உள்ளடக்கத்துக்குச் செல்

தானை மறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானை மறம் என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று.

இலக்கியம்

[தொகு]

புறநானூற்றில் ‘தானை மறம்’ என்று துறையிடப்பட்டுள்ள பாடல்கள் 8 உள்ளன. இது தும்பைத் திணையின் துறை. அரனது வலிமையையும், அவனது படையின் பெருமையையும் கூறுவது இத் துறை.

 • நாள் ஒன்றுக்கு எட்டுதெ தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று செய்த தேர்போல் வலிமை மிக்க பொருநன் என் தலைவன் அதியமான் [1]
 • அதியமான் போரை நேரில் கண்டபின் யாரும் அவனை எதிர்க்க முன்வரமாட்டார்கள். [2]
 • அதியமானின் படைவீரர்கள் அடிக்கும் தடிக்கு அஞ்சாத பாம்பு போன்றவர்கள். அவனோ பொது மன்றத்தில் தண்ணுமை ஒலி கேட்டால் அது ‘போர் முழக்கம்’ என எண்ணித் தாக்க வந்துவிடுவான். [3]
 • மறப்புலி பாய்ச்சலுக்கு முன் மான் வருமா? ஞாயிற்றுக்கு முன் இருளா? மணலில் வண்டி இழுத்த எருதுக்கு சிறு கல் தடை ஆகுமா? அதியமானை எதிர்க்காதீர்கள். [4]
 • பிட்டன் கொல்லனுக்கு உதவும் பணைக்கல் போன்றவன் [5]
 • இவர் இவர் இன்ன இன்ன நாளில் வந்து போரிட வேண்டும் என முறை வகுத்துத் தந்திருந்தான். வீரர்களோ நான் முந்தி நீ முந்தி என முன்வந்து பாசறையில் குழுமிவிட்டனர். அரசன் அவர்களை “நாள் முறை தவிர்த்தீர் வம்மின்” என அழைத்து அறிவுரை கூறவேண்டியதாயிற்று. [6]
 • (தோல் = தோலால் செய்யப்பட்ட மார்புக் கவசம்) வீர! நீ தோல் தா, தோல் தா என்று விரைகிறாய். நேற்று நீ கொன்றாயே அவன் மகன் கள்ளைப் பருகிவிட்டுப் பாறைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறானாம். தெரியுமா உனக்கு? [7]
 • அங்கே ஒருவன். அவன் தன் வேலை வேந்தன் வரும் யானைமீது மட்டுமே வீசுவானாம். [8]

இலக்கணம்

[தொகு]
 • தொல்காப்பியம் இதனைத் ‘தானைநிலை’ என்னும் துறைக்குள் அடக்கிக்கொள்கிறது. [9]
 • புறப்பொருள் வெண்பாமாலை இதனை மூன்று கொளுச் செய்யுள்களால் விளக்குகிறது. தம் படையில் மடிந்தவர்களை விடத் தான் மேம்பட்டவன் எனல், அரசனுக்குத் தெம்பு கூறுதல், பகைவர் மாண்டுபோவார்களே என மனம் இரங்குதல் ஆகிய மூன்றும் தானை மறம். [10]

அடிக்குறிப்பு

[தொகு]
 1. ஔவையார் புறநானூறு 87
 2. ஔவையார் புறநானூறு 88
 3. ஔவையார் புறநானூறு 89
 4. ஔவையார் புறநானூறு 90
 5. உறையூர் மருத்துவன் தாமோதரனார் புறநானூறு 170
 6. பெருந்தலைச்சாத்தனார் புறநானூறு 294
 7. அரிசில் கிழார் புறநானூறு 300
 8. ஆவூர் மூலங்கிழார் புறநானூறு 301
 9. தொல்காப்பியம், புறத்திணையியல் 14
 10. புறப்பொருள் வெண்பாமாலை. 129, 130, 131
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானை_மறம்&oldid=1216323" இலிருந்து மீள்விக்கப்பட்டது