திபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திபு என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இந்த நகரம் பிரபலமான சுற்றுலா மலைவாசஸ்தலமாகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

திபு என்ற வார்த்தைக்கான பொருள் திமாசா மொழியில் வெள்ளை நீர் என்பதாகும். திமாசா மொழியில் தி என்றால் நீர் என்றும், பு என்றால் வெள்ளை என்றும் பொருள்படும். வரலாற்று ரீதியாக திபுவில் உள்ள நீரோடை மழைக்காலத்தில் அதிக அளவு வண்டலைக் கொண்டு செல்வதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றது. அதனால் வெள்ளை நீர் பெயரை பெற்றதாக கருதப்படுகின்றது.

புவியியல்[தொகு]

திபு 25.83 ° வடக்கு 93.43 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 186 மீட்டர் (610 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. குவாஹாத்தியில் இருந்து சாலை வழியாக சுமார் 270 கி.மீ தூரத்தையும், தொடருந்தின் மூலம் 213 கி.மீ. தூரத்தையும் கொண்டுள்ளது. இந்த நகரம் ஒரு மலையில் அழகாக அமைந்துள்ளது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி திபுவின் மக்கட் தொகை 63,654 ஆகும்.[2] சனத் தொகையின் அடிப்படையில் இது இரண்டாம் வகுப்பு நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. (50,000 முதல் 99,999 மக்கள் வரை). ஆண்கள் மக்கட் தொகையில் 52% வீதமும், பெண்கள் 48% வீதமும் காணப்படுகின்றனர்.

தீபுவின் சராசரி கல்வியறிவு விகிதம் 90% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 94% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 86% வீதமாகவும் உள்ளது.

திபுவின் மக்கட் தொகையில் 13% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள். திபுவில் வாழும் முக்கிய பழங்குடி சமூகங்கள் கர்பி , திமாசா கச்சாரி , போடோ கச்சாரி , கோச் (ராஜ்பாங்சி) கச்சாரி , கரோ கச்சாரி , ரெங்மா நாகா மற்றும் ரபா என்பனவாகும்.

கலாச்சாரம்[தொகு]

இந்த நகரம் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த பல பழங்குடி சமூகங்களையும், பிற சமூகங்களையும் கொண்டுள்ளது. கர்பிஸ், ரெங்மா, திமாசா கச்சாரி, திவா கச்சாரி, போடோ கச்சாரி, கரோ கச்சாரி, ரபா ஆகியவை மாவட்டத்தின் முக்கிய பழங்குடியினர்களாக உள்ளனர். நகரில் அவர்களுக்கு மத்தியில் அமைதியான மற்றும் இணக்கமான சகவாழ்வு பேணப்படுகின்றது. இந்த நகரில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் ஒரு குருத்வாரா என்பவைகள் காணப்படுகின்றன. இந்த நகரம் அனைத்து முக்கிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. ரோங்கர் , புஷு-டிமா , வாங்கலா , பிஹு , சிக்புய்-ருய், கிறிஸ்துமஸ் , துர்கா பூஜை , தீபாவளி , பைக்கோ மற்றும் பிற விழாக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

பயிர்நூல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம் மற்றும் கைவினை கலாச்சார மையம்[தொகு]

இது சந்தையின் புறநகரில் புதிதாக கட்டப்பட்ட தோட்டம். இது பூங்கா, சிறுவர் பூங்கா மற்றும் ஒரு திறந்த நிலை அரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காவும், மருத்துவ தோட்டமும்[தொகு]

திபு-மஞ்சா சாலையில் அமைந்துள்ள இது வனத்துறையால் அமைக்கப்பட்ட மிக அழகான தோட்டமாகும். இந்த பூங்காவில் ஏராளமான இயற்கை காட்சிகள், மதிப்புமிக்க மரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன.

தரலங்சோ[தொகு]

இது தீபுவின் மையத்தில் நிறுவப்பட்ட ஜனநாயக கலாச்சார அமைப்பாக விளங்கும் "கர்பி கலாச்சார சங்கத்தின்" தலைமையகம் இங்கு நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. கர்பி இளைஞர் விழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15 முதல் 19 வரை தாரலாங்சோவில் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது இடம்பெறும் கலாச்சார யாத்திரைக்கான இடமாகும்.

தாவரவியல் பூங்கா[தொகு]

திபுவில் இருந்து லும்டிங் சாலையில் சுமார் 7 கி.மீ தூரத்தில், வனத்தின் மேற்கு பிரிவில் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த தோட்டம் பல மதிப்புமிக்க மரங்கள், மூலிகைகள் மற்றும் மல்லிகைகளால் நிறைந்துள்ளது.

பயிர்நூல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம்[தொகு]

இது ஒரு பழைய பயிர்நூல் முறைப்படி அமைந்துள்ள தோட்டமாகும். நகர எல்லைக்கு அருகில் அமைதியான சாலையில் அமைந்துள்ளது.

ரோங்பார்பி ரோங்பே சிலை[தொகு]

நகரத்தின் நடுவில் ரோங்பார்பி ரோங்பேவின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக கிளர்ந்தெழுந்த முதல் பெண் ரோங்பார்பி ரோங்பே என்பவர் ஆவார்.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திபு&oldid=3587200" இருந்து மீள்விக்கப்பட்டது