தினகரன் தாக்குதல் வழக்கு
தினகரன் தாக்குதல் வழக்கு (Dinakaran attack case) என்பது தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகத்தின் மீது 2007 மே 9 அன்று நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலைக் குறிப்பதாகும். இந்த தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் தினகரன் நாளிதழின் மூன்று ஊழியர்கள் இறந்தனர்.[1] திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான மு. கருணாநிதியின் அரசியல் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து இப்பகுதியில் வன்முறை தலைவிரித்தாடியது, பத்திரிகை அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பத்திரிக்கையின், கணிணி வடிவமைப்புப் பிரிவில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் மற்றும் தனியார் பாதுகாப்புக் காவலர் ஒருவர் என மூவர் இறந்தனர். விசாரணை நடத்திய நடுவண் புலனாய்வுச் செயலக (சிபிஐ) அதிகாரிகள், 17 பேர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் மாவட்ட நீதிமன்றம் விடுதலைச் செய்தது. தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையினால், மாறன் சகோதரர்களுக்கும் திமுகவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது, அதன் விளைவாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மத்திய அமைச்சரவையில் இருந்த தயாநிதி மாறன் பதவி விலகினார்.
பின்னணி
[தொகு]திமுக தலைவரான மு. கருணாநிதியின் மகன்களான மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. அழகிரி ஆகியோர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு தொடர்பாக தொடர்ச்சியான பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 2007 ஆண்டு மே மாதத்தில் ஏ. சி. நீல்சன் நிறுவனம் நடத்திய தொடர் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை தினகரன் செய்தித்தாள் வெளியிட்ட போது, அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தி. மு. க. தலைவரின் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டது, அதில் ஸ்டாலினை 70% பேர் ஆதரிப்பதாகவும், அழகிரிக்கு வெறும் 2% ஆதரவு உள்ளதாகவும் (அடுத்து 2% பேரின் ஆதரவு கருணாநிதியின் மகள் கனிமொழிபெற்றார்)[2] என வெளியிட்டது. இந்த நாளிதழ் சன் குழுமத்தைச் சேர்ந்தது. இக்குழுமத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன், கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறனின் மகனும், தி.மு.க. அரசியில்வாதியுமான தயாநிதி மாறனின் அண்ணனும் ஆவார்.
நிகழ்வு
[தொகு]இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டதையடுத்து 2007, மே 9 அன்று அழகிரியின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக கமுதி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் , தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.[3] மதுரையில், அவரின் ஆதரவாளர்கள் தினகரன் செய்தித்தாள்களின் பிரதிகளை எரித்து, மாறன் சகோதரர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கற்களை வீசி, ஏழு பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.[4] மதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் கீழ் கலவரத் தடுப்புக் காவலர்களின் ஒரு குழுவானது, ஊடக குழுமத்தின் அலுவலகங்களுக்கு வெளியே பாதுகாப்பப் பணியில் ஈடுபட்டனர். சன் குழுமத்தைச் சார்ந்த தினகரன், சன் தொலைக்காட்சி மற்றும் தமிழ் முரசு ஆகியவற்றின் அலுவலகங்கள் மீது அங்கு கூடிய குழு ஒன்று காவல் துறையினரின் முன்னிலையில், கற்களை வீசியது. மேலும் அவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் வீசி கட்டிடத்திற்கு தீ வைத்தனர், இதன் விளைவாக இரண்டு ஊழியர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு காவலர் உட்பட மூவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தனர்.
இதன்பிறகு பத்திரிகை ஊழியர்கள், சென்னை மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு, இந்த நிகழ்வுக்கு காரணமான அழகிரியை கைது செய்யாமல், காவல்துறையினர் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் இருந்ததுதாக குற்றம் சாட்டினர்.[5]
வழக்கு
[தொகு]இந்த குற்றம் தொடர்பாக திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனால் அப்போதைய திமுக அரசு பின்னர் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தது. விசாரணை நடத்திய நடுவண் புலனாய்வுச் செயலக (சிபிஐ) அதிகாரிகள், 17 பேர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் 2009 திணம்பர் 9 அன்று மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனால் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் அரசுத் தரப்பு இருந்ததால், கடும் கண்டனங்கள் எழவே, 2010 ஆம் ஆண்டு 118 நாள் தாமதத்திற்குப் பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ மேல் முறையீடு செய்தது.[6] மேலும் வன்முறையில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது அட்டாக் பாண்டி, பிரபு என்கிற ஆரோக்கியப் பிரபு, விஜய பாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா, ஆகிய ஒன்பது பேருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் அபராதமும் விதித்தது. மேலும் இந்த வழக்கில் 17வது குற்றவாளியான தமிழக காவல்துறையின் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பியான வி. ராஜாராமுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 217 (பொது ஊழியராக இருக்கும் நபர், சட்டத்துக்கு கீழ்படியாத நபர்களை உள் நோக்கத்துடன் காப்பாற்றுதல்) பிரிவில் ஒரு ஆண்டு கடுங்காவல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 221 (பொது ஊழியராக இருந்துகொண்டு வேண்டும் என்றே ஒருவர் தப்பிக்க துணையாக இருத்தல்) என்ற பிரிவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "3 people killed in Dinakaran attack". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. PTI. 9 May 2007 இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130722211733/http://articles.timesofindia.indiatimes.com/2007-05-09/india/27884568_1_m-k-azhagiri-security-personnel-dmk. பார்த்த நாள்: 22 July 2013.
- ↑ S. Vijay Kumar (10 May 2007). "3 killed as newspaper office is set on fire". The Hindu. http://www.thehindu.com/todays-paper/3-killed-as-newspaper-office-is-set-on-fire/article1840356.ece. பார்த்த நாள்: 22 July 2013.
- ↑ "DMK activists set fire to Tamil daily office, 1 killed". The Times of India. PTI. 9 May 2007 இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130722211733/http://articles.timesofindia.indiatimes.com/2007-05-09/india/27887875_1_newspaper-office-dmk-tamil-nadu. பார்த்த நாள்: 22 July 2013.
- ↑ "மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்:3 பேர் பலி- 7 பஸ்களுக்கு தீ வைப்பு" (in Tamil). OneIndia Tamil. 9 May 2007. பார்க்கப்பட்ட நாள் 22 July 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Special Correspondent (10 May 2007). "Police blamed for inaction". The Hindu. http://www.thehindu.com/todays-paper/police-blamed-for-inaction/article1840354.ece. பார்த்த நாள்: 22 July 2013.
- ↑ "மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு-அப்பீல் மனு நாளை விசாரணை". செய்தி. ஒன் இந்தியா. 29 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2018.
- ↑ கி. மகராஜன் (மார்ச் 26 2019). "மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை". இந்து தமிழ்: 16.