தாத்திரி விழா
தாத்திரி விழா (Dadri mela) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் அமைந்துள்ள தாத்திரி நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விழா தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[1] தற்போது பலியா மாநகராட்சியால் இத்திருவிழா ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்துசமய முனிவரான பிருகுவுடன் தொடர்புடைய இத்திருவிழா பிருகுவின் சீடரான முனிவர் தாத்திரியின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. முனிவர் தாத்திரி முன்னிலையில் இத்திருவிழா சரயு மற்றும் கங்கை நதிகள் சங்கமித்த நிகழ்வைத் தொடர்ந்து தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இத்திருவிழா மொத்தம் ஒரு மாத காலத்திற்கு, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதல் கட்டம் கார்த்திகை பௌர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன்னதாகத் தொடங்குகிறது. கால்நடை மற்றும் விலங்கு வர்த்தகத்திற்கான சந்தைகளில் இது இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகத் திகழ்கிறது.[2] இத்திருவிழாவின் இரண்டாம் கட்டம், கார்த்திகை பௌர்ணமி நாளன்று, மாலை வேளையில் நடைபெறும் மகா ஆரத்தி வழிபாட்டுடன் தொடங்குகிறது.[2]
கதை
[தொகு]புராணக் கதைகளின்படி, பிருகு முனிவர் விசுணுவைத் தாக்கியபோது, இவர் மிகுந்த மனவருத்தம் கொண்டார். தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடும் பொருட்டு, பூமிக்குத் திரும்பி வந்து தவமியற்றத் தொடங்கினார். அக்காலகட்டத்தில், சோதிட சாத்திரத்தில் தனக்கிருந்த ஆழ்ந்த புலமையின் காரணமாக, கங்கை நதி எதிர்காலத்தில் வற்றிப்போகும் என்பதை இவர் அறிந்துகொண்டார். இதைத் தடுக்கும் பொருட்டு, தனது சீடரான தாத்திரி முனிவரிடம், சரயு மற்றும் கங்கை நதிகளை ஒன்றிணைக்குமாறு பணித்தார். தனது குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, தாத்திரி முனிவரும் அவ்வாறே செய்தார். இவ்விரு நதிகளும் சங்கமித்த இடத்தில் வசித்த மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்து, அந்நாளை ஒரு திருவிழாவாகக் கொண்டாடினர். அன்று முதல், இத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.[2]
வரலாறு
[தொகு]தாத்திரி விழா புராண காலத்திலேயே தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இவ்விழா சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்றும் பரவலாகக் கருதப்படுகிறது.[3] இத்திருவிழா இதே இடத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தாலும், கால்நடைச் சந்தை மற்றும் 'மீனா பசார்' ஆகியவை பிற்காலத்தில் அநேகமாக முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[2]
நிகழ்வுகள்
[தொகு]- கால்நடைச் சந்தை: கார்த்திகை பௌர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக நடைபெறும் தாத்திரி திருவிழாவின் கால்நடைச் சந்தையே, வணிக நிறுவனங்களுக்கு முக்கிய ஈர்ப்பாகத் திகழ்கிறது. அரியானா மற்றும் இராசத்தான் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகை தருகின்றனர். இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கால்நடைச் சந்தையாகும். மேலும் இங்கு இடம்பெறும் தனித்துவமான விலங்குகளுக்காகவே இது பெரிதும் அறியப்படுகிறது.
- முக்கியத் திருவிழா: கார்த்திகை பௌர்ணமி நாளன்று மாலை வேளையில் நடைபெறும் மகா ஆரத்தியுடன், தாத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் தொடங்குகின்றன. 'மீனா பசார்' மற்றும் பொழுதுபோக்கிற்கான சவாரிகள் ஆகியவை வழக்கமாக இக்காலகட்டத்திலேயே செயல்படத் தொடங்குகின்றன.[4]
- பாரதேந்து மேடை: கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் கவியரங்கம் மற்றும் பல்வேறு கலைநிகழ்வுகள் அரசாங்கத்தின் சார்பில் தாத்திரி திருவிழாவில் நடத்தப்படுகின்றன.[5]]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "बलिया: 5000 साल पहले शुरू हुआ था ददरी का मेला, अगले वर्ष से सरकारी मेले के रूप में मनाया जाएगा". Zee News. 17 November 2022. https://zeenews.india.com/hindi/india/up-uttarakhand/uttar-pradesh/ballia-dadri-fair-started-5000-years-ago-will-be-celebrated-as-government-fair-from-next-year-spup/1445687.
- 1 2 3 4 Mishra, Raghavendra (2020). Mela Parmparasiddh Janmadhyam (in இந்தி). Bharti Prakashan. pp. 24–25. ISBN 9789388019774.
- ↑ Bharti, Ajay (17 November 2022). "Ballia: 7 हजार साल से ज्यादा पुराना है ददरी मेले का इतिहास, हर साल कार्तिक महीने में आयोजन". ABP News. https://www.abplive.com/states/up-uk/ballia-news-history-of-dadri-fair-is-more-than-7000-years-old-it-is-organized-every-year-in-the-kartik-month-ann-2261322.
- ↑ Pandey, Rajkumar (28 November 2023). "बलिया का ददरी मेला: परंपरा और संस्कृति की चाशनी में डूबी 'जिलेबी' के साथ मेल- मुलाकात, बतकही का महीने भर का अड्डा". News 18 இம் மூலத்தில் இருந்து 10 ஜூலை 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240710063724/https://hindi.news18.com/news/dharm/dadri-mela-ballia-origin-and-story-bhartendu-harishchandra-dileverd-his-historic-lecture-in-this-mela-7859403.html.
- ↑ Rai, Manish (2 December 2023). "आखिर क्यों लगता है ऐतिहासिक ददरी मेले में भारतेंदु कला मंच? जानें इतिहास". News 18 இம் மூலத்தில் இருந்து 10 ஜூலை 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240710063725/https://hindi.news18.com/news/uttar-pradesh/ballia-after-all-why-is-bharatendu-kala-manch-organized-in-the-historical-dadri-fair-7870462.html.