங்கில எண்ணெய் பெறப்பட்டது. [2]கடற்கரைகளில் பிடிக்கப்பட்டவைகள் அவ்விடத்திலேயே வெட்டப்பட்டு கொதித்தல் மேற்கொள்ளப்பட்டது. நீண்ட ஆழ்கடல் திமிங்கல வேட்டை பயணங்களின் போது வேட்டையாடப்படுபவை  கப்பலிலேயே கொதித்தல் செய்யப்பட்டது.  அப்புறப்படுத்தப்படும்  சடலங்கள் சுறாக்களுக்கும், கடல் பறவைகளுக்கும் உணவாகும்.

பலீன் திமிங்கிலங்களின் எண்ணெய் ட்ரைகிளிசரைட்களையும், பற்திமிங்கிலங்களின் எண்ணெய் மெழுகு எசுத்தரினையும் பிரத்தியேகமாக கொண்டுள்ளன. [3]போவ்ஹேட் திமிங்கிலம் மற்றும் வலது திமிங்கிலங்களில் இருந்து உயர்தர எண்ணெயை பெற முடிவதாலும், அவற்றின் எலும்புகளுக்காகவும் முக்கிய இலக்குகளாக கருதப்பட்டன. [4]திமிங்கிலங்கள் வேட்டைகளின் அதிகரிப்பால் அழிந்து செல்லும் அபாயத்திற்கு உட்பட்டன.

வேதியல் அமைப்பு[தொகு]

திமிங்கில எண்ணெய் தெளிவானது, குறைந்த பாகுமையை கொண்டது. (ஆலிவ் எண்ணெயை விடக் குறைவு)[5], திமிங்கில கொழுப்புகளின் தரம் மற்றும் சுத்திரிகரிப்பு என்பவற்றை பொறுத்து பிரகாசமான தேன் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரையிலான நிறங்களில் காணப்படும். மீன் வாசனை கொண்டது. ஹைட்ரஜனேற்றப்படும் போது திடமாகவும், வெள்ளை நிறமாகவும் மாறும். மேலும் சுவையிலும், மணத்திலும் மாற்றம் ஏற்படும்.[6][7]

திமிங்கில எண்ணெயின் வகைகள் திமிங்கிலங்களின் இனங்களை பொறுத்தும், வேட்டையாடப்பட்டு பதனிடப்படும் முறைகளினாலும் வேறுபடும். திமிங்கில எண்ணெய் கலவை பிரதானமாக ட்ரைகிளிசரைட்களால் ஆனது. [8]பற்திமிங்கிலங்களின் எண்ணெயில் கணிசமான அளவில் மெழுகு எசுத்தர்கள் காணப்படும். (குறிப்பாக இசுப்பேர்ம் திமிங்கிலத்தின் எண்ணெய்)[3]

பயன்பாடுகள்[தொகு]

திமிங்கில எண்ணெயிற்கு பதிலாக மாற்றுகள் பயன்படுத்தப்பட்டதாலும், சுற்று சூழல் சட்டங்களினாலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திமிங்கில எண்ணெயின் பயன்பாடு சரிவடைந்தது. 1986 ஆம் ஆண்டில் சர்வதேச திமிங்கில ஆணையம் திமிங்கில வேட்டைக்கான தடையை அறிவித்தது. இன்று வரை திமிங்கில எண்ணெய் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது. திமிங்கில எண்ணெய் விளக்கு எரிக்கும் எண்ணெயாக பயன்பட்டது . 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதற்கு மாற்றாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. [9]ஹைட்ரஜனேற்றம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் செயற்கை வெண்ணெய் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது பின் காய்கறி எண்ணெய் மாற்றாக உபயோகிக்கப்பட்டது[6]. திமிங்கில எண்ணெய் முதலாம் உலகப் போரின் போது குளிரினாலும், சுகாதாரமற்ற நிலையினாலும் ஏற்படும்  டிரன்ச் புட் (trench foot) என்ற மருத்துவ நிலையிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்காக காலாட்படையினரின் வெற்றுப் பாதங்களில் தேய்க்கப்பட்டது.[10]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிங்கில_எண்ணெய்&oldid=2814917" இருந்து மீள்விக்கப்பட்டது