தாலவிலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாலவிலாசத்தை எழுதிய நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

தாலவிலாசம் என்பது, பனையின் பெருமைகளைக் கூறுவதற்காகச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். நானூறுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த இந்த நூலை யாழ்ப்பாணத்தின் நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த சோமசுந்தரப் புலவர் இயற்றினார். 1940 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூலை 1940 ஆண்டில் தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பு அச்சிட்டு வெளியிட்டது.

நோக்கம்[தொகு]

பனையின் பெருமைகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம் என்பது, மன்னுநீர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெல்லாம் பன்னுகலி வெண்பாவாற் பாடவே ... என்று வரும் இதன் காப்புச் செய்யுள் அடிகளில் இருந்து விளங்கும். எனினும் இந்நூலின் அடிப்படை நோக்கம் அக்காலத்துச் சமூகத் தேவை சார்ந்து எழுந்தது என்று கூறுவது பொருந்தும். யாழ்ப்பாணம் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இருந்தபோது இந்த நூல் எழுதப்பட்டது. அண்டை நாடான இந்தியாவில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தின் தாக்கமும், முந்திய நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஆறுமுக நாவலர் போன்றவர்கள் கல்வி, சமயம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியும், யாழ்ப்பாணத்தில் தேசிய உணர்வுகளை ஏற்படுத்தியிருந்த காலம் அது. அந்நியர் ஆட்சிக்காலத்தில் பிறநாட்டுப் பொருட்களின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த விருப்பினால், உள்நாட்டுப் பொருட்களுக்குரிய பெருமைகள் குறைத்து மதிப்பிடப்பட்டன. இந்நிலையை மாற்றுவதற்குப் பல்வேறு குழுக்களும் தனிப்பட்டவர்களும் முயன்றுவந்தனர். இதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்த பனம் பொருட்களுக்கு மீண்டும் மதிப்பை உண்டாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சோமசுந்தரப் புலவரும் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தது அவரது பிற பாடல்கள் மூலம் விளங்கும். குழந்தைகளுக்காக அவர் இயற்றிய பனை தொடர்பான கும்மிப் பாடலிலே,

நூலின் கருப்பொருளான பனை
"திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்
தென்னவனும் ஔவை சொற்படியே
மங்கல மாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ ஞானப்பெண்ணே "

என்று மக்கள் பனம்பழத்தைக் குறைவாக மதிப்பிடுவதைக் குறை கூறுவதுடன், அதே பாடலின் இன்னொரு பகுதியில்,

"செங்கதி ரோன்சுடும் இந்தப் பலகாரம்
செய்து வைத்துத் தின்ன மாட்டாமல்
அங்கே பிறர்சமைத் திங்கே விடுமவைக்
காசைப் பட்டோமடி ஞானப்பெண்ணே "

என்று மக்களின் பிற நாட்டுப் பொருட்களின் மீதான விருப்பைச் சாடுவதையும் காணலாம். இந்த உணர்வுகளின் அடிப்படையிலேயே தாலவிலாசம் நூலின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்.

மூல நூல்களும் தகவல்களும்[தொகு]

நூலின் இறுதியிலே இந் நூலுக்கு மூலமாக அமைந்தவற்றைப் பற்றிப் புலவர் குறிப்பிட்டுள்ளார். "இப்பனையின் மெய்ப்புகழை ஆதியிலே ஆதியிலே தாலவிலாசமெனச் செப்பினார் செந்நாப்புலவர் " என்று குறிப்பிட்டுள்ளதனால், இப்பெயரில் முற்காலத்து நூலொன்று இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அத்துடன் வேக்குசன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலொன்று இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு நூல்களும் தனக்கு மூல நூல்களாகப் பயன்பட்டதாகப் புலவர் குறித்துள்ளார். இவை தவிர, தமது தந்தையார் முந்தைய நூல்களில் இருந்து கற்றுத் தனக்குச் சொன்ன விடயங்களையும், அக்கால உலக வழக்கையும் பயன்படுத்தியே இந்நூலை எழுதியதாகப் புலவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பு[தொகு]

தமிழின் செய்யுள் நடை மரபுக்கு அமைய பிள்ளையாரை வணங்கி, வெண்பா வகையில் அமைந்த காப்புப்பாடலுடன் இந்நூல் தொடங்குகிறது. இதன் பின்னர் "நூல்" என்ற தலைப்புடன் நூல் பகுதி தொடங்குகிறது. இதிலும் முதலில் கடவுள் வணக்கமாக ஒரு வெண்பாப் பாடல் உள்ளது. பின்னர் 400 க்குச் சிறிது மேற்பட்ட அடிகளுடன் கூடிய கலிவெண்பாப் பாடல் அமைந்துள்ளது. இறுதியில், மழை, பூமி, உயிர்கள், அறம், பனை, தமிழ் ஆகியவற்றை வாழ்த்தும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பாவுடன் நூல் நிறைவடைகிறது.

உள்ளடக்கம்[தொகு]

நூலின் உள்ளடக்கம் பெரும்பாலும் பனையின் பயன்களை விவரிப்பதாக அமைகின்றது. பனையின் வேரில் இருந்து குருத்து வரையான எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களுக்குக் கிடைக்கும் நூற்றுக்கு மேற்பட்ட பயன்கள் எடுத்துக் கூறப்படுகின்றன. வெறுமனே பயன்களைக் கூறாது, பல இடங்களிலே, குறித்த பொருட்கள் கிடைக்கும் காலம், அவற்றிலிருந்து பயன்படு பொருட்களைச் செய்யும் விதம், அவற்றினால் விளையும் நன்மைகள், பனையின் பகுதிகளைக் குறிப்பிடத் தமிழில் வழங்கும் சொற்கள் போன்ற பல தகவல்கள் செய்யுள் வடிவில் தரப்பட்டுள்ளன. நூலின் முக்கிய நோக்கம் பனையின் மேன்மைகளைக் கூறுவதும் அதன்பால் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுமே ஆயினும், நூல் கவி நயங்களுடன் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுவைகளுடன் கூடிய உவமைகளும் பல இடங்களிலே எடுத்தாளப்பட்டுள்ளன.

தோற்றம் பற்றிய கதை[தொகு]

நூலுக்குச் சுவை கூட்டுவதற்காகவும், பனையின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகவும் அதன் தோற்றம் பற்றி ஒரு கதையையும் புலவர் கற்பனையாகப் புனைந்துள்ளார்[1].

ஒரு காலத்தில், மக்களுடைய பசியைப் போக்குவதற்கும், வீட்டுக்குத் தேவையான தட்டுமுட்டுப் பொருட்களைச் செய்வதற்கும், நோய்களைப் போக்குவதற்கும் தேவையானவற்றை வழங்குவதற்கு, தேவலோகத்தில் உள்ள கற்பக தருவைப் போன்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லையே என்று வருத்தப்பட்ட இவ்வுலகத்தவர். சிவபெருமானைத் தொழுது வேண்டினராம். சிவபெருமானும் மனமிரங்கியவராய், உலகத்தைக் காக்கும் கடமையைச் செய்பவராகிய விட்டுணு மீது கோபம் கொண்டு, காத்தல் தொழிலிலிருந்து தவறியமைக்கான காரணம் என்னவென்று வினவினாராம். விட்டுணுவோ தன்னில் குறை எதுவும் இல்லையென்றும், படைப்புக் கடவுளான பிரமன் படைத்தவற்றுள் அவ்வாறான ஒன்று இல்லையென்றும் பணிவுடன் கூறினாராம். சிவனுடைய கோபம் பிரமன் மீது திரும்பவே அவரும் தனக்குத் தெரிந்தவற்றைத் தான் படைத்துள்ளேன் என்று பயத்துடன் கூறவே, உமாதேவியார் சிவனின் சினம் தணித்து, புவியில் அப்பொழுதே பனை மரத்தைப் படைக்குமாறு கூறினாராம். பிரமனும் உடனே பனை மரத்தைப் பனையூர், பனங்காட்டூர், பனந்தரையூர் என்னும் மூன்று தேசங்களில் படைத்தார் என்பது அக்கதை.

உவமை நயம்[தொகு]

தாலவிலாசம் நூலில் சுவை தரக் கூடிய உவமைகள் பரவலாகக் காணப்படுகின்றன. பனையினதும் அதன் வழியாகக் கிடைக்கும் பொருட்களினதும் பயன்களையும், அவற்றின் இயல்புகளையும் எடுத்துக் கூறும்போது உவமைகளைப் பெருமளவில் கையாண்டுள்ளார் புலவர். சாதாரண விடயங்கள் முதல் சமயத் தத்துவங்கள் வரை இவ்வுவமைகளுக்குக் கருப்பொருள் ஆவதையும் நூலில் காணமுடிகின்றது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

பனம்பழத்தின் களியைப் பாயில் பரவிக் காயவிட்டுப் பனாட்டுச் செய்வர். பனாட்டு மெல்லிய தகடாகப் பாயில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை உழவாரம் போன்ற ஒரு கருவியால் கவனமாக உரித்து எடுக்க வேண்டும். அல்லது பாயைக் கிழித்துவிடும். இதனைக் கூறும்போது,

".......................................... - செப்பமில்லாப்
புல்லர்பால் இச்சகம் பேசிப் பொருள் பெறல்போல்
மெல்ல மெல்லப் பாயிதழை வெட்டாமல் ...

என்று இச்செயலுக்கு கெட்டவர்களை நாசூக்காகப் புகழ்ந்து அவர்களிடம் இருந்து தந்திரமாகப் பொருள் பெறுவதை உவமையாகக் காட்டுகிறார்.

பனையின் விதை முளைவிட்டு, ஆடு மாடுகளுக்குத் தப்பி வளர்ந்துவிட்டால், அது பொய்யாமல் நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதை,

"முப்பாசந் தீர்த்த முனிவர்மொழி வாய்மைபோல்
எப்போதும் நின்று பயனீயுமே ..... "[2].

என்று பனை, முனிவர்களுடைய வாய்மொழி என்றென்றும் உண்மையாக விளங்கிப் பயன் தருவதுபோல் பயன் தரும் என்று பனைக்கு முனிவர்களது வாய்மொழியை உவமையாகக் கூறுகிறார்.

பனம் மட்டை எனப்படும் பனையின் ஓலையின் காம்பின் இரு புறமும் கருக்கு எனப்படும் கூரான விளிம்பு கொண்டு இரு புறமும் கூரான வாள் போல் தோற்றமளிக்கும். இதனையும், வேண்டியன அளித்து மக்களைக் காப்பதையும் கூறும்போது,

"............................................. பொல்லாக்
கலிகொன்று காமர் குடைக்கீழ்ப் - பொலியும்
உருக்குவாள் வேந்தன்போ லோரிருபாற் கூருங்
கருக்குவாள் கொண்டுலகைக் காக்கும்.... "[3].

பகை ஒழித்து வெண் கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்யும் உருக்கினால் ஆன வாளை ஏந்திய வேந்தனைப் பனைக்கு உவமையாகக் கூறுகிறார் புலவர்.

பழமொழிகள்[தொகு]

யாழ்ப்பாணத்தில் வழங்கிய பழமொழிகள் சிலவற்றையும் தேவைக்கேற்ப ஆங்காங்கே செய்யுள் நடைக்கு அமையப் புகுத்தியுள்ளார் புலவர். பத்து ஆண்டுகளில் பனை பயன் கொடுக்கத் தொடங்கும் என்பதைக் கூறும்போது பெண் பிள்ளைகளையும், பனையையும் ஒப்பிட்டுக் கூறும் பழமொழியை "பெண்பிளையும் தண்பனையும் பேணிவளர்த்தால் வருடம் பண்பிலொரு பத்தில் பயன் கொடுக்கும் "[4] என்கிறது தாலவிலாசம்.

பனை இருந்தாலும் நீண்ட காலம் வாழ்ந்து பயன்கொடுக்கும், வெட்டி வீழ்த்திய பின்னும் தூண், துலா, வளை போன்ற பல்வேறு பொருட்களாக நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதைக் குறிக்கும் பழமொழியை, "நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா " என்று நூலில் புகுத்தியுள்ளார் புலவர்.

சொற்கள்[தொகு]

தாலவிலாசத்தில் பல பனையோடு தொடர்புள்ள சொற்கள் காணப்படுகின்றன. இவற்றுட் சில பனையின் உறுப்புக்களைக் குறிப்பவை. வேறு சில பனையிலிருந்து செய்யப்படும் பொருட்களைக் குறிப்பவை. இன்னும் சில பனை தொடர்பில் செய்யப்படும் செயற்பாடுகளைக் குறிப்பவை. இவற்றுட் சிலவற்றைக் கீழ்வரும் பட்டியலில் காணலாம்.

 • பனையின் பெயர்கள்:
  • பனை, புற்பதி, தாலம், பெண்ணை, பொந்தி, காகக் கருப்பை, கருங்குந்தி, செங்குந்தி, கட்டைச்சி, பூமணத்தி, கங்கி நுங்கி, கொட்டைச்சி
  • வடலி (இளம் பனை)
 • பனையின் உறுப்புக்கள்:
  • கங்கு மட்டை
  • கங்குமட்டைத் தும்பு
  • கருக்கு
  • பன்னாடை
  • பாளை
  • குரும்பை
  • நுங்கு
  • நுங்குணவு
  • பனங்காய், பணுவில்
  • பனம்பழம்
  • கிழங்கு (பனங்கிழங்கு)
  • ஊமல்
  • பனங்காய் முகிழ்
  • பனங்கொட்டை
  • பூரான்
  • ஓலை (பனையோலை)
  • மட்டை (பனம் மட்டை)
  • நார் (பனம்நார்)
  • குருத்து (பனங்குருத்து)
 • உற்பத்திப் பொருட்கள்:
  • சார்வாயுணவு
  • பனங்காய்க் கழி
  • பணிகாரம் (பனங்காய்ப் பணிகாரம்)
  • பனாட்டு
  • காடி
  • பாணிப்பனாட்டு
  • தோற்பனாட்டு
  • உமல்
  • ஒடியல்
  • பிட்டு (ஒடியற்பிட்டு)
  • கூழ் (ஒடியற்கூழ்)
  • சுட்ட கிழங்கு
  • புழுக்கொடியல்
  • முளைக்கறி
  • கரி (ஊமற்கரி)
  • கள் (பனங்கள்)
  • ஏரா
  • பதநீர், கருப்பநீர்
  • கற்கண்டு (பனங்கற்கண்டு)
  • ஓலைக்குட்டான்
  • கடைகாப்பு
  • பன்னவகை
  • புத்தகப் பெட்டி
  • கட்டுப்பெட்டி
  • வித்தகப்பெட்டி
  • குட்டான்
  • கடகம்
  • பத்தாயம்
  • கதிர்ப்பாய்
  • கிடைபாய்
  • நீரிறைக்கும் பட்டை
  • மங்கல நாளோலை
  • தூதோலை
  • காதோலை
  • கணக்கோலை
  • வரையோலை
  • மந்திரவோலை
  • விசிறி
  • வள்ளத்தலைப்பா
  • பிளா
  • உரையோலை
  • ஈர்க்கு
  • ஈர்வாணி
  • முறம்
 • தொழிற்பெயர்கள்:
  • பன்னஞ்செய்தல்
  • பாத்தி போடுதல்
  • கிழங்கு கிண்டுதல்
  • நுனிவாலொடித்தல்
  • வான்முறித்தல்
  • கிழங்கு புழுக்குதல்
  • புகையிடுதல்

குறிப்புக்கள்[தொகு]

 1. தாலவிலாசம் அடிகள் 10-49
 2. தாலவிலாசம் அடி 58
 3. தாலவிலாசம் அடி 61
 4. தாலவிலாசம் அடி 72

உசாத்துணைகள்[தொகு]

 • சோமசுந்தரப்புலவர், க. தாலவிலாசம், தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்கம், 1940.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலவிலாசம்&oldid=2743062" இருந்து மீள்விக்கப்பட்டது