தாவர நோயியல்
தாவர நோயியல் (Plant pathology அல்லது phytopathology) என்பது நோய்க்கிருமிகள் (தொற்று உயிரினங்கள்) மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை (உடலியங்கியல் காரணிகள்) ஆகியவற்றால் தாவரங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும்.[1] தொற்று நோயை உருவாக்கும் உயிரினங்களில் பூஞ்சை, ஓமைசீட்ஸ், பாக்டீரியா, தீ நுண்மங்கள் ,வைரசனையங்கள், பைட்டோபிளாஸ்மாக்கள், முதலுயிரி, நூற்புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிச்செடு ஆகியன அடங்கும்.
தாவர இழையங்களை உட்கொள்வதன் மூலம் தாவரங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பூச்சிகள், சிற்றுண்ணிகள், முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் என்பன தாவர நோயியலில் உள்ளடக்கப்படவில்லை. தாவர நோயியல் நோய்க்கான காரணி, நோய் சுழற்சிகள், பொருளாதார தாக்கம், தாவர தொற்றுநோய்கள், தாவரங்களின் நோய் எதிர்ப்புதிறன் , தாவர நோய்கள் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் விதம், நோய்க்கான மரபியல் அமைப்பு மற்றும் தாவர நோய்களை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
கண்ணோட்டம்
[தொகு]தாவர நோய்களைக் கட்டுப்படுத்துவது உணவின் நம்பகமான உற்பத்திக்கு அவசியமாகும். தாவரங்களின் நோய் எதிர்ப்புத் திறன், பயிர் சுழற்சி, நோய்க்கிருமி இல்லாத விதைகளின் பயன்பாடு, பொருத்தமான நடவு , வயலின் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் முறையான பாவனை போன்ற அணுகுமுறைகளால் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தாவர நோய்கள் உலகளவில் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. பயிர் இழப்பில் சுமார் 25% வீதம் பீடைகள் மற்றும் நோய்களினால் ஏற்படுவதாக என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிடுகிறது.[2]
தாவர நோயாக்கிகள்
[தொகு]பூஞ்சைகள்
[தொகு]தாவரங்களில் நோய் விளைவிக்கின்ற பெரும்பாலான பூஞ்சைகள் அஸ்கொமைசெட்டுகள் மற்றும் பாசிடியோமைசீட்கள் பிரிவுகளைச் சேர்ந்தவை. பூஞ்சைகள் தாவர இனத்தைச் சார்ந்தவை. நோய் உண்டு பண்ணும் பூஞ்சைகளுக்கு பச்சையம் கிடையாது. அதனால் தாவரங்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து நோயை உண்டு பண்ணுகின்றன. இலையில் புள்ளிகள், துளைகள், கருகல், சாம்பல் நிற படிவம், துரு படிவம், செடி வாடுதல், நாற்றழுகல் மற்றும் வேர் அழுகல் முதலிய அறிகுறிகள் பூசணங்களால் தோன்றுகிறது. பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பிற விவசாய முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பூஞ்சை நோய்கள் கட்டுப்படுத்தப்படலாம்.[3]
ஓமைசீட்கள்
[தொகு]ஓமைசீட்கள் பூஞ்சை போன்ற உயிரினங்கள் ஆகும். பைட்டோபதோரா இனம் உட்பட மிகவும் அழிவுகரமான தாவர நோய்க்கிருமிகள் இவற்றில் அடங்கும். ஓமைசீட்களின் குறிப்பிட்ட இனங்கள் வேர் அழுகலுக்கு காரணமாகின்றன. இவை புரதங்களை தாவர கலங்களை சேதப்படுத்துவதன் மூலம் தாவரங்களில் நோயை ஏற்படுத்தக் கூடியவை.[4]
பாக்டிரியா
[தொகு]தாவரங்களுடன் தொடர்புடைய பெரும்பாலான பாக்டீரியாக்கள் தாவரத்திற்கு தீங்கு விளைவிக்காது. இருப்பினும், ஒரு சிறிய எண்ணிக்கையிலான, அறியப்பட்ட 100 இனங்கள், நோயை உண்டாக்குகின்றன.[5] உலகின் துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் பாக்டீரியா நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. பாக்டீரியாக்கள் இலைபுள்ளிகள், கரிதல், மென்மை அழுகதல், பிளவை, வாடல் மற்றும் கழலைகள் கொப்பளங்கள் போன்ற நோய் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. [3]சூடோமோனாஸ் சிரிங்கே பி.வி. பாக்டிரீயா தக்காளி செடிகளின் விளைச்சலை குறைக்கின்றது.
பைட்டோபிளாஸ்மா மற்றும் ஸ்பைரோபிளாஸ்மா ஆகியவை கலச் சுவர் அற்ற பாக்டீரியாக்களின் வகைகளாகும். இவை மனித நோய்க்கிருமிகளான மைக்கோபிளாஸ்மாக்களுடன் தொடர்புடையவை. இவை மற்ற பாக்டீரியாக்களை விட சிறிய மரபணுக்களைக் கொண்டிருக்கின்றன. தாவரத்தின் உரியத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.
தீ நுண்மங்கள், வைரசனையங்கள்
[தொகு]தாவரங்களில் நோய் விளைவிக்கும் தீ நுண்மங்களில் பலவகை உண்டு. தீ நுண்மங்கள் பயிர் விளைச்சலை பாதிக்கின்றன. பெரும்பாலான தாவர தீ நுண்மங்கள் ஓரிழை ஆர்.என்.ஏ மரபணுக்களால் ஆனவை. சில தாவர தீ நுண்மங்கள் ஈரிழை ஆர்.என்.ஏ அல்லது ஈரிழை அல்லது ஓரிழை டி.என்.ஏ மரபணுக்களை கொண்டுள்ளன. தாவர தீ நுண்மங்கள் காவிகள் மூலம் பரவுகின்றன.[6] பூச்சிகள்,சில பூஞ்சைகள், நூற்புழுக்கள் மற்றும் முதலுயிரி ஆகியவை தீ நுண்மங்களை பரப்பும் காவிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளன. பயிர்களில் தேமல், இலைசுருள், இலை சுருக்கம் , இலைநெளிவு, இலைவடிவ மாற்றம், வளச்சி குன்றுதல் மற்றும் மலட்டு தன்மை ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன.
நூற்புழுக்கள்
[தொகு]நூற்புழுக்கள் பல்கல, புழு போன்ற நுண்ணுயிரிகள் ஆகும். இவற்றின் சில இனங்கள் தாவர வேர்களில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. இவை தாவரத்திற்கு தேவையான நீர், ஊட்டச்சத்துக்களில் தங்கியிருப்பதால் தாவர வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் என்பன பாதிப்படைகின்றன.
முதலுயிரிகள்
[தொகு]பைட்டோமோனாஸ், கினெட்டோபிளாஸ்டிட் ஆகிய தாவர நோய்கள் முதலுயிரிகளால் ஏற்படுகின்றன. முதலுயிரிகள் தாவரங்களில் தீ நுண்மங்களை பரப்பும் நோய்காவிகளாகவும் செயற்படுகின்றன.[7]
தாவர கோளாறுகளுக்கான பௌதீக காரணிகள்
[தொகு]இயற்கை நிகழ்வுகளான வறட்சி, உறைபனி, பனி , மற்றும் ஆலங்கட்டி மழை, வெள்ளம் ஆகிவற்றாலும், ஊட்டச்சத்து குறைபாடு, சோடியம் குளோரைடு மற்றும் ஜிப்சம் போன்ற கனிம உப்புகளின் படிவு, காட்டுத்தீ போன்றவற்றாலும், களைக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு, காற்று மற்றும் மண்ணை மாசுபடுத்துதல் போன்ற மனித தலையீட்டினாலும் தாவர கோளாறுகள் ஏற்படுகின்றன. இவை தாவரத்தின் செயற்பாடுகளை பாதிக்கின்றன.
தாவர நோய் எதிர்ப்புத் திறன்
[தொகு]நோய் தொற்றுதலின் போது தாவரங்களினால் நோய்கிருமிகளை தடுக்கும் ஆற்றல் நோய் எதிர்ப்பு திறன் எனப்படும். தொற்றுதலின் போது தாவரங்களினால் காட்டப்படும் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மைகளாவன:[8]
- தடித்த புறத்தோல் காணப்படுதல்.
- தாவர மேற்பரப்பில் ஈரலிப்பு தங்கியிருப்பதை தடுப்பதற்கான மேற்றோலில் மயிர்கள் இருத்தல்.
- நோயாக்கிகள் தாவர உடலினுள் புகுந்தால் அவற்றின் வளர்ச்சியை தடுக்கக் கூடிய இரசாயன பதார்த்தங்கள் தாவர கலத்தில் உற்பத்தி செய்யப்படுதல்.
- நோயினால் பாதிக்கப்பட்ட இழையங்களைச் சூழ்ந்து இறந்த கலங்களிலான சுபரின் வளையங்கள் தோன்றி நோயாக்கி பரவல் அடைவதை தடுத்தல்.
- இலைவாயின் பருமன் எண்ணிக்கை குறைக்கப்படுதல்.
தாவரநோய்க் கட்டுப்பாடு
[தொகு]- நோய்க் காரணிகள் நாட்டினுள் செல்வதை தடுக்கும் முறையிலான இறக்குமதி செய்யப்படும் பழங்கள், வித்துக்கள் தனிப்படுத்துகை செய்து அவற்றில் தொற்று இல்லாதிருப்பதை உறுதிப்படுத்திய பின்பு நாட்டினுள் அனுமதித்தல். (Quarantine regulations)
- நோயாக்கிகள் தொற்றுகையில்லாத தாவரங்களைப் பயிரிடுதல். இதற்காக வித்துக்கள் நாற்று மேடைகள் என்பன கிருமி நீக்கப்படுகின்றன.
- நோயினால் பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றுதல்
- களைகளை கட்டுப்படுத்தல்.
- பயிர்ச்சுழற்சி நடுகைகளை மேற்கொள்ளல். இது நோயாக்கிக்கு தொடர்ச்சியாக விருந்து வழங்கி கிடைப்பதை தடுக்கின்றது.
- நாற்று மேடைகளை ஆரோக்கியமான நிலையில் பராமரித்து நோய்கள் ஏற்படுவதை தடுத்தல்.
- இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தி மண்ணை தொற்று நீக்கம் செய்தல்.
- பங்கசு நாசினிகளை பயன்படுத்தி பங்கசு நோய்களை கட்டுப்படுத்தல்.
- பூச்சிநாசினிகளை பயன்படுத்தல்.
- நுண்ணுயிர்தின்னிகளை உபயோகித்து நோயாக்கிகளை அழித்தல்.
- மரபணு பொறியியல் மூலமாக நோய் எதிர்ப்பு இயல்புள்ள பயிர்த் தாவரங்களை விருத்தி செய்தல்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Agrios GN (1972). Plant Pathology (3rd ed.). Academic Press.
- ↑ Martinelli F, Scalenghe R, Davino S, Panno S, Scuderi G, Ruisi P, Villa P, Stroppiana D, Boschetti M, Goulart LR, Davis CE (January 2015). "Advanced methods of plant disease detection. A review" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ 3.0 3.1 தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். தொழிற்கல்வி மேல்நிலை முதலாம் ஆண்டு ப.எண்.170
- ↑ "Scientists discover how deadly fungal microbes enter host cells". phys.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
- ↑ Jackson RW (editor). (2009). Plant Pathogenic Bacteria: Genomics and Molecular Biology. Caister Academic Press. ISBN 978-1-904455-37-0.
- ↑ Roossinck, M. J. (2011). "The good viruses: viral mutualistic symbioses". Nature Reviews Microbiology. 9 (2): 99–108. doi:10.1038/nrmicro2491. PMID 21200397.
- ↑ Jankevicius JV, Itow-Jankevicius S, Maeda LA, Campaner M, Conchon I, Carmo JB, Dutra-Menezes MC, Menezes JR, Camargo EP, Roitman I, Traub-Csekö YM (1988). "Ciclo biológico de Phytomonas" [Biological cycle of Phytomonas]. Memórias do Instituto Oswaldo Cruz (in Portuguese). 83: 601–10. doi:10.1590/S0074-02761988000500073. PMID 3253512.
- ↑ 8.0 8.1 "நுண்ணங்கி உயிரியல்" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)