உள்ளடக்கத்துக்குச் செல்

தாட்சர் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் தாட்சரின் புகைப்படத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ள 'தாட்சர் விளைவு. தலைகீழாக உள்ள இவ்விரு படங்களும், மேலோட்டமாகப் பார்க்கும்போது முகங்களைப் போலவே சரியாகத் தோன்றுகின்றன. இருப்பினும், இப்படங்களை நேராகத் திருப்பும்போது, வலதுபுறம் உள்ள முகத்தின் கண்களும் வாயும் தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.[1]

தாட்சர் விளைவு (Thatcher effect) என்பது மனித முகங்களை நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதை காட்டும் ஒரு பார்வை மாயை ஆகும். முகமானது தலைகீழாக இருக்கும்போது, அதன் முக அம்சங்களில் செய்யப்பட்ட மாற்றங்களைக் கண்டறிவது கடினமாக இருக்கும் ஒரு நிகழ்வாகும். அதே மாற்றங்கள் அந்த முகம் நேராக இருக்கும்போது மிகத் தெளிவாகத் தெரியும். உதாரணமாக இந்த விளைவில், ஒரு மனிதரின் முகத்தை தலைகீழாக மாற்றி காட்டும்போது, கண்கள் மற்றும் வாய் மட்டும் தனியாகத் தலைகீழாக மாற்றப்பட்டிருந்தாலும் அது உடனடியாக வித்தியாசமாக தெரியாது. ஆனால் அதே முகத்தை நேராக திருப்பிப் பார்த்தால், முகம் மிகவும் விசித்திரமாகவும் பயமூட்டுவதாகவும் தோன்றும். இந்நிகழ்வே தாட்சர் விளைவு எனப்படுகிறது. அக்காலத்திய பிரிட்டிசு பிரதமரான மார்கரெட் தாட்சரின் பெயரால் இநிகழ்வு அழைக்கப்படுகிறது. ஏனெனில், அவருடைய புகைப்படத்தைக் கொண்டே இந்த விளைவு முதன்முதலில் விளக்கிக் காட்டப்பட்டது. இந்த விளைவு, 1980-ஆம் ஆண்டில் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான பீட்டர் தாம்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது.[2]

மீள்பார்வை

[தொகு]

தாட்சர் விளைவு, முதலில் ஒரே மாதிரியாக இருந்த இரண்டு புகைப்படங்களின் மூலம் விளக்கப்படுகிறது.[3] அந்த படங்கள் தலைகீழாக மாற்றப்படுகின்றன. இரண்டாவது படத்தில் கண்களும் வாயும் செங்குத்தாகத் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கும். ஆனால் படம் நேராகப் பார்க்கப்படும் வரை அந்த மாற்றங்கள் உடனடியாக தெளிவாக தெரியாது.

தாட்சர் விளைவானது, முகத்தைப் புலனுணர்வதில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட உளவியல் அறிவாற்றல் கூறுகளால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இந்தக் கூறுகள் குறிப்பாக நிமிர்ந்த முகங்களுக்கு ஏற்ப இசைவிக்கப்பட்டுள்ளன. முகங்கள் மிகவும் ஒத்திருந்தபோதிலும், அவை தனித்துவமானவையாகத் தோன்றுகின்றன. கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்ற தனிப்பட்ட முக அம்சங்களின் விவரங்களைப் போலவே, முகத்தின் உள்ளமைப்பையும், அதாவது முகத்தில் உள்ள தனிப்பட்ட அம்சங்களுக்கு இடையிலான கட்டமைப்பு உறவு சார்ந்து, முகங்களை வேறுபடுத்துவதற்கான குறிப்பிட்ட செயல்முறைகளை நாம் உருவாக்குகிறோம் என்று கருதுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

செம்முகக் குரங்குகள்[4][5] மற்றும் சிம்பன்சிகள் [6] ஆகியவையும் 'தாட்சர் விளைவை' அனுபவிக்கின்றன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இது, முகங்களைச் செயலாக்குவதில் ஈடுபடும் சில மூளைச் செயல்முறைகள், 30 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து பரிணமித்திருக்கக்கூடும் எனும் சாத்தியக்கூறை எழுப்புகிறது.

முகத்தை உணர்வதில் தாட்சர் விளைவின் அடிப்படைக் கொள்கைகள் உயிரியல் இயக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட புள்ளிகளின் உள்ளூர் தலைகீழ் மாற்றத்தை அடையாளம் காண்பது கடினம், மேலும் சில சந்தர்ப்பங்களில், முழு உருவமும் தலைகீழாக இருக்கும்போது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது.[7]

மேலதிக ஆய்வுகள்

[தொகு]

தாட்சர் மாயை, முகத்தை அடையாளம் காணும் உளவியலைப் புரிந்துகொள்ளவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. பொதுவாக, தாட்சர் மாயையை பயன்படுத்தும் பரிசோதனைகள், முரண்பட்ட முக அம்சங்களை நேராகவோ அல்லது தலைகீழாகவோ பார்க்கும்போது அவற்றைக் கவனிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை ஆய்வு செய்கின்றன.[8] இத்தகைய அளவீடுகள், முகங்களை முழுமையான வடிவில் மனித மூளை எவ்வாறு செயலாக்குகிறது என்பதை அறிய பயன்படுத்தப்பட்டுள்ளன.[9]

நேரான மற்றும் தலைகீழான நிலைகளுக்கு இடைப்பட்ட கோணங்களை ஆய்வு செய்வதன் மூலம், மாயத்தோற்றங்கள் படிப்படியாகவோ அல்லது திடீரென்றோ தோன்றுவதை ஆய்வுகள் ஆராய்ந்துள்ளன.[10][11] தாட்சர் மாயத்தோற்றத்தின் மீதான உணர்திறன் குழந்தைகளிடத்தில்[12], ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளையும் சேர்த்து, காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[13]

ஆனால், பிறவியிலிருந்தே முகங்களை அடையாளம் காண முடியாத நிலையான பிறவி முகக்குருட்டுத்தன்மை குறை உள்ளவர்களில், இந்த மாயைக்கு ஏற்படும் எதிர்வினை சாதாரண மனிதர்களை விட மிகவும் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் எதிர்வினை நேரம், அந்த விகாரமான முகம் எந்த திசையில் இருக்கிறது என்பதனால் மிகச் சிறிய அளவில் மற்றும் நேர்கோட்டுத்தன்மையுடன் மட்டுமே பாதிக்கப்பட்டது என்று காட்டப்பட்டது. இந்த இறுதி கண்டுபிடிப்பு, முகங்களை அடையாளம் காணும் போது “வடிவமைப்பு சார்ந்த செயலாக்கம்” மேற்கொள்ளும் மூளையின் பகுதி, அதாவது மூளைப் புறத்தோலின் பியூசிபார்ம் முகப் பகுதி என்பதைக் குறிக்கிறது; இந்த பகுதி பிறவியிலிருந்தும் பின்னர் ஏற்பட்டும் உள்ள முகக் குருட்டுத்தன்மை நிலைகளில் பாதிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thompson, P. (1980). "Margaret Thatcher: a new illusion". Perception 9 (4): 483–484. doi:10.1068/p090483. பப்மெட்:6999452. http://eprints.whiterose.ac.uk/115530/1/thatcher1980.pdf.
  2. Thompson, P. (1980). "Margaret Thatcher: a new illusion". Perception 9 (4): 483–484. doi:10.1068/p090483. பப்மெட்:6999452. http://eprints.whiterose.ac.uk/115530/1/thatcher1980.pdf.
  3. "Reading Upside-down Lips". faculty.ucr.edu. Retrieved 11 April 2013.
  4. Adachi Ikuma, Chou Dina P., Hampton Robert R. Thatcher Effect in Monkeys Demonstrates Conservation of Face Perception across Primates, Current Biology 2009, 19, 1270–1273. எஆசு:10.1016/j.cub.2009.05.067.
  5. Dahl Christoph D, Logothetis Nikos K, Bülthoff Heinrich H, Wallraven Christian 'The Thatcher illusion in humans and monkeys', Proceedings of the Royal Society B: Biological Sciences, 2010, 277 (1696)
  6. Weldon, K. B., Taubert, J., Smith, C. L., & Parr, L. A. (2013). 'How the Thatcher illusion reveals evolutionary differences in the face processing of primates'. Animal cognition, 16(5), 691-700.
  7. Mirenzi A, Hiris E, 2011, "The Thatcher effect in biological motion" Perception 40(10) 1257 – 1260
  8. Sjoberg, W., & Windes, J. D. (1992)
  9. Lewis, M.B. & Johnston, R.A. (1997). The Thatcher Illusion as a test of configural disruption. Perception, 26, 225-227.
  10. Stuerzel, F., & Spillmann, L. (2000). Thatcher illusion: dependence on angle of rotation. Perception, 29(8), 937-942.
  11. Lewis, M. B. (2001). The lady's not for turning: Rotation of the Thatcher illusion. Perception, 30(6), 769-774.
  12. Lewis, M.B. (2003). Thatcher’s children: Development and the Thatcher illusion. Perception, 32, 1415-1421.
  13. Rouse, H., Donnelly, N., Hadwin, J. A., & Brown, T. (2004). Do children with autism perceive second-order relational features? The case of the Thatcher illusion. Journal of Child Psychology and Psychiatry, 45(7), 1246-1257.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்சர்_விளைவு&oldid=4551683" இலிருந்து மீள்விக்கப்பட்டது