திங்களூர் பூமண சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திங்களூர் பூமண சுவாமி கோவில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திங்களூர் கிராமத்தின் (அஞ்சல் குறியீடு 634961) தென்பகுதியில் சுங்கக்காரன்பாளையத்தை ஒட்டி உள்ள தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது. சமணசமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கரான புஷ்பதந்தர் இக்கோவிலின் மூலவராவார்.

புஷ்பதந்தர்[தொகு]

புஷ்பதந்தர்

சுவிதிநாத என்னும் புஷ்பதந்தர் சமண சமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கரர் (அவசர்பினி).ஆவார். இவர் கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, அருகதர் நிலையை அடைந்தவர் ஆவார். இவருடைய தந்தை சுக்ரீவன்; தாய் சுப்பிரியா. உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியா நகரத்தின் அருகே குக்குந்தூ எனுமிடத்தில் பிறந்தார். ஜார்கண்ட் மாநிலம் சிகார்ஜி மலையில் முக்தியடைந்தார்.[1] இவருடைய நிறம் வெண்மை ஆகும். முதலையை வாகனமாகக் கொண்ட புஷ்பதந்தரின் மலர் பவளமல்லி ஆகும். இவருடைய இயக்கன் அஜிதன்; இயக்கி மகாகாளி ஆவர். [2]

அமைவிடம்[தொகு]

இவ்வூர் பெருந்துறையிலிருந்து 14 கிமீ தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 29 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில்நிலையம் ஈரோடு ஆகும். இவ்வூரின் புவியமைவிடம் 10°53′12″N அட்சரேகை 79°7′32″E தீர்க்க ரேகை ஆகும்.

கோவில் அமைப்பு[தொகு]

கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய உறுப்புகளை பெற்றுள்ளது. கருவறை கருங்கல் கட்டுமானம் ஆகும். அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபங்கள் செங்கல், சுண்ணாம்பு, மற்றும் சுதையால் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி எழுப்பப்பட்ட சுற்று மதில்கள் இடிந்து போயுள்ளன. கருவறையில் நிறுவப்பட்டுள்ள மூலவர் புஷ்பதந்தரின் சிலை சுமார் 1 1/2 அடி உயரம் கொண்டது ஆகும். புஷ்பதந்தரின் இயக்கன் அஜிதனின் சிற்பம் மகாமண்டபத்தின் தென்புறச் சுவரின் மையத்தில் ஒரு சன்னதியில் நிறுவப்பட்டுள்ளது. மடப்பள்ளி தென்கிழக்கு மூலையில் கட்டப்பட்டுள்ளது.[3]

மகாமண்டபத்தின் நான்கு தூண்களின் மீது பசு, அன்னம், குதிரை, துறவி, வாயிற்காவலர், ஆகியோரின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பார்சுவநாதர், கோமதேசுவரர், மகாவீரர் ஆகிய தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் முக்குடையும் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாகர் உருவங்கள், விநாயகர், முருகன், மும்மூர்த்திகளின் புடைப்புச் சிற்பங்களும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. இவை இக்கோவிலின் மீது ஏற்பட்ட இந்து மதத்தின் செல்வாக்கை பறைசாற்றுகின்றன.[3]

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோவிலில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சந்திரவசதி என்பது திங்களூரில் பண்டைய பெயர் என்று ஒரு கல்வெட்டு பதிவு செய்துள்ளது. சிங்களாந்தகன் என்ற பெயருடைய முன்மண்டபத்தை அறத்துளான் முத்தன் பொன்னனான கணித மாணிக்கச் செட்டி என்பான் எடுப்பித்த செய்தியினை வேறொரு கல்வெட்டு பதிவு செய்துள்ளது.[3]

தமிழ் செப்பேடு: புலவர். செ.ராசு ஆய்வு[தொகு]

கொங்கு ஆய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.ராசு இக்கோவிலில் உள்ள தமிழ் செப்பேட்டினை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். [4] [5] செப்பேட்டில் இடம்பெற்றுள்ள செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன:

  • திங்களூர் சந்திரபுரி என்று பெயர் பெற்றிருந்தது. இங்குள்ள சிவன் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டிலும் சிவன் சந்திரபுரீசுவரர் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
  • புஷ்பதந்தர் கோவில் கல்வெட்டு இவ்வூரை சந்திரவசதி (வசதி = பசதி) என்று குறிப்பிடுகிறது.
  • . குருகுல காவியம் இவ்வூரை "சந்திரதுண்டம்' என்று குறிப்பிட்டுள்ளது.
  • செப்பேடு குறிப்பிடும் திங்களூரின் நான்கு எல்லைகள்: தென்னரசு - தெற்கு எல்லை; முக்குக்கல் - மேற்கு எல்லை; வடதுரத்தி - வடக்கு எல்லை; மற்றும் இரத்தக்காளி - கிழக்கு எல்லை ஆகும்.
  • ஐந்தலைநாகம், ஆடவெண்சாரை, தவளைக்கல், சந்திரலிங்கம், சடைப்பனை, பூமநதி, ஐங்கரன், வீமன்கிணறு, வெண்டாமரைக்குளம், ரணமுகபூதம், செந்தமிழ்ச்சங்கம், காணாச்சுனை, கருநொச்சி, தெப்பவாலி, கோட்டை, உப்பரிகை, பன்னகசாலை ஆகிய இடங்களின் பெயர்கள் திங்களூரில் இடம்பெற்றிருந்த செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • பாண்டியர் காலத்தில் திங்களூரில் தமிழ்ச்சங்கம் இருந்ததும் இச்செப்பேட்டின் வாயிலாகத் தெரிய வருகிறது.
  • வாகாசுரன் என்னும் அரக்கன் மக்களுக்குக்கிழைத்த தொல்லையைத் தடுக்கும் முயற்சியில் வீரமரணம் அடைந்த பூமண் என்ற நாடார் இனத்து இளைஞனுக்கு நடுகல் நாட்டி வழிபாட்டனர். நாளடைவில் நடுகல்லுக்கு கோவில்கட்டி நாடார் இனத்தவர் வழிபாடு செய்து வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Puṣpadanta or Suvidhi Jainpedia 2017
  2. Compendium of Jainism Tukol. T.K. University of Karnataka. Dharwad. 1980.
  3. 3.0 3.1 3.2 கொங்குநாடும் சமணமும். புலவர் செல.இராசு. சென்னை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 2016. pp. 89 - 91. ISBN 978-81-2343-242-7
  4. பெருந்துறை அருகே தமிழ் சங்கம்; செப்பேட்டில் தகவல் தினமலர் ஆகஸ்டு 06, 2018
  5. பெருந்துறை அருகே திங்களூரில் பாண்டியர் காலத்தில் செயல்பட்ட தமிழ்ச்சங்கம் கண்டுபிடிப்பு : செப்பேட்டில் தகவல் பரணிடப்பட்டது 2022-10-14 at the வந்தவழி இயந்திரம் தினகரன் ஆகஸ்டு 07, 2018