தாராக்கான் போர் (1945)
| ||||||||||||||||||||||||||||||||
தாராக்கான் போர் (ஆங்கிலம்: Battle of Tarakan; மலாய்: Pertempuran Tarakan) என்பது இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய கட்டுப்பாட்டில் இருந்த போர்னியோ தாராக்கான் தீவில் நடந்த போராகும். இந்தப் போர் நேச நாடுகளுக்கும்[2] சப்பானிய படைகளுக்கும் இடையில்; 1945 மே மாதம் தொடங்கி 1945 சூன் மாதம் வரையில் நடந்தது. இது இரண்டாம் உலகப் போரின் போர்னியோ போர்த் தொடரில் முதல் கட்டமாகும்.
தாராக்கானைத் தாக்குவதில் நேச நாடுகளின் முக்கிய குறிக்கோள், தாராக்கான் தீவின் வானூர்தி நிலையத்தைக் கைப்பற்றி, போர்னியோவில் மேலும் தாக்குதல்களை விரிவுபடுத்தும் வகையில் அந்தத் தீவை ஒரு தளமாக மாற்றி அமைப்பதாகும்.
நேச நாட்டுப் படைகள்; ஆத்திரேலிய 26-ஆவது படைப்பிரிவு (26th Brigade) மற்றும் ஒரு சிறிய நெதர்லாந்து கிழக்கு இந்தியப் படையணியைக் கொண்டு தாக்குதல்களைத் தொடுத்தன.[3] மே 1, 1945 அன்று தென்மேற்கு தாராக்கான் தீவில், முதன்முறையாக ஒரு நிலநீர் போர்த் தாக்குதலைத் தொடக்கின. இதற்கு முன்பு அவை பல வாரங்களாக முன்னீடான வான் கடற்படை குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் மேற்கொண்டன.[4]
இந்த நடவடிக்கைக்கு ஆத்திரேலிய மற்றும் அமெரிக்க வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகள் பெரிய அளவில் ஆதரவளித்தன.[5]
பொது
[தொகு]
இந்தத் தாக்குதலை சப்பானிய படைகள் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்தன. பல நாட்கள் சண்டைக்குப் பிறகு சப்பானிய படைகள் தாராக்கான் தீவின் மையத்தில் உள்ள தற்காப்பு நிலைகளுக்குப் பின்வாங்கின. தாக்குதல்கள் பல வாரங்கள் நீடித்தன. ஆத்திரேலிய படைகளுக்கு ஆத்திரேலிய – அமெரிக்க வான்படைகள் தொடர்ந்து ஆதரவுகளை வழங்கின.[6][7] பெரும்பாலான சப்பானிய எதிர்ப்புகள் 1945 சூன் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்தன.
படையெடுப்பின் முக்கிய நோக்கமாக இருந்த தாராக்கான் வானூர்தி நிலையம், படையெடுப்புக்கு முந்தைய குண்டுவீச்சுகளால் பெரிதும் சேதமடைந்து இருந்தது. போர்னியோ போரின் கடைசி கட்டம் வரையிலும் அந்த நிலையத்தை வழக்கமான பயன்பாட்டுச் சேவைக்குள் கொண்டு வர இயலவில்லை.
தாராக்கான்
[தொகு]
தாராக்கான் என்பது இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் மாநிலத்தின், பெருநகரம் மற்றும் தீவு ஆகும். வடக்கு கலிமந்தான் மாநிலத்தில், உள்ள மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியாக விளங்கும் இந்தத் தீவு நகரம் வடக்கு போர்னியோ, வடக்கு கலிமந்தான் மாநிலத்தின் சுலாவெசி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
இடச்சு கிழக்கிந்திய குடியேற்ற காலத்தில், தாராக்கான் ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியமாக இருந்தது.[8] பசிபிக் போரின் போது இந்தத் தீவு நகரம், பெரும் உத்திசார் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. மேலும் போர்னியோ போர் தொடக்கத்தில் அரச சப்பானிய இராணுவத்தின் முதல் இலக்குகளில் இந்த நகரமும் ஒன்றாகும்.
1942 சனவரி 10 அன்று சப்பான், நெதர்லாந்து கிழக்குத் தீவுகள் மீது போரை அறிவித்தது. அரச சப்பானிய இராணுவத் துருப்புக்கள் மறுநாள் தாராக்கானில் தரையிறங்கின.[9] நெதர்லாந்து ஒரு மாதத்திற்கு முன்பே சப்பான் மீது போரை அறிவித்திருந்தது.[10] இதன் பின்னர் தாராக்கான் போர் தொடங்கியது.
சப்பானியர் காலம்
[தொகு]
பசிபிக் போரின் போது தாராக்கானின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதே சப்பானின் தொடக்கக்கால நோக்கங்களில் ஒன்றாகும். சப்பானியப் படைகள் சனவரி 11, 1942 அன்று தாராக்கான் தீவின் கிழக்குக் கடற்கரையில் தரையிறங்கின. இரண்டு நாட்கள் நடந்த சண்டையில் அவர்கள் சிறிய இடச்சு தற்காப்புப் படையைத் தோற்கடித்தன. இடச்சு தற்காப்புப் படைகளில் பாதி பேர் சண்டையில் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சரணடைதலுக்கு முன்னர் இடச்சுக்காரர்கள் எண்ணெய் வயல்களைப் பெரிய அளவில் சேதப்படுத்தி விட்டனர். இருப்பினும் சப்பானிய பொறியாளர்கள் விரைவாகச் செப்பனிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். சப்பானியர்கள் தாராக்கான் தீவைக் கைப்பற்றிய பின்னர், அதாவது 1944-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு மாதமும் 350,000 பீப்பாய்கள் எண்ணெய் தாராக்கான் தீவில் உற்பத்தி செய்யப்பட்டது.[11] இதற்கு முன்னர் 1941-ஆம் ஆண்டில், தாராக்கான் தீவின் இரண்டு எண்ணெய் வயல்கள் மாதத்திற்கு 80,000 பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்தன.[12]
பொதுமக்கள் மீதான வன்முறைகள்
[தொகு]
சப்பானின் படையெடுப்புக் கொள்கைகளால் தாராக்கானில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். தீவில் நிறுத்தப்பட்டிருந்த அதிக எண்ணிக்கையிலான சப்பானிய படை வீரர்களினால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டன. மேலும் பொதுமக்களில் பலர் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டனர்.
சப்பானிய அதிகாரிகள் ஜாவா தீவில் இருந்து தாராக்கானுக்கு 600 ஆண் தொழிலாளர்களை அழைத்து வந்தனர். அந்தத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டனர். தாராக்கானில் துணி தயாரிப்பு வேலைகள் உள்ளன எனும் போலியான வாக்குறுதிகளை நம்பிய 300 ஜாவானிய பெண்கள் தாராக்கானுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் இவர்கள் சப்பானிய படையினருக்குப் பால்வினைத் தொழில் பெண்களாகச் சேவை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.[13]
வான் தாக்குதல்கள்
[தொகு]
தாராக்கானில் இருந்து ஆகக் கடைசியாக ஒரு சப்பானிய எண்ணெய்க் கப்பல், சூலை 1944 இல் அங்குள்ள துறைமுகத்தில் இருந்து வெளியேறியது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த கடுமையான நேச நாட்டு வான் தாக்குதல்கள் தாராக்கானில் உள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகளையும் அழித்து விட்டன. இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான இந்தோனேசிய பொதுமக்களும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[14] நேச நாடுகளின் படையினர் தாராக்கான் அருகே கடல் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்தனர். இதனால் சப்பானிய வணிகக் கப்பல்கள் தீவிற்குள் வருவதும் தடுக்கப்பட்டன.[3]
1945-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தாராக்கானில் சப்பானியப் படைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. தீவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சப்பானிய காலாட்படை படைப்பிரிவுகளில் ஒன்றான 454-ஆவது சப்பானிய காலாட்படை பாலிக்பாப்பானுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் அந்தக் காலாட்படை சூலை மாதம் பாலிக்பாப்பான் போரில் (Battle of Balikpapan) ஆத்திரேலிய இராணுவத்தின் 7-ஆவது படைப்பிரிவால் அழிக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hastings & Stanley 2016, ப. 281.
- ↑ McCarthy 2023, ப. 30.
- ↑ 3.0 3.1 Stanley 1997, ப. 9.
- ↑ 4.0 4.1 Long 1963, ப. 503.
- ↑ "400 Indische Collectie: NICA Tarakan". Achieven.nl. Retrieved 2 October 2019.
- ↑ McCarthy 2023, ப. 33.
- ↑ Horner 2022, ப. 198.
- ↑ Rottman 2002, ப. 259.
- ↑ Dull, Paul S. (12 November 2013). A battle history of the Imperial Japanese Navy, 1941-1945 (1978). Naval Institute Press. ISBN 9781612512907.
- ↑ Dull, Paul (12 December 2012) [1978]. "Isolation of Java". A Battle History of the Imperial Japanese Navy: 1941-1945. Annapolis, Maryland: Naval Institute Press. pp. 61–62. ISBN 9781612512907. Retrieved 22 April 2024.
- ↑ Stanley 1997, ப. 7–9.
- ↑ Long 1963, ப. 406–408.
- ↑ Stanley 1997, ப. 8–9.
- ↑ Stanley 1997, ப. 57.
நூல்கள்
[தொகு]- Hastings, Tony; Stanley, Peter (2016). "'To capture Tarakan': Was Operation Oboe 1 Unnecessary?". In Dean, Peter J. (ed.). Australia 1944–45. Port Melbourne, Australia: Cambridge University Press. pp. 278–297. ISBN 9781107083462.
- Horner, David (2022). The War Game: Australian War Leadership from Gallipoli to Iraq. Crows Nest, NSW: Allen & Unwin. ISBN 978-1-76106-595-8.
- Long, Gavin (1963). The Final Campaigns. Australia in the War of 1939–1945. Series 1 – Army. Volume VII. Canberra: Australian War Memorial. கணினி நூலகம் 1297619.
- Long, Gavin (1973). The Six Years War: Australia in the 1939–45 War. Canberra: Australian War Memorial and the Australian Government Publishing Service. ISBN 0-642-99375-0.
- McCarthy, Dayton (2023). The Oboe Landings: 1945. Newport, New South Wales: Big Sky Publishing. ISBN 978-1-922615-80-0.
- Stanley, Peter (1997). Tarakan: An Australian Tragedy. Sydney: Allen & Unwin. ISBN 1-86448-278-8.
- Rottman, Gordon L. (2002). World War II Pacific Island Guide. A Geo-Military Study. Westport: Greenwood Press. ISBN 0-313-31395-4.
மேலும் காண்க
[தொகு]- வடக்கு போர்னியோ போர்
- இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்
- இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் சப்பானிய ஆக்கிரமிப்பு
- பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு
- பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம்
மேலும் படிக்க
[தொகு]- Coombes, David (2001). Morshead: Hero of Tobruk and El Alamein. Australian Army History Series. Oxford University Press. ISBN 0-19-551398-3.
- Craven, Wesley; Cate, James, eds. (1953). The Pacific: Matterhorn to Nagasaki. The Army Air Forces in World War II. Volume V. Chicago: The University of Chicago Press. கணினி நூலகம் 256469807.
- Ogawa, Itsu (1980) [1957]. "Japanese Monograph No. 26: Borneo Operations (1941–1945)". War in Asia and the Pacific. Vol. 6. The Southern Area (Part I). New York and London: Garland Publishing, Inc. ISBN 0-8240-3290-X.
- Royal Navy (1959). Naval Staff History Second World War: War with Japan, Volume VI; The Advance to Japan. London: Her Majesty's Stationery Office. ISBN 0-11-772821-7.
- Stanley, Peter (1995). "An Oboe Concerto: Reflections on the Borneo Landings, 1945". In Wahlert, Glenn (ed.). Australian Army Amphibious Operations in the South-West Pacific: 1942–45 (PDF). Canberra: Army Doctrine Centre. pp. 74–86. ISBN 9780642226679. Archived from the original (PDF) on 2020-03-27.
- Walker, Allan Seymour (1957). The Island Campaigns. Australia in the War of 1939–1945. Vol. Series 5 – Medical. Volume III. Canberra: Australian War Memorial. கணினி நூலகம் 249848614.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Category:Battle of Tarakan (1945) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Operations instructions no 99, Tarakan Island, March 1945