தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்குத் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்குத் தொழில் (Tapioca industry of Thailand) தாய்லாந்தின் விவசாயப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்லாந்து போன்ற வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. மரவள்ளிக் கிழங்கு உணவாகப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் தாவர தரசத்தையும் கொடுக்கிறது[1]. பல பொருட்களில் இத்தாவர தரசம் பாகுநிலை முகவராகவும் நிலைநிறுத்தியாகவும் பயன்படுகிறது. தாவர தரசம் அல்லது தாவர மாவுச்சத்து என்பது மாவுச்சத்தைக் கொண்டுள்ள தாவரங்களில் இருந்து பெறப்படும் தூளாகும். மரவள்ளித் தாவரத்தின் வேரிலிருந்து தாவரத் தரசம் பிரித்தெடுக்கப்படுகிறது. பிற தாவரங்கள் வளரவியலாத, வறண்ட வானிலை மற்றும் குறைந்த ஊட்டச்சத்து கொண்ட மண்ணிலும் கூட மரவள்ளி நன்கு வளரும் திறன் கொண்ட தாவரமாகும். நிலத்தடியில் மரவள்ளி வேர்களை 24 மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும், சில இனங்களை 36 மாதங்கள் கூட சேமிக்கலாம். சந்தை நிலைமைகளுக்கு ஏற்பவும் தாவர தரசம் உற்பத்திக்கு சாதகமான சூழல் உருவாகும் வரை மரவள்ளிக் கிழங்கு வேர்கள் சேமிப்பு நீட்டிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

தென் அமெரிக்காவில் 3000 முதல் 7000 ஆண்டுகளுக்கு முன்னரே மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நடைபெற்றுள்ளது. போர்த்துக்கேயர்களும், எசுப்பானியர்களும் 17 ஆம் நூற்றாண்டில் மரவள்ளியை மெக்சிகோவிலிருந்து பிலிப்பைன்சுக்கு கொண்டு சென்றனர். 18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இதை இந்தோனேசியாவிற்கு அறிமுகம் செய்தனர். தாய்லாந்திற்கு மரவள்ளிக்கிழங்கு முதலில் எப்பொழுது வந்தது என்பதில் தெளிவான அறுதியிடல் ஏதுமில்லை. 1786 இல் [2] மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதை ஊகிக்கமுடிகிறது.

மரவள்ளிக் கிழங்கு வணிக நோக்கில் முதன்முதலாக தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் பயிரிடப்பட்டது. இயற்கை ரப்பர் மர வரிசைகளின் இடையே ஊடுபயிராக நடப்பட்டது, குறிப்பாக இது சாங்களா மாகாணத்தில் அதிகமாகப் பயிரிடப்பட்டது. சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் ஏற்றுமதி செய்வதற்கான மரவள்ளிக் கிழங்கு மாவும், சவ்வரிசி மணிகளும் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளும் இம்மாகாணத்தில்தான் நிறுவப்பட்டன. நாளடைவில் இரப்பர் மரங்களின் எண்ணிக்கை அதிகமானதால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி குறையத் தொடங்கியது. இதனால் தாய்லாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சோன்புரி மற்றும் ரேயாங் மாகாணங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடுதல் இடம்மாறியது. சந்தையில் மரவள்ளிக் கிழங்கின் தேவை அதிகரித்த காரணத்தால் மற்ற மாகாணங்களும் மரவள்ளிச் சாகுபடியில் இறங்கின. குறிப்பாக தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இசான் மாகாணம் அதிகமான அளவில் பயிரிடத் தொடங்கியது[3]

வகைகள்[தொகு]

இரண்டு வகையான மரவள்ளிக் கிழங்கு வகைகள் தாய்லாந்தில் பயிரிடப்படுகின்றன. கசப்பு மரவள்ளி வகை தாய்லாந்தில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது[2].

 • இனிப்பு வகை: சயனிக் அமிலத்தின் அளவு குறைவாக இருக்கும் வகை மரவள்ளிக் கிழங்கு இனிப்பு வகை மரவள்ளிக் கிழங்கு எனப்படுகிறது. மனிதர்களும் விலங்குகளும் இவ்வகை மரவள்ளியை உட்கொள்கின்றனர்.
 • கசப்பு வகை: சயனிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் மரவள்ளிக் கிழங்கு கசப்பு வகை மரவள்ளிக் கிழங்காகும். இவ்வகை நச்சுத்தனமை கொண்டதாகும். நேரடி உணவாக இதை மனிதர்களும் விலங்குகளும் எடுத்துக் கொள்ள முடியாது. மாவாக, குறுணைகளாக, மதுச்சாரமாக அல்லது வேறு வழிப்பொருளாக நன்றாகப் பதப்படுத்தி பின்னரே உட்கொள்ள முடியும்.

உற்பத்தி[தொகு]

தாய்லாந்தின் 76[3] மாகாணங்களில் 48 மாகாணங்கள் மரவள்ளிக் கிழங்கைப் பயிரிடுகின்றன. 2015-2016 சாகுபடி ஆண்டில் 8.8 மில்லியன் இராய் (1இராய்=1600மீ2) பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கை தாய்லாந்து நாடு சாகுபடி செய்துள்ளது. விளைச்சலில் 33 மில்லியன் டன் மரவள்ளிக் கிழங்கு தாவர தரசமாகும்[4]. தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் அதிகமான அளவில் மரவள்ளிக் கிழங்கு நடப்படுகிறது. நகோன் ராட்சசிமா, கம்பாயிங்கு பெட், சையாபும், சாகாயிவோ மற்றும் சாகோயிங்சாவோ போன்ற மாகாணங்கள் மிக அதிகமான அளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் மாகாணங்களாகும்[5].

தாய்லாந்தில் மூன்று வகையான மரவள்ளிக்கிழங்குத் தொழிலகங்கள் காணப்படுகின்றன.

 • தாவர தரசம் உற்பத்தி செய்தல் (மாவு, கஞ்சி கட்டி)
 • மாற்றியமைப்புத் தரசம்
 • தரச வழிப்பொருட்கள் குளுக்கோசு, பிரக்டோசு போன்றவை.

பொருளாதாரம்[தொகு]

உலகில் மிக அதிக அளவான மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடு நைசீரியா எனினும், உலக உணவு அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, கூடிய அளவு மரவள்ளியை ஏற்றுமதி செய்யும் நாடு தாய்லாந்து ஆகும். 2005 ஆம் ஆண்டில் உலக மொத்த ஏற்றுமதியின் 77% தாய்லாந்திலிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டது[6].

மேற்கோள்கள்[தொகு]

 1. "Native and Modified Starches". பார்த்த நாள் 20 November 2016.
 2. 2.0 2.1 "What is tapioca". பார்த்த நாள் 21 November 2016.
 3. 3.0 3.1 "Tapioca Background". பார்த்த நாள் 20 November 2016.
 4. "Tapioca Production". பார்த்த நாள் 20 November 2016.
 5. Office of Agricultural Economics, Ministry of Agriculture and Cooperatives, 2007
 6. Mydans, Seth (2010-07-18). "Wasps to Fight Thai Cassava Plague". The New York Times. http://www.nytimes.com/2010/07/19/world/asia/19thai.html. 

புற இணைப்புகள்[தொகு]