தலைவெட்டி முனியப்பன் கோவில் வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைவெட்டி முனியப்பன் வழக்கு என்பது தமிழ் நாட்டின், சேலம் மாவட்டம், பெரியேரி கிராமம், கோட்டை சாலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள தலைவெட்டி முனியப்பன் மற்றும் திருமலையம்மன் கோவிலில் இருப்பது புத்தர் சிற்பம் என்றும், இது ஒரு பௌத்த தலம் என்றும் கோரி 2011ஆம் ஆண்டு சேலத்தச் சேர்ந்த பி ரங்கநாதன் மற்றும் புத்தர் அறக்கட்டளை சார்பில் 2011ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். சிலையின் அடையாளம் மற்றும் தொன்மையைக் கண்டறிய தொல்லியல் துறை வாயிலாக ஆய்வு செய்யுமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இக்கோவிலில் இருப்பது புத்தர் சிற்பமே என்று தமிழ்நாடு தொல்லியல் துறை தனது அறிக்கை மூலம் உறுதிசெய்தது. இதையடுத்து, இக்கோவில் வளாகத்தை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கு பூஜை மற்றும் பிற இந்து சடங்குகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. கோவில் வளாகத்தில் புத்தர் சிற்பத்தை அறிவிக்கும் பெயர் பலகையை அமைக்க இந்து சமய மற்றும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.

கோவில் அமைப்பு[தொகு]

சுமார் 26 சென்ட் நிலத்தில் இக்கோவில் வளாகம் அமைந்துள்ளது. இக்கோவிலில் அடுத்தடுத்து மூன்று கருவறைகள் அமைந்துள்ளன. கோவில் மூலவரான தலை வெட்டி முனியப்பன் மையத்தில் உள்ள கருவறையில் அருள்பாலிக்கிறார். மூலவர் கருவறைக்கு இடப்புறத்தில் திருமலையம்மனும், வலப்புறம் பிள்ளையாரும் காட்சிதருகின்றனர். கோவில் முன்புறத்தில் கல்நார் அட்டையைப் பயன்படுத்தி திறந்தவெளி கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பசுமையான மரங்களும் செடிகளும் கொண்ட தோட்டம் அமைந்துள்ளது. அரசமரத்தடியில் ஒரு பிள்ளையார் கோயில் காணப்படுகிறது.[1]

பெயர்க்காரணம்[தொகு]

அருள்மிகு தலைவெட்டி முனியப்பன் ↑ திருமலையம்மன் கோவில், சேலம்

தலை வெட்டி முனியப்பன் என்ற பெயர் எப்படி வந்தது? மூலவர் முனியப்பனின் தலை வெட்டப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. சிலையின் தலை நேராக இல்லாமல் இடப்புறம் சற்றே சாய்ந்து காணப்படுகிறது. தலையையும் உடலையும் இணைப்பதற்கு ஒரு கடப்பாரை பயன்பட்டுள்ளது. ஒட்டவைக்க ஈயத்தைப் பயன்படுத்தியுள்ளனராம். இத்தகவல் கோவில் பூசாரி மூலம் தெரிய வந்துள்ளது.[1] முனியப்பன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ள சிற்பம் தாமரை பீடத்தில், அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தவாறு தியான முத்திரையில் காட்சிதருகிறது.[2]

தலையில்லாத புத்தர் சிலைகள்[தொகு]

பல இடங்களில் புத்தர் சிலைகள் தலையில்லாமலேயே கண்டறியப்பட்டுள்ளன. எனினும் இவை புத்தர் சிலைகளே என்று பௌத்த ஆய்வாளர்கள் துல்லியமாக அடையாளம் கண்டுள்ளனர். "தென்னாட்டில் தலைவெட்டி முனீஸ்வரன் கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்று உள்ளதென்றும் சொல்லப்படுகிறது" என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளது இந்தச் சிலையைத்தான்.[1]

வழிபாடு[தொகு]

இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இங்குள்ள பெயர்ப் பலகையில்:

 "தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை.
  அருள்மிகு தலைவெட்டி முனியப்பன் & திருமலையம்மன் திருக்கோயில்" 

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சேலம் நகரத்து மக்கள் இக்கோவிலில் மூன்று தலைமுறைகளாக வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் இக்கோவிலில் அரசின் முன்னெடுப்பில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இக்கோவில் வளாகத்தில் பழமையான திருமலை நாயக்கர் சிலை இடம்பெற்றுள்ளது.[3] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கை ஒட்டி மூன்று கருவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மூலவர் தலை வெட்டி முனியப்பன் சன்னதி மட்டுமே இருந்துள்ளதாம். 2008 ஆம் ஆண்டில், இங்குள்ளது புத்தர் சிலையே என்று சர்ச்சை எழுந்தது

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு[தொகு]

சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். தன்னுடைய மனுவில் "தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தில் தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறைக்குச் சொந்தமான நிலத்தில் "தலைவெட்டி முனியப்பன் & திருமலையம்மன் திருக்கோவில்" அமைந்துள்ளது. இந்தச் சிலைக்கு இந்து மத சடங்குகளுடன் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது புத்தர் சிலை ஆகும். புத்தர் சிலைகுள்ள படிமவியல் இலக்கணங்கள் இச்சிலையில் காணப்படுகின்றன. இந்தச் சிலை மற்றும் கோவில் அமைந்துள்ள 26 சென்ட் நிலம் ஆகியன பௌத்த சங்கத்திற்குச் சொந்தமானது ஆகும். எனவே சிலை மற்றும் நிலத்தை மீட்டு பௌத்த சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இதே கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் இவர் மனு அனுப்பியிருந்தார். மனு குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.[4] [2]

சென்னை உயர்நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. “மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா? அல்லது புத்தர் சிலையா? என்று முறையான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி” தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.[2]2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதியன்று தொல்லியல் துறையினரின் கூட்டு ஆய்வுக்குழு இக்கோவிலில் விரிவான ஆய்வினை மேற்கொண்டது. பூசாரி மற்றும் உதவியாளர் ஆகியோர் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.[4]

தொல்லியல் துறையின் அறிக்கை[தொகு]

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை முறையான இக்கோவிலில் முறையான ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில் இத்துறை ஓர் ஆய்வறிக்கையினை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. * கோவில் கட்டிடம் நவீன தோற்றம் கொண்டது.

  • தலைவெட்டி முனியப்பன் சிலை கடினமான கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சிலை தாமரை பீடத்தில், அர்த்தபத்மாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் தியான முத்திரை காட்டியவாறு காணப்படுகிறது. புத்தருக்கான அடையாளங்களை சிற்பத்தின் தலைப்பகுதியைக் கொண்டே முடிவு செய்ய முடியும். எனினும் தொல்பொருள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளை உன்னிப்பாக ஆய்வு நடத்தியதில், இந்தச் சிற்பம் மகா லட்சணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள புத்தர் சிற்பம் தான்

என்று தொல்லியல் துறை தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.[2][4]

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு[தொகு]

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்து வெங்கடேசு இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் தனது தீர்ப்பை கீழ்க்கண்டவாறு வழங்கியுள்ளார் [5][2][4]:

  • சேலம் மாவட்டம் பெரியேரி கிராமம், தலைவெட்டி முனியப்பன் கோவிலின் மூலவர் கருவறை இருப்பது புத்தர் சிற்பம் என்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • புத்தர் சிற்பம் என்று ஐயத்திற்கு இடமின்றி முடிவு செய்யப்பட்டுள்ளதால் இச்சிற்பம் தவறான அடையாளங்களுடன் தொடர அனுமதிக்க இயலாது.
  • “தலைவெட்டி முனியப்பன்” என்று இந்து சமய அறநிலைத்துறை கருதுவதை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது.
  • ஆகவே, புத்தர் சிற்பம் அமைந்துள்ள கோவில் வளாக நிலத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.
  • இக்கோவிலின் மூலவர் கருவறையில் உள்ளது புத்தர் சிற்பம் என்று முறையான அறிவிப்புப் பலகையினை வைக்க வேண்டும்.
  • இந்த வளாகத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம்.
  • புத்தர் சிலைக்கு பூசை உள்ளிட்ட பிற சடங்குகளை நடத்துவதற்கு அனுமதி இல்லை.
  • இதனை தொல்லியல் துறை மேற்பார்வை செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]