திக்கிரி அபேயசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திக்கிரி பண்டார ஹேரத் அபேயசிங்க (Tikiri Bandara Herath Abeyasinghe) என்னும் முழுப்பெயர் கொண்ட திக்கிரி அபேயசிங்க இலங்கையின் முக்கியமான வரலாற்றாளர்களில் ஒருவரும் கல்வியாளரும் ஆவார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர் அப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். இலங்கையின் வரலாறு தொடர்பில் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார். இவரது காலத்தில், 17ம் நூற்றாண்டுப் போர்த்துக்கேய மொழியில் புலமை வாய்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய இலங்கையருள் ஒருவரான இவர்,[1] போர்த்துக்கேயர் கால இலங்கையின் வரலாறு குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு நூல்களையும் எழுதியதுடன், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தோனியோ பொக்காரோவின் கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல் என்னும் அறிக்கையின் இலங்கை தொடர்பான பகுதிகளைப் போர்த்துக்கேய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தும் உள்ளார்.

வரலாறு[தொகு]

திக்கிரி அபேயசிங்க 1929ம் ஆண்டு மே 4 ஆம் தேதி இலங்கையில் உள்ள கிரியுல்ல என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஏர்னெஸ்ட் பண்டார அபேயசிங்க, தாயார் சோமாவதி. குருநாகலில் உள்ள மாலியதேவ கல்லூரியில் கல்வி பயின்ற இவர், அங்கிருந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தார். 1955 ஆம் ஆண்டில் கலை இளமாணி (சிறப்பு) பட்டம் பெற்றபின், 1963ல் இலண்டன் பல்கலைக்கழகத்தின், கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.[2]

1957ம் ஆண்டு மிரிகானை என்னும் இடத்தைச் சேர்ந்த விமலா விஜயசேகரா என்பவரை மணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1985 ஆம் ஆண்டு ஆகத்து 25 ஆம் தேதி மாரடைப்பினால் இவர் காலமானார்.[2]

தொழில்[தொகு]

இளமானிப் பட்டம் பெற்றபின்னர் 1956-57 காலப் பகுதியில் சுயமொழித் திணைக்களத்தில் செயலராகவும், 1957-58ல் பிரிவுக் காணி அலுவலராகவும் பதவி வகித்த பின்னர், 1959ல் இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தின் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளர் ஆனார். 1963ம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்த அபேயசிங்க, 1974ல் நவீன வராலாற்றுத்துறைப் பேராசிரியர் ஆனார். 1974 தொடக்கம் 1977 வரை நவீன வரலாறு மற்றும் சமூகவியல் துறையின் தலைவராகவும், 1979 தொடக்கம் 1980 வரை நவீன வரலாற்றுத் துறைத் தலைவராகவும், 1982 முதல் 1983 வரை நவீன வரலாறு மற்றும் அரசறிவியல் துறைத் தலைவராகவும் அவர் இருந்தார். 1979-1980 காலப் பகுதியில் கலைத்துறையின் பிரிவுத் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.[2]

போர்த்துக்கேய மொழியிலும், டச்சு மொழியிலும் இவருக்குப் புலமை இருந்தது. இதனால், இலங்கையின் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால வரலாறு தொடர்பில் அந்த மொழிகளில் உள்ள மூல ஆவணங்களை ஆய்வு செய்து பொருள் பொதிந்த பங்களிப்புக்களை இவரால் செய்ய முடிந்தது.[3]

நூல்களும் மொழிபெயர்ப்புகளும்[தொகு]

அபேயசிங்க பல நூல்களை எழுதியுள்ளதுடன் பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மெழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். ஏ. எல். பாசம் எழுதிய வாண்டர் தட் வாஸ் இன்டியா (Wonder that was India) என்னும் ஆங்கில நூலின் 5-8 அத்தியாயங்களை அசிரிமத் இந்தியாவ என்னும் பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இது 1962ல் வெளிவந்தது. தொடர்ந்து, 1966ல் Portuguese Rule in Ceylon (இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி) என்னும் ஆங்கில நூல் வெளிவந்தது. பின்னர் 1970லும், 1974லும் புரூத்துகீசீன் ஹா லங்காவ (போத்துக்கீசரின் இலங்கை), பறங்கி கோட்டே 1594-1612 ஆகிய இரண்டு சிங்கள நூல்கள் வெளிவந்தன. 1974ல் Portuguese Regimentos on Sri Lanka at Goa Archives (கோவா ஆவணக் காப்பகத்தில் இலங்கை தொடர்பான சட்ட விதிகள்) என்னும் ஆங்கில நூலும் வெளிவந்தது. Jaffna Under Portuguese 1619-1658 (போர்த்துக்கேயரின் கீழ் யாழ்ப்பாணம் 1619-1658) என்னும் இவர் எழுதிய ஆங்கில நூல் இவர் இறந்த பின்னர் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[2]

இலங்கை தேசிய ஆவணக் காப்பகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 1984 ஆம் ஆண்டில், அக் காப்பகத்தில் இருந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததும், அந்தோனியோ பொக்காராவினால் எழுதப்பட்டதுமான கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல் என்னும் அறிக்கையின் கையெழுத்துப் படியில் இருந்து இலங்கை தொடர்பான பகுதிகளைப் போர்த்துக்கேய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். இதே அறிக்கையின் வேறு படிகள் இங்கிலாந்து, பிரான்சு, போர்த்துகல் ஆகிய நாடுகளின் ஆவணக் காப்பகங்களிலும் இருந்ததால் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து மொழி பெயர்ப்பதற்காக அந்த நாடுகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். இவரது மொழிபெயர்ப்பு வேலைகள் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் இவர் சடுதியாக இறந்து விட்டதால், இவரது மொழி பெயர்ப்புப் பிரதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இது கண்டுபிடிக்கப்பட்டு 1995 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[4]

1982-84 காலப்பகுதியில் அரச ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் ஆய்விதழின் கௌரவ ஆசிரியராகவும் அபேயசிங்க பணியாற்றினார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Antonio Bocarro's Description of Ceylon Translated into English by T. B. H. Abeyasinghe" நூலுக்கு ஜி. பி. எஸ். எச். டி சில்வா வழங்கிய முன்னுரை. பக். viii.
  2. 2.0 2.1 2.2 2.3 "Antonio Bocarro's Description of Ceylon Translated into English by T. B. H. Abeyasinghe" நூலில் பங்களித்தவர்கள் பற்றிய குறிப்பில் இருந்து. பக். iv.
  3. Abeyasinghe, Tikiri. 1996. பின் அட்டைக் குறிப்பு
  4. "Antonio Bocarro's Description of Ceylon Translated into English by T. B. H. Abeyasinghe" நூலுக்கு ஜி. பி. எஸ். எச். டி சில்வா வழங்கிய முன்னுரை. பக். viii-x.

உசாத்துணைகள்[தொகு]

  • Abeyasinghe, T. B. H. (Translator), De Silva, G. P. S. H., (Honorary Editor), Antonio Bocarro's Description of Ceylon Translated into English, Journal of the Royal Asiatic Society of Sri Lanka, New Series, Volume XXXIX, Special Number, Royal Asiatic Society of Sri Lanka, Colombo, 1996.
  • Abeyasinghe, Tikiri., Jaffna Under The Portuguese, Lake House Investment Ltd., Colombo, 1986.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்கிரி_அபேயசிங்க&oldid=3010794" இருந்து மீள்விக்கப்பட்டது