தாசியன் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசோசின் தெற்கு கடற்கரை

தாசியன் கிளர்ச்சி (Thasian rebellion) என்பது கிமு 465 இல் கிரேக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வாகும். இதில் தாசோஸ் ஏதெனியன் கட்டுப்பாட்டிற்கு எதிராக கிளர்ச்சி செய்து, டெலியன் கூட்டடணியில் இருந்து விலக முயன்றது. தாசோசால் பாரம்பரியமாக திரேசிய நிலப்பரப்பில் வெட்டியெடுக்கப்பட்ட தங்கச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக ஏதென்சுக்கும் தாசோசுக்கும் இடையிலான மோதலாலே கிளர்ச்சி ஏற்பட காரணமாயிற்று.

நீண்ட, கடினமான முற்றுகைக்குப் பிறகு கிளர்ச்சி இறுதியில் நசுக்கப்பட்டது. ஆனால் தாசியர்களுக்கு ஆதரவாக அட்டிகா மீது படையெடுப்பதாக எசுபார்த்தா முன்பு இரகசியமாக உறுதியளித்திருந்தது. லாகோனியாவில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தால் எசுபார்த்ததன்களால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல் போனது. இந்த பூகம்பமானது எசுபார்த்தாவில் எலட்களின் கிளர்ச்சியைத் தூண்டி விட்டது.

டெலியன் கூட்டணியானது ஏதெனியப் பேரரசாக மாறியதைக் குறிக்கும் சம்பவங்களில் ஒன்றாக தாசியன் நிகழ்வை வரலாற்றாளர் துசிடிடீஸ் சுட்டிக் காட்டியுள்ளார். நவீன அறிஞர்கள் எசுபார்த்தாவின் உள் அரசியலின் ஒரு குறிகாட்டியாக இதைக் கண்டனர். ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவியது போன்ற தோற்றம் இருந்த போதும் ஒரு வலுவான போர்க் கட்சி அதில் மறைந்து இருப்பதை வெளிப்படுத்துவதாக இது உள்ளது. மேலும் இருதரப்பு உறவில் வெடிப்பு ஏற்பட்டு, உறவுகள் முறியப்போவதை முன்னறிவிப்பதாகவும் இருந்தது. அதன்படி தசாப்தத்தின் இறுதியில் முதல் பெலோபொன்னேசியன் போர் மூண்டது.

ஏதென்ஸ் மற்றும் தாசோஸ்[தொகு]

ஏதென்சுக்கும் தாசோசுக்கும் இடையிலான தகராறு திரேசியன் மற்றும் தாசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தங்கச் சுரங்கத்தின் மீதான வணிகத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டதாக துசிடிடீஸ் தெரிவிக்கிறார். [1] இந்த சர்ச்சையில் ஏதென்சை ஆக்கிரமிப்பாளர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் வரலாற்றாளர் ஜி.இ.எம். டி ஸ்டீ. குரோக்ஸ் மட்டும் தாசியன் ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய நகர அரசின் சார்பாக ஏதெனியர்கள் தலையிட்டதாக வாதிடுகிறார். [2] சுரங்கம் மற்றும் வணிகம் இலாபகரமானதாக இருந்தது. மேலும் அவற்றை ஏதெனியர்களிடம் இழப்பது தாசோசுக்கு கடுமையான பொருளாதார இழப்பாக இருந்திருக்கும்; இந்த சர்ச்சை எழுந்த பிறகு, ஏதென்ஸ் பெருமளவில் குடியேற்றவாசிகளை அனுப்பி என்னியா ஹோடோய் ("ஒன்பது வழிகள்") என்று அழைக்கப்படும் ஒரு குடியேற்றத்தை உருவாக்கியது. அது இறுதியில் ஆம்பிபோலிஸ் நகருக்கு அடிப்படையாக மாறியது. இந்த குடியேற்றம், வெற்றிகரமாக நிலைத்திருந்திருந்தால் (சிறிது காலத்திற்குப் பிறகு இது பூர்வீக மக்களால் அழிக்கப்பட்டது), தாசோஸ் நீண்ட காலமாக ஆதிக்கம் கொண்டிருந்த ஒரு பிராந்தியத்தில் ஏதெனியன் அதிகாரத்தையும் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு தளமாக செயல்பட்டிருக்கும். [3] தாசோஸ் ஒரு சக்திவாய்ந்த கடற்படை அரசாகவும், டெலியன் கூட்டணியில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தது. இதனால் இந்த ஏதெனியன் ஊடுருவல்களுக்கு தலைவணங்குவதற்குப் பதிலாக தாசியர்கள் இராணுவ ரீதியாக எதிர்க்கத் துணிந்தனர். [3]

போர்[தொகு]

போரின் துவக்கத்தில் தாசோசின் கடற்படை முறியடிக்கபட்டு, போக்குவரத்து வழிகளை அடைத்து ஏதெனியர்களால் தாசோஸ் நகரம் முற்றுகையிடப்பட்டது. [4] இந்த முற்றுகை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. முற்றுகையின் போது தாசோஸ் மக்கள் கடுமையான துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. உணவின்றி மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். தாசோசில் நடந்த முற்றுகை தொடர்பான ஒரு கதை நிலவுகிறது. அதன்படி ஏதெனியர்களிடம் சரணடைய முதலில் முன்மொழியும் தாசஸ் நகர குடிமகனுக்கு மரண தண்டனை அளிக்க சட்டம் இயற்றப்பட்டிருந்தது. மேலும் பெரிய போர்க் கருவிகளை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு இழுத்துச் செல்ல, கயிறுகள் இல்லை; எல்லாம் அறுந்துவிட்டன. தாசஸ் நகர பெண்கள் தங்கள் முடியை கத்தரித்து கயிறாக திரித்துக் கொடுத்தனர் என்ற ஒரு கதை இந்த முற்றுகையைக் குறித்து நிலவுகிறது. [5] இந்த உறுதிமிக்க தாசிய எதிர்ப்பானது ஏதெனியன் பின்னடைவு பற்றிய செய்திகளின் விளைவாக இருக்கலாம். அங்கு ஏதேனிய குடியேற்றவாதிகள், ஆரம்பகால வெற்றிக்குப் பிறகான காலத்தில் உள்ளூர் பழங்குடியினரால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டனர் (300 பேர் கொண்ட இராணுவப் பாதுகாப்புப் படையினர் மட்டும் கொல்லப்பட்டார்களா அல்லது 10,000 குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை). [6] தாசியர்களும் வெளியார் தலையீட்டின் மூலம் தங்களுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்; அவர்கள் எசுபார்த்தாவிடம் உதவி கோரினர். மேலும் அட்டிகா மீதான படையெடுப்பு என்ற வடிவில் தாசியர்களுக்கு ஆதரவு அளிக்கும் இரகசிய வாக்குறுதியை பெற்றனர்; எவ்வாறாயினும், இந்த வாக்குறுதி எசுபார்த்தாவினால் நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில் லாகோனியாவில் ஏற்பட்ட பூகம்பம் எசுபாபார்த்தாவை சீர்குலைத்தது. மேலும் எசுபார்த்தாவில் ஹெலட் பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட பூகம்பம் தூண்டுகோலானது. இது எசுபார்த்தாவின் இராணுவத்துக்கு பல ஆண்டுகளாக தலைவலியாக ஆனது. [4] கிமு 463 இல், தாசியர்கள் கடைசியாக சரணடைய வேண்டிய நிலைக்கு ஆளாயினர்.

முக்கியத்துவம் மற்றும் பின்விளைவுகள்[தொகு]

ஏதெனியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட நகர அரசுகள் மீது கடுமையான தீர்வையை விதித்தனர். தாசோஸ் பணிந்த பிறகு ஏதென்சின் நிபந்தனைகள் அனைத்துக்கும் கட்டுப்பட்டது. ஏதென்சின் நிபந்தனைகளின் படி தாசோஸ் தன் பிரதான நிலப்பரப்பில் சர்ச்சைக்குரிய பிரதேசங்களுக்கான உரிமைகோரல்களை கைவிட்டது. தாசசின் அரண்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கியது. அதன் கடற்படையை கைவிட்டது. மேலும் ஏதென்சுக்கு இழப்பீடு மற்றும் திறை செலுத்த ஒப்புக்கொண்டது. [4] முதலில் அந்த திறை வருடத்திற்கு 3 தாலந்துகள் என்று மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் கிமு 440 களில் அது 30 தாலந்துகளாக உயர்த்தப்பட்டது; சில அறிஞர்கள் திறைப் பணத்தின் இந்த உயர்வை தாசோசின் சுரங்கம் மற்றும் பிற சொத்துக்கள் திரும்பப் பெற்றதற்கான அறிகுறியாகக் கருதுகின்றனர். மற்றவர்கள் இது போரின் பேரழிவிற்குப் பிறகு தாசஸ் செழிப்புக்கு திரும்புவதைப் பிரதிபலிக்கிறது என்றும் நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த அதிகரிப்பு தாசோஸ் தீவின் செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டைக் குறிக்கிறது என்கின்றனர். [7]

குறிப்புகள்[தொகு]

  1. Thucydides. The Peloponnesian War, 1.100
  2. de Ste. Croix 1972.
  3. 3.0 3.1 Kagan 1969.
  4. 4.0 4.1 4.2 Thucydides. The Peloponnesian War, 1.101
  5. Meiggs 1972.
  6. Meiggs 1972.
  7. Meiggs 1972.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசியன்_கிளர்ச்சி&oldid=3430751" இலிருந்து மீள்விக்கப்பட்டது