திகவல்லி வெங்கட சிவராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திகவல்லி வெங்கட சிவராவ் ( Digavalli Venkata Siva Rao ) இவர் ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த தெலுங்கு எழுத்தாளரரும், வழக்குரைஞராகவும் வரலாற்றாசிரியராகவும் இருந்துள்ளார்.பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் காக்கிநாடாவில் 1898 பிப்ரவரி 14 அன்று பிறந்துள்ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள, போபாலில் 1992 அக்டோபர் 3 அன்று இறந்தார். [1] 1924 மற்றும் 1987 க்கு இடையில் நாற்பத்திரண்டு புத்தகங்களையும் சுமார் 300 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது சில படைப்புகள் இந்திய டிஜிட்டல் நூலகத்தில் கிடைக்கின்றன .

சுதந்திர இயக்கத்தில்[தொகு]

காந்தி தலைமையிலான இந்திய சுதந்திர இயக்கத்துடன் தீவிரமாக ஈடுபட்டார். [2] [3] சிவராவின் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் பகுப்பாய்வுகளும் விமர்சனங்களும் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இவருடைய சில புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் தடைசெய்யப்பட்டன. மேலும் இவர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1930 சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசின் தன்னார்வலராக, கிருஷ்ணா மாவட்டத்திற்கான விளம்பரப் பொறுப்பில் இருந்தார். உப்பு சத்தியாக்கிரகத்தின் போது கைது செய்யப்பட்ட பல காங்கிரசு தொண்டர்களுக்கு இவர் தனது சட்ட சேவைகளை வழங்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு, தெலுங்கு மொழிக்கான பல்வேறு அரசாங்கக் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

சிவராவ் ஆந்திராவின் இலக்கிய, கலாச்சார மற்றும் அறிவார்ந்த தளங்களில் தீவிரமாக இருந்தார். மேலும் அவரது சமகாலத்தவர்களான வெல்லூரி சிவராம சாஸ்திரி, பசவராஜு அப்பராவ், விசுவநாத சத்யநாராயணா, என். கோபி, மற்றும் நர்லா வெங்கடேசுவர ராவ் ஆகியோருடன் நட்புடன் இருந்தார்.

கௌரவங்கள்[தொகு]

சிவராவ் 1966 ஆம் ஆண்டில் ஆந்திர அரசால் கௌரவிக்கப்பட்டார். [2] ஆந்திர மாநில வரலாற்று காங்கிரசு இவரை இரண்டு முறை கௌரவித்தது.

குடும்ப பின்னணி மற்றும் கல்வி[தொகு]

திகவல்லி வெங்கட சிவராவ் 1898 பிப்ரவரி 14 ஆம் தேதி காக்கிநாடாவில் வெங்கடரத்னம் மற்றும் சூர்யமணியாம்பா ஆகியோருக்கு பிறந்தார். அப்போது பிரித்தானியர்களசென்னை மாகாணத்தை நிர்வகித்து வந்தனர். இவரது தாத்தா, திகவல்லி திம்மராசு (1794-1856), காக்கிநாடாவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1828 முதல் ஆங்கில பதிவறை காப்பாளராக இருந்தார். பிதாபுரம் தோட்டத்திற்கான நீதிமன்ற பகுதியின் மேலாளராகவும் இருந்தார். 1850 ஆம் ஆண்டில் தலைமை சிரசுதராக பதவி உயர்ந்தார். இது கிழக்கிந்திய கம்பெனியின் மிக உயர்ந்த அலுவலகமாகும். இவரது நிர்வாக முடிவுகள் கோதாவரி மாவட்ட கையேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவராவின் தாத்தா 1828 ஆம் ஆண்டில் காக்கிநாடாவில் சிறீ பீமேஸ்வரசுவாமி கோயிலையும் கட்டியுள்ளார்.

சிவராவ் மிகச் சிறிய வயதிலேயே தந்தையை இழந்து தனது சகோதரி சீதா பாய் மற்றும் மைத்துனர் போடபதி பூர்ணையா ஆகியோருடன் வாழ்ந்தார். 1910 முதல் 1916 வரை ராஜமுந்திரியில், வீரேசலிங்கத்தால் நிறுவப்பட்ட கிதகரினி பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் கோழிக்கோடு மற்றும் பெங்களூரில் படித்தார். அதன்பிறகு, 1916-1920 வரை சென்னை, மாநிலக் கல்லூரியில் இடைநிலை மற்றும் இளங்கலை ஆகியவற்றைப் படித்தார். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து பட்டம் (1920-1922) பெற்றார். சென்னையில் இருந்த காலத்தில் இவரது விடுதித் தோழர்களாக இருந்த பல்வேறு பீடங்களில் படிக்கும் சில மாணவர்கள் இவருடன் தொடர்பில் இருந்தனர். இதில் மேலும் பிரபலமானவர்களில் எம். பக்தவத்சலம், தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், அடவி பாபிராஜு, கோகா சுப்பா ராவ், எல்லப்பிரகத சுப்பாராவ், வெலிதண்டலா அனுமந்த ராவ், மற்றும் கானூரி இலட்சுமண ராவ், போன்ற ஒரு சிலவற்றைக் குறிப்பிடாலாம்.

குறிப்புகள்[தொகு]

  1. The National Biography of Indian Literature 1901-1953 Sahitya Academy, New Delhi. Volume 4, p 251, 416,417,419
  2. 2.0 2.1 ‘Nenerigina Siva Rao garu’ by Kakani Venkata Ratnam, Andhra Jyothi, 10 October 1966
  3. ‘Two scholar Politicians’ by G. Krishna, Indian Express, 22 Jan 1972