தானியங்கிக் கதவு
தானியங்கிக் கதவு என்பது, ஒருவர் கதவுக்கு அண்மையாக வரும்போது தானாகவே திறக்கும் கதவு ஆகும். பொதுவாகக் கதவில் பொருத்தப்படும் உணர் கருவிகள் யாரும் கதவை அண்மிப்பதை உணர்ந்து கதவைத் திறப்பதற்கான சமிக்ஞைகளை வழங்குகின்றன.
வரலாறு
[தொகு]கிபி முதலாம் நூற்றாண்டில் கிரேக்கக் கணிதவியலாளரான அலெக்சாண்டரியாவின் எரோன் இன்று அறியப்பட்டவற்றுள் முதலாவது தானியங்கிக் கதவை உருவாக்கினார். இவர் இரண்டு வகையான கதவுகளை விளக்கியுள்ளார். முதலாவது, நகரின் கோவிலின் குருவானவர் கொழுத்தும் தீயின் வெப்பத்தைப் பயன்படுத்தியது. தீ கொழுத்தப்பட்டுச் சில மணி நேரங்களில், இவ்வெப்பத்தால் பித்தளைக் கலம் ஒன்றில் அதிகரிக்கும் அமுக்கம் நீரை இன்னொரு கலத்துக்குள் செலுத்தும். இரண்டாவது சொல்லப்பட்ட கலம் சுமையாகச் செயற்பட்டு பல்வேறு கப்பிகளினூடாகச் செலுத்தப்பட்ட வடங்களின் மூலம், மக்கள் வழிபாட்டுக்கு வரும் நேரத்தில் கதவைத் திறக்கிறது. நகரத்தின் கதவைத் திறப்பதற்கும் எரோன் இது போன்ற முறையைப் பயன்படுத்தினார்.[1]
1931 இல் கைத்தொழிற் கருவிகளும், வன்பொருட்களும் உற்பத்தி செய்யும் "இசுட்டான்லி வேர்க்சு" நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களான ஓராசு எச். ரேமன்ட், செல்டன் எசு. ரோபி ஆகியோர் தன்னியக்கக் கதவைத் திறப்பதற்கான ஒளியியற் கருவி ஒன்றை வடிவமைத்தனர். இக்கண்டுபிடிப்பு உரிமைக் காப்புச் செய்யப்பட்டு, உணவு, பானங்கள் ஆகியவற்றைக் காவிச்செல்லும் பரிமாறுபவர்களின் வசதிக்காக கனெக்ட்டிகட்டின் மேற்கு ஏவென் பகுதியில் உள்ள உணவுச் சாலை ஒன்றில் பொருத்தப்பட்டது. அக்காலத்தில் முழுத் தொகுதியும், பொருத்துவதுடன் சேர்த்து 100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.[2][3]
1954 இல் டீ ஓர்ட்டனும், லியூ எவிட்டும் இணைந்து முதலாவது தானியங்கி வழுக்கு கதவைக் கண்டுபிடித்தனர். 1960 இல் இருவரும் இணைந்து "ஓர்ட்டன் ஓட்டோமட்டிக்சு" நிறுவனத்தை (Horton Automatics Inc) உருவாக்கி வணிக ரீதியான முதல் தானியங்கி வழுக்கு கதவை விற்பனைக்குக் கொண்டுவந்தனர்.[4]