தாவர இனத்தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவர இனத்தோற்றம்[தொகு]

Some traditional tools of botanical science


உயிரினம் இப்புவியில் சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். கேம்பிரியனுக்கு முற்பட்ட காலத்தில் பூமியைச் சுற்றி வளி மண்டலம் கிடையாது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும், வளியிலிருந்து பெரிய எரிகற்களும் பூமியைத் தாக்கியதால் அதற்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை எனலாம். நாளடைவில் புவி மெதுவாக குளிரத் துவங்கியது. இச்சமயத்தில் பசால்ட் தளத்தில் கருங்கல்லால் ஆன கண்டங்கள் தனித்து வெளிப்பட்டன. ஈரப்பதம் திரண்டு ஆறுகள், ஏரிகள், கடல்கள் தோன்றின. அப்போது ஆக்ஸிசன் அளவு 3 விழுக்காடுகளுக்கும் குறைவாக இருந்தது. கரியமில வாயு அளவும் குறைந்திருந்தது. அதனால் உயிரின்ங்கள் தோன்ற நெடுங்காலம் ஆனது.

பேலியோசோயிக் யுகம்[தொகு]

கடல் நீரில் காணப்படும் உயிரினங்களைக் கொண்ட இந்த யுகத்தின் வயது 59 ஆண்டுகள் ஆகும். இதன் முன்காலம் கேம்பிரியன் எனப்படும். இது 15 கோடி ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது. வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா,சைபீரியா பகுதிகள் ஆழமில்லாத கடல் நீரில் மூழ்கியிருந்தன.இதனை அடுத்து புவி பரப்பில் எரிமலைகளின் கொந்தளிப்பும், மழையும் மாறிமாறி ஏற்பட்ட அக்காலத்தில் ஆப்பிரிக்க சகாரா பாலை நிலப்பகுதி தென் துருவத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கக் கூடும் எனத் தொல்லுயிர் படிவங்கள் மூலம் அறிய முடிகிறது.

சிலுரியன் யுகம்[தொகு]

40 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த யுகம். நிலத் தாவரங்களின் தோற்றம் அக்காலத்தில் நிகழ்ந்ததற்கு ஆதாரமாக இலைகள், வேர்களற்ற தாவரங்களின் தொல்லுயிர்ப்படிவங்கள் கிடைத்துள்ளன. 36 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டிவோனியன் காலத்தில் நிலப்பகுதிகள் தாவரங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு பசுமையான போர்வையைப் பெற்றிருந்தன. உயரமான மரப்பெரணிகள் அதிக அளவில் காணப்பட்டன.

நிலக்கரி காலம்[தொகு]

சிலுரியனை அடுத்த கார்போனிபெரஸ் காலத்தை “நிலக்கரி காலம்” என்பர். சுமார் ஏழரை கோடி ஆண்டுகள் கொண்ட இக்காலத்தில் நிலத்தாவர வளம் உச்ச கட்டத்தில் இருந்தது என்பர். பொதுவாக சதுப்பு நிலங்கள் இங்கு காணப்பட்டன. ஆறுகளின் மண்ணரிப்பு, எரிமலைகளின் சீற்றம் போன்றவற்றால் பல தாவர வளப்பகுதிகள் நிலத்தடியில் மண்பாறைகளில் சிக்கி அழிந்தன. அவை தற்போது நிலக்கரி, பெட்ரோல் போன்ற பொருட்களாக வெளிப்படுகின்றன. பேலியோசோயிக் யுகத்தின் கடைசிக் காலம் பெர்மியன் காலம் ஆகும். இது 22 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. பேஞ்சியா என்ற பெருங்கண்டத்தின் தென்பகுதியில் க்ளாஸாப்டெரிஸ் என்ற குட்டையான மர இனங்கள் தோன்றின. இவற்றின் படிவங்களை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அண்டார்டிகாவில் இன்றும் காணலாம்.

மீஸோஸூயிக் யுகம்[தொகு]

மீஸோஸூயிக் யுகம் எனப்படும் இடை உயிரின யுகத்தை இரண்டாம் யுகம் என்றும் கூறுவர். இதன் காலம் 18 கோடி ஆண்டுகளாகும். இதன் முதற்காலம் டிரையாசிக்(TRIASSIC). இது 19 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், சூழ்நிலை வறட்சியாக இருந்தாலும் தாவரங்களின் முன்னேற்றம் காணப்பட்டது. இதனை அடுத்து ஈரப்பதம் அதிகரிக்கத் தொடங்கியவுடன் தாவரத்தொகுப்பில் பரிணாமம் ஏற்பட்டுச் சிகடுகள் போன்ற விதை மூடாத் தாவரங்கள் தோன்றின. இக்காலத்தில் வளி மண்டல ஆக்ஸிசன் அளவு குறைந்து காணப்பட்டதால் உயர் உயிரினங்கள் தோன்ற வாய்ப்பு இல்லை.

இதையடுத்தது ஜுராசிக் காலம்(JURRASIC). இதன் வயது 6 கோடி ஆண்டுகளாகும். அது இன்றிலிருந்து 14 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஈரப்பதம் அதிகரித்ததால் புவியின் மேற்பரப்பில் ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் அதிக அளவில் தோன்றின.மழையின் அளவு அதிகரித்ததால் வளமான பசுமைத் தாவரங்கள் பெருமளவில் தோன்றின. பெரணிகள், சிகடுகள், விதைமூடாத்தாவரங்கள் எங்கும் காணப்பட்டன. பூப்போன்ற கூம்புகள் கொண்ட தாவரங்கள் உருவாகின. இவைகளே பூக்கும் தாவரங்களின் முன்னோடியாக அமைந்தன. கிரிட்டெஸியஸ் காலம் தான் மீஸோஸூயிக் யுகத்தின் கடைசிக் காலம் ஆகும். இக்காலத்தில் புவியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

நிலப்பெரும் கண்டமான பேஞ்சியா உடைந்து துணைக்கண்டங்கள் உருவாயின. கோண்டுவானா என்ற நிலப்பகுதி உடைந்து, கண்ட இடப்பெயர்ச்சி மூலமாக தற்காலக் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, அண்டார்டிகா முதலியவை தோன்றின. இக்காலத்தில் ஈரப்பதம் மற்றும் வெப்ப மாற்றங்கள் குறைவாக இருந்தன. இதனால் இலையுதிர் இனங்களான மக்னோலியா, அத்தி போன்ற கீழ்நிலை பூக்கும் தாவரங்கள் தோன்றின. இக்காலத்தில் பூச்சி இனங்களுக்கும் பூக்கும் இனங்களுக்கும் இடையே நடந்த இணைப் பரிமாணத்தால் மகரந்த சேர்க்கை, விதை பரவுதல் மூலம் பூக்கும் தாவர பரிமாணம் மிக வேகமாக நடந்தது என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதை 'கிரிடேஸியஸ் விரிவாக்கம்' என்பர்.

சினோஸுயிக் யுகம்[தொகு]

இந்த யுகத்தை மூன்றாம் மற்றும் நான்காம் யுகங்களாக (Tertiary and Quarternary) பிரிப்பதும் உண்டு. தற்காலம் நான்காம் யுகத்தைச் சேர்ந்ததாகும். கண்டங்களில் இக்கால அமைப்பை நிலைநிறுத்தியது, இக்காலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். எரிமலைகளின் ஆதிக்கம் குறைந்ததே இதற்கு காரணமாகும். இந்த யுகத்தின் துவக்க காலம் இயோசின் என்பர். இக்காலத்தில் வெப்பமும், அதிக மழையும் இருந்ததால் பெரும்பாலான நிலப்பகுதிகள் வெப்பமண்டல தாவர வளத்துடன் காணப்பட்டன. தற்சமயம் மலேசியாவில் காணப்படும் தாவரவளம் இங்கிலாந்து மற்றும் கிரின்லாந்து பகுதிகளில் அக்காலத்தில் இருந்ததாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக வெப்பமண்டல தாவர இனத் தொல்லுயிர்படிவங்கள் கிரின்லாந்தில் கிடைத்துள்ளன. தென்னை இனமரங்களும் அதிக அளவில் அங்கு இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

இதற்கு அடுத்தகாலமான ஆலிகோஸின் காலத்தில் மித வெப்பச் சூழ்நிலை நிலவியது. புவி மேற்கொண்டு குளிர்ச்சி அடைய நேர்ந்ததால் சில பகுதிகளில் குளிர்காலச் சூழ்நிலை தோன்றியது.இதன் காரணமாக இலையுதிர் காடுகள் சிறிது சிறிதாக மறைந்து புல் உண்ணும் பாலூட்டிகளும் தோன்றின. அடுத்த காலமான மையோசின் காலத்தில் ஐரோப்பாவும், ஆசியாவும் இணைந்ததாகவும், மத்திய தரைக்கடல் தோன்றியதாகவும் கூறுகிறார்கள். ஐரோப்பா, வட அமெரிக்கப் பகுதிகளில் ஈரப்பதம் காரணமாக இலையுதிர் காடுகள் காணப்பட்டன. ஓக், மேப்பில், எல்ம், பாப்லர் போன்ற அகன்ற இலை மரங்களும், ஸிடார், சிகோயா போன்ற ஊசியிலை இனங்களும் உயர்ந்த பகுதிகளில் தோன்றின. மூன்றாம் யுகத்தின் கடைசிக்காலமான ப்ளயோசின் காலத்தில் கண்டங்கள், மாக்கடல்களுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டன. கிட்டத்தட்ட இன்றைய வெப்பநிலை அன்றும் இருந்தது. ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவை மேலும் குளிர்ச்சி அடைந்தன. இதனால் கிங்க்கோ எனப்படும் விதைமூடாத் தாவர இனம் இப்பகுதியில் அழிந்துவிட்டது. தற்சமயம் இதனை ஜப்பானிலும்,சீனாவிலும் மட்டுமே காண முடிகிறது. வெப்பமண்டலங்களில் வளமான புல்வெளிகள் தோன்றியதால் மத்திய அமெரிக்க காடுகளில் வாலில்லா குரங்குகள் தோன்றின.

ப்ளீஸ்டோசின் யுகம்[தொகு]

ப்ளீஸ்டோசின் காலமே நான்காம் யுகத்தின் முதல் காலமாகும்.இது தற்காலமான ஹோலோசீன் காலத்திலிருந்து 10000 ஆண்டுகளுக்கு முன் தோண்றியது எனலாம். ப்ளீஸ்டோன் காலத்தை பனிக்காலம் (Iceage) என்பர். இக்காலத்தில் வட ஆசியா, அண்டார்டிகா, ஐரோப்பாவின் பெரும்பகுதி, வட அமெரிக்கா, இமயமலைத்தொடர் அனைத்தும் பனிப்படலத்தாலும், பனி ஆறுகளாலும் மூடப்பட்டிருந்தன. புவியின் வயதோடு ஒப்பிடும் போது இக்காலகட்டம் மிகக் குறுகியதாக இருந்த போதிலும் பலவகைகளில் சிறப்பு வாய்ந்தது. நிலநீர் எல்லைகளும், தாவர, விலங்குகளின் பரப்பீடு முதலியவைகளும் இன்றைய நிலைக்கு கொண்டுவரப்பட்டன. பனிபடலக்காலம் பல கட்டங்களில் நடந்தாலும், பனிப்படல இடைக்காலத்தில் புவியின் வெப்பம் கூடுதலாகக் காணப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

www.bbc.com/tamil/science/2016/05/160510_plants www.viduthalai.in/page-1/15771.html www.nature.com › subjects www.biologyreference.com › Ep-Fl www.encyclopedia.com › Plants and Animals › Botany › Botany: General

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_இனத்தோற்றம்&oldid=2384819" இருந்து மீள்விக்கப்பட்டது