தாளையடி சபாரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாளையடி சபாரத்தினம் (1923 - 1967) ஈழத்துச் சிறுகதை, புதின எழுத்தாளர். நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் நாடகங்களையும் சில குறுநாவல்களையும் எழுதியுள்ளார். இவர் தாளையடி சபாரத்தினம் என்ற பெயரில் மட்டுமல்லாமல் மீனா, அசோகன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.

தினத்தந்தி ஆசிரியர் சி. பா. ஆதித்தனார் தனது கைகளாலேயே வைக்கோலை அரைத்துக் காகிதம் செய்து வெளியிட்ட தமிழன் என்ற இதழில் "ஊமைப்பெண்" என்ற கதையை 1940 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் காலடி வைத்தார் தாளையடி சபாரத்தினம்.

1943 ஆம் ஆண்டு ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான அ. செ. முருகானந்தத்துடன் இணைந்து திருகோணமலையில் எரிமலை என்ற பத்திரிகையை நடத்தினார். பிற்காலத்தில் வீரகேசரி ஞாயிறு இதழிலும், வரதரின் புதினம் பத்திரிகையிலும் பணியாற்றினார்.

பல கதைகளை எழுதிப் புகழ் பெற்றிருந்தாலும், அவரைப் புகழின் உச்சியில் ஏற்றியது அவர் எழுதிய "புதுவாழ்வு" என்ற சிறுகதையே. இச்சிறுகதை 1947 ஆம் ஆண்டு கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது கதைகள் தென்னகத்துப் பத்திரிகைகளிலும் ஈழத்துப் பத்திரிகைகளிலும் இடம்பெறலாயின.

இவருடைய கடைசிச் சிறுகதையான "பெண்ணின் பெருந்தக்க யாவுள" 1967 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.

வெளிவந்த நூல்கள்[தொகு]

இவரது சிறுகதைகள் அடங்கிய இரண்டு நூற்றொகுதிகள் இவர் இறந்த பின்னர் இவரது மனைவி மீனா சபாரத்தினத்தினால் வெளியிடப்பட்டன.[1]

  • புது வாழ்வு (சிறுகதைத் தொகுதி)
  • மறந்து விடாதே (சிறுகதைத் தொகுதி)

மேற்கோள்கள்[தொகு]

  1. "வெள்ளி 1971.07". பார்க்கப்பட்ட நாள் 6 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளையடி_சபாரத்தினம்&oldid=3215949" இலிருந்து மீள்விக்கப்பட்டது