தாமரன்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமரன்கோட்டை
—  கிராமம்  —
தாமரன்கோட்டை
இருப்பிடம்: தாமரன்கோட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32ஆள்கூறுகள்: 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் திரு. கனகசபை(வடக்கு)

திரு. வடிவேல் (தெற்கு)

மக்கள் தொகை 10,530 (2006)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


5 மீட்டர்கள் (16 ft)

தாமரன்கோட்டை (Thamarankottai), தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு[4] உட்பட்ட ஒரு வேளாண் ஊர் . பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் தாமரன்கோட்டை அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் கீழும், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது.

மக்கள் அமைப்பு[தொகு]

தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊர்களைப்போல் தாமரன்கோட்டையும் வகுப்பு அடிப்படையிலான மக்கள் அமைப்பை கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்விலும், பொருளாதாரத்திலும், மக்கள் உயர்வு தாழ்விலும் வகுப்பு முதன்மை பங்கு வகிக்கிறது. பெரும்பான்மையானவர்கள் உழவுத்தொழில் புரியம் மக்கள். மற்றையோர் உழவுசார் தொழில் புரிபவர்கள்.

மக்கள் தொகை[தொகு]

இந்திய அரசாங்கத்தின் கடந்த கணக்கெடுப்பின்படி தாமரன்கோட்டை வடக்கில் 1,460 வீடுகளில் 6,031 பேரும்(2,872 ஆண்கள், 3,159 பெண்கள்), தாமரன்கோட்டை தெற்கில் 1110 வீடுகளில் 4,499 பேரும்( 2,156 ஆண்கள் 2,343 பெண்கள்) வசிக்கிறார்கள்..[5]

வேளாண்மையும் பொருளாதாரமும்[தொகு]

வேளாண்மையே தாமரன்கோட்டையின் முக்கிய பொருளாதாரமாக விளங்குகிறது. காவிரி பாசனத்திட்டத்தின் கீழ் வந்தாலும், கடைமடைப் பகுதியாக இருப்பதால், ஆற்று நீர் பெரும்பாலும் இந்த பகுதி நிலங்களுக்கு வருவதில்லை. ஆழ்குழாய் கிணறுகளில் இருந்தே பெரும்பாலான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அது தவிர பருவ மழைகளின் உதவியுடன் பெரும்பான்மையான நிலங்களில் முப்போகம் பயிரிடப்படுகின்றன. இரண்டு போகம் நெல்லும்(சம்பா மற்றும் குறுவை) ஒரு போகம் மாற்றுப் பயிரும்(நிலக்கடலை, உளுந்து மற்றும் எள்) சாகுபடி செய்யப்படுகின்றன. நெல்லைத்தவிர, தென்னை ஒரு முக்கியமான பயிராகும். சமீப காலங்களில், வெகுவான நஞ்சை நிலங்கள், தென்னை பயிரிடப்பட்டு புஞ்சை நிலத்தோப்புகளாக மாற்றப்படுகின்றன. தென்னந்தோப்பின் மூலம் வருடம் முழுவதும் வருமானம் வருவதும், நெல் பயிரிடுவதில் உள்ள அதிக வேலையும், வேளாண் கூலித்தொழிலாளர் பற்றாக்குறையும் அதற்கு முக்கிய காரணிகளாகும்.

விரிவடைந்துவரும் மக்கள் தொகையையும், மக்களின் பொருளாதார வேலைவாய்ப்புத் தேவைகளையும் உழவுத்தொழிலால் மட்டுமே இப்பொழுது பூர்த்தி செய்யமுடியவில்லை. மாற்றுத் தொழில்களும் பரவலாகி வருகின்றன. பெரும்பாலான இளைஞர்கள் வேலைதேடி சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம், மலேசியா போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். சமீப காலமாக ஜப்பான், பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்கு வேலைதேடி புலம் பெயர்வதும் பரவலாகிவருகிறது.

கல்வி[தொகு]

எழுத்தறிவு பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. ஆனாலும் தமிழக சராசரியை விட அதிகம் என்று கருதப்படுகிறது. வேளான்மை செழித்து வந்ததால் காலகாலமாக மக்கள் கல்வியின்பால் அதிக கவனம் செலுத்தவில்லை. சமீப காலங்கள், கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு பெரும்பான்மையானோர் குறைந்தபட்சம் கல்லூரி வரை கல்வி பயில முயற்சிக்கின்றனர். இவ்வூரில் ஒரு மேல்நிலைப்பள்ளியும், இரண்டு அரசு தொடக்கப் பள்ளிகளும் உள்ளன. ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் உள்ளது.[6]

மதம் மற்றும் கோயில்கள்[தொகு]

பெரும்பாலான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர். இரண்டு அல்லது மூன்று இசுலாமிய மற்றும் கிரித்துவ குடும்பங்கள் தொழில் சார்ந்து வசித்து வருகின்றனர். இது ஒரு சிற்றூராயினும் நிறைய கோயில்கள் உள்ளன.

கண்டேசுவரர் கோயில் (சிவன் கோயில்)

இவ்வூரின் மிகப்பெரியதும் மிகப் பழைமையானதுமானது இக்கோயில்.[7] இது ஒரு பாடல் பெறாத தலம். இதன் வரலாறை இதுவரை யாரும் சரியாக ஆராய்ந்து ஆவணப்படுத்தவில்லை. இவ்வூரின் மிகப்பெரிய நிலக்கிழாரும் இந்த கோயிலே. சுமார் 40 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் இந்த கோயிலுக்கு சொந்தம். வைகாசி மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு சிறப்பாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தவிர, ஒவ்வொரு பிரதோசமும் சிவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய கடவுளாக கண்டேசுவரர் இருக்கிறார். கூடுதலாக, வினாயகர், முருகன், பைரவர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

தீக்குதித்த அம்மன் கோயில்

தனது கனவனின் சிதையில் இறங்கி உயிர்துறந்த ஒரு மூதாதையரை கடவுளாகக் கொண்டது இக்கோயில். உடன்கட்டை ஏறுவது இவ்வூரில் முன்போ இப்போதோ அதிகமாக புழக்கத்தில் இல்லை. இருப்பினும் இத்தலம் இவ்வூரில் அதிக பக்தியுடனும் மரியாதையுடனும் வணங்கப்படுகிறது. சித்திரை முதல் ஞாயிறன்று, நாற்பது நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த பக்கதர்கள்(ஆண்கள் மட்டுமே) அம்மனின் ஆசி கோரி தீக்குழியில் நடந்து சென்று அம்மனை வழிபடுவர்.[8][9]

இதர கோயில்கள்

வீரனார், அய்யனார், முனியடியார் போன்ற காவல் தெய்வங்களுக்கான கோயில்களும் உள்ளன. வினாயகர் கோயிலும் அய்யப்பன் கோயிலும் உள்ளன. இவ்வூரில் பல ஆண்டுகளாக இருந்த ஒரு முருகன் கோயில் தற்போது சிதைவுண்ட நிலையில் உள்ளது.

மற்ற நிறுவனங்கள்[தொகு]

  1. 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம்
  2. வேளாண்மைக் கூட்டுறவு வங்கி
  3. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகலகத்தின் நெல் கொள்முதல் நிலையம்
  4. சிட்டி யூனியன் வங்கி
  5. இந்திய அஞ்சல் நிலையம்
  6. மின்வாரியத்தின் துணை மின்நிலையம்

உள்ளாட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள்[தொகு]

தாமரன்கோட்டை ஒரு ஊராட்சியாகும். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தாமரன்கோட்டை பிரதிநிதி பதவியை திரு. கனகசபை (தாமரன்கோட்டை வடக்கு) திரு. வடிவேல் (தாமரன்கோட்டை தெற்கு) வகித்துவருகிறார்கள்.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

வடக்கில் வாட்டாகுடி, அத்திவெட்டி, கிழக்கில் பரக்கலக்கோட்டை, தென்கிழக்கில் செங்கப்படுத்தான்காடு, மஞ்சவயல், மறவக்காடு, மேற்கில் துவரங்குறிச்சி, மன்னங்காடு ஆகிய ஊர்கள் தாமரங்கோட்டையை சுற்றி அமைந்துள்ளன.

தொடர்புடைய கட்டுரைகள்[தொகு]

  1. தமிழன் சடுகுடு மன்றம்

வெளி இணைப்புகள்[தொகு]

  1. தாமரன்கோட்டை இணைய தளம்
  2. Kumaran Teacher Training Institute

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரன்கோட்டை&oldid=3155588" இருந்து மீள்விக்கப்பட்டது