தாமனும், பித்தியாசும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமனின் கதை (Damon (/ˈdmən/; கிரேக்கம்: Δάμων, gen. Δάμωνος) மற்றும் Pythias (/ˈpɪθəs/; பண்டைக் கிரேக்கம்Πυθίας அல்லது பண்டைக் கிரேக்கம்Φιντίας; அல்லது Phintias, /ˈfɪntiəs/) என்பது பண்டைய கிரேக்க வரலாற்று எழுத்துக்களில் உள்ள ஒரு தொன்மக்கதையாகும். இது நட்பின் மேன்மையை விளக்குகிறது. சிரக்கூசாவின் சர்வாதிகாரியான தியோனீசியசுக்கு எதிராக சதி செய்ததாக பித்தியாசு மீது குற்றம் சாட்டப்படுகிறது. பித்தியாசு தனது கடமைகள் சிலவற்றை முடித்துவர அனுமதிக்குமாறு தியோனீசியசைக் கோருகிறார். பிதியாசின் நண்பனான தாமன் பிணைக் கைதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தியோனீசியசு அதற்கு ஒப்புக்கொள்கிறார். அதன்படி பித்தியாசு திரும்பி வராவிட்டால், அவருக்குப் பதிலாக தாமன் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதாகும். சரியான நேரத்தில் பித்தியாசு திரும்பி வருகிறார். அவர்களின் நட்பில் உள்ள அன்பையும் நம்பிக்கையையும் கண்டு வியந்த தியோனிசியசு அவர்கள் இருவரையும் விடுவிக்கிறார்.

கிரேக்க தொன்மக்கதை[தொகு]

தாமனும், பிதியாசும்

அரிஸ்டோக்செனஸ் கூற்றின்படி, பித்தியாசு மற்றும் அவரது நண்பர் தாமன், மற்றும் பலர் மெய்யியலாளர் பிதாகரசை பின்பற்றுபவர்கள், கொடுங்கோலன் முதலாம் தியோனீசியசின் ஆட்சியின் போது சைராகசுக்கு பயணம் செய்தனர். சர்வாதிகாரிக்கு எதிராக பித்தியாசு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

தனக்கு விதிக்கபட்ட தண்டனையை ஏற்றுக்கொண்ட பித்தியாசு, தனது குடும்பத்தினரைச் சந்தித்து, குடும்ப காரியங்கள் சிலவற்றை ஒழுங்கு படுத்திவிட்டு விடைபெற்று வர கடைசியாக ஒருமுறை வீட்டிற்குத் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என்று மன்னரைக் கேட்டுக் கொண்டார். தான் முட்டாளாக விரும்பாத மன்னர் அதற்கு மறுத்துவிட்டார். பித்தியாசை விடுவித்தால், தப்பி ஓடிவிடுவார், திரும்பி வரமாட்டார் என்று அவர் கருதினார். பித்தியாசு வரும்வரை அவருக்கு பதிலாக தன்னை பணயக்கைதியாக்கிக்கொள்ள தாமன் ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நேரத்திற்குள் பித்தியாசு திரும்பவில்லை என்றால், தாமன் அவருக்குப் பதிலாக தூக்கிலிடப்படுவார் என்று மன்னர் கூறினார். இதற்கு தாமன் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு பித்தியாசு விடுவிக்கப்பட்டார்.

பித்தியாசு திரும்பி வரமாட்டார் என்று தியோனீசியசு உறுதியாக நம்பினார். மேலும் பித்தியாசு திரும்பி வருவதாக உறுதியளித்த நாள் வந்தது விட்டது. தாமனுக்கு மரணதண்டனை நிறைவேற்ற மன்னர் கட்டளையிட்டார். ஆனால் மரணதண்டனை நிறைவேற்றுபவர் தாமனைக் கொல்லப் போகும் நேரத்தில், பித்தியாசு வந்துவிடுகிறார்.

தாமதத்திற்கு தனது நண்பரிடம் மன்னிப்புக் கேட்டார். சைராகசுக்குத் திரும்பும் வழியில், கடற்கொள்ளையர்கள் தனது கப்பலைக் கைப்பற்றி இவரைக் கப்பலில் இருந்து தூக்கி எறிந்தனர். ஆனால் இவர் கரைக்கு நீந்திச் வந்து, சீராகுசுக்கு சரியான நேரத்தில் விரைவாகத் திரும்பி வந்து தன் நண்பனை காப்பாற்றினார்.

இவர்களின் நட்பைக் கண்டு வியந்து, மகிழ்ச்சியடைந்த தியோனீசியசு இருவரையும் மன்னித்தார். மேலும் சர்வாதிகாரி அவர்களின் நட்பை வியந்து அவர்களின் மூன்றாவது நண்பராக மாற விரும்பினார். ஆனால் அது மறுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மற்றொரு பதிப்பு இது மன்னர் மற்றும் அவரது பிரபுக்களால் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட சோதனை என்று கூறுகிறது. பித்தகோரியர்கள் தார்மீக வலிமை மற்றும் மேன்மைக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் சிரக்கூசா அரசவையில் இருந்த சிலர் இந்த கூற்றை தவறானது என்று வாதிட்டனர். மற்றவர்கள் உடன்படவில்லை, எனவே அவர்கள் அரசனுடன் சேர்ந்து ஒரு சோதனை செய்ய திட்டம் வகுத்தனர். இரண்டு பித்தகோரியன்கள் நெருக்கடியின்போது அந்த நற்பெயருக்கு ஏற்றவாறு வாழ்வார்களா என்பதைக் கண்டறிய செய்யப்பட்ட சோதனை இது எனவும் கூறப்படுகிறது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. Ferguson, Kitty (2008). Pythagoras His Lives and the Legacy of a Rational Universe. Walker. பக். 119. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமனும்,_பித்தியாசும்&oldid=3368591" இலிருந்து மீள்விக்கப்பட்டது