திங்குபுச்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திங்குபுச்சே (Dingboche)

திங்குபுச்சே (Dingboche, दिङबोचे) 27°53′N 86°49′E / 27.883°N 86.817°E / 27.883; 86.817 என்னும் ஊர் நேபாள நாட்டில் இமய மலைப்பகுதியில் வடகிழக்கே உள்ள கும்புப் பகுதியில் சுக்குக்குங்கு பள்ளத்தாக்கில் உள்ளது. இவ்வூரின் மக்கள் தொகை ஏறத்தாழ 200 பேர் என 2011 ஆண்டுக்கான கணக்கெடுப்பு குறிக்கின்றது. இவ்வூர் கடல்மட்டத்திலிருந்து 4,530 மீட்டர் (14,800 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

சுற்றுலா[தொகு]

திங்குபுச்சே கரட்டுநடை உலாவுநர்களுக்கும் மலையேறிகளுக்கும் பிடித்தமான இடம். எவரெசுட்டு முகட்டிற்கும், அமா தபலாம், இமுஞ்சாட்ஃசே (Imja Tse; Tse என்றால் முகடு அல்லது சிகரம் எனப்பொருள்) ஆகிய மலைமுகட்டை நோக்கிப் போவோருக்கு இவ்விடம் உகந்த தங்குமிடம். உயரச்சூழலுக்கு பழக்கப்படுத்திக்கொள்ள பெரும்பாலும் இரண்டு இரவு இங்கே தங்குவார்கள்[1]

இவ்வூர் சுற்றுலா வருகையர்களை நம்பி இருக்கின்றது. மலையேறிகள் விடுதிகளில் தங்குவதும், கூடாரமடித்துத் தங்குவதும் பரக்கக் காணக்கூடியது. இமுஞ்சா ஆறு (Imja River) இவ்வூருக்குக் கிழக்காகப் பாய்கின்றது.[2]

ஓர் உலங்கு வானூர்தி (எலிக்காட்டர்) இறங்கு தளம் இமுஞ்சா ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. உலகின் மிக உயரத்தில் அமைந்த பில்லியர்டு விளையாட்டு அரங்கங்களில் ஒன்றும் இங்குள்ளது.

இமுஞ்சா ஆற்றின் அருகே ஒரு சிறிய தூபி
தபோச்சே மலை பின்புலத்தில் இருக்க ஒரு தூபி

திங்குபுச்சேயின் சிறப்பான அமைப்புகளில் ஒன்று பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெவ்வேறு அளவிலான கல்லால் ஆன சுவர் அமைக்கப்பட்டிருத்தல். இது பள்ளத்தாக்கு முழுவதையும் உள்ளடக்கியதாகவிருக்கின்றது. நிலத்தை உழ இந்தக் கல்லால ஆன சுவரில் இருந்து கல்லை எடுத்து குவித்து இருக்கின்றார்கள்.

போக்குவரத்து[தொகு]

நாமிச்சே பசார் அல்லது தெங்குபுச்சேயில் இருந்து வரும்பொழுது திங்குபுச்சேயே பெரிச்சேயைவிட நல்ல தேர்வு. இங்கு நல்ல கதிரொளியிருப்பதும், கும்புப்பள்ளத்தாக்கிலிருந்து குளிர்க்காற்றில்லாமல் இருப்பதும் சிறப்பானது. ஊரின் தேவைக்கு ஏற்ற பொருள்களை எடுத்து வருவதற்கும், ஊரின் விளைபொருள்களை எடுத்துச்செல்வதற்கும் பெரும்பாலான போக்குவரத்துகள் கவரிமா (yak), அல்லது கோவேறு கழுதை அல்லது கால்நடையாகச் சுமந்து செல்வதுதான்[3]

தட்பவெப்பநிலை[தொகு]

திங்குபுச்சே மழையும் குளிர்ந்த கோடையும், உலர்ந்த குளிர்ந்த குளிர்காலமும் கொண்டது. இவ்விடத்தின் உயரமும் கோடையில் பருவ மழையும் தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்துகின்றது. இளவேனில் காலத்திலும் (மார்ச்சு-ஏப்பிரல்), இலையுதிர்காலத்திலும் (அக்டோபர்-நவம்பர்) ஏறுவது சிறந்த்து, ஏனெனில் நல்ல வெப்பநிலையும், மலைப்பகுதியில் காணுந்தொலைவும் நன்றாகவிருக்கும். குளிர்காலத்தில் பல விடுதிகள் மூடியிருக்கும். மிகுந்த குளிராகவும் இருக்கும். நீர் உறையும் வெப்பநிலைக்குக் கீழாகவே பெரும்பாலும் இருக்கும். ஆகவே மலையேற்றத்துக்குச் சிறந்த காலம் அன்று.

படக்காட்சியகம்[தொகு]

இரவில் திங்குபுச்சே
எவரெசுட்டு அடிவார முகாம் பகுதியில் (உயரம் 5,364 மீட்டர்) இருந்து காணும் அகலக்காட்சி. தெங்குபுச்சே முதல் திங்குபுச்சே வரை.


குறிப்புகள்[தொகு]

  1. Muza, SR; Fulco, CS; Cymerman, A (2004). "Altitude Acclimatization Guide.". US Army Research Inst. of Environmental Medicine Thermal and Mountain Medicine Division Technical Report (USARIEM-TN-04-05). http://archive.rubicon-foundation.org/7616 பரணிடப்பட்டது 2009-04-23 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2009-03-05
  2. Bradley, Mayhew; "Trekking in the Nepal Himalaya"; (2009); 9 edição; p 97 (map) and pp 117-118; Lonely Planet; ISBN 978-1-74104-188-0.
  3. Shrestha, Vinos Prasad; “Concise Geography of Nepal”; (2007); Mandal Publications; ISBN 978-99946-55-04-5.

வெளியிணைப்புகள்[தொகு]

(ஆங்கிலம்) Travelpod Dingboche[தொடர்பிழந்த இணைப்பு] வார்ப்புரு:Solukhumbu District

"https://ta.wikipedia.org/w/index.php?title=திங்குபுச்சே&oldid=3297509" இருந்து மீள்விக்கப்பட்டது