உள்ளடக்கத்துக்குச் செல்

தலைப்புப் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

தலைப்புப் பக்கம் என்பது, ஒரு நூல், ஆய்வுக் கட்டுரை அல்லது பிற எழுத்தாக்கங்களின் முதலில் அல்லது முன்புறத்துக்கு அண்மையில் காணப்படும் ஒரு பக்கம். இப் பக்கத்தில், குறித்த ஆக்கத்தின் தலைப்பு, ஆக்குனர் போன்ற தகவல்களோடு மற்றும் சில தகவல்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். பொதுவாக அட்டையிலும், அரைத்தலைப்புப் பக்கத்திலும் இருக்கும் தகவல்களோடு நூல் பற்றிய கூடுதல் தகவல்கள் இதில் காணப்படும்.

தொடக்ககாலத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் சிலவற்றில் தலைப்புப் பக்கம் காணப்படவில்லை. முதல் பக்கத்திலேயே உரைப்பகுதி அச்சிடப்பட்டது.

நூல்களின் தலைப்புப் பக்க உள்ளடக்கம்[தொகு]

1599 ஆம் ஆண்டைச் சேர்ந்த பைபிள் ஒன்றின் தலைப்புப் பக்கம்.

தலைப்புப் பக்கம் நூலொன்றின் முன்பகுதியில் ஒரு உறுப்பு. நூல்களின் தலைப்புப் பக்கம்;

முதலிய தகவல் உள்ளடங்கியிருக்கும். சில நூல்களுக்கு குறித்த துறையில் புகழ் பெற்றவர்கள் அணிந்துரை வழங்குவதுண்டு அவ்வாறான அணிந்துரைகள் இடம்பெறும்போது அவர்களது பெயர்களையும் தலைப்புப் பக்கத்தில் குறிப்பிடுவது உண்டு. சில நூல்களில் காப்புரிமை ஐ.எசு.பி.என் குறியீடு போன்ற தகவல்களும் அடங்கியிருப்பது உண்டு. எனினும் பெரும்பாலும் இத் தகவல்கள் தலைப்புப் பக்கத்தில் பின் பக்கத்திலேயே தரப்படுவது வழக்கு.

சிலவகையான நூல்களில் நூலின் அட்டைகளில் தரப்படும் தகவல்களிலும் குறைந்த தகவல்களே தலைப்புப் பக்கத்தில் இடம்பெறுவது உண்டு. இதனால் அவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களில் பயன்பாடு குறைவாகவே உள்ளது எனவே சில நூல் பதிப்பகங்கள் இவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களை நீக்கிவிடுவது உண்டு.

தலைப்புப் பக்கங்களின் அமைப்பு[தொகு]

தாமசு இசுக்கினர் என்பவர் எழுதிய இலங்கையில் ஐம்பது ஆண்டுகள் என்னும் ஆங்கில நூலின் தலைப்புப் பக்கம், 1891

முற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள் மிகவும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுடன் அல்லது படங்களுடன் அமைவது உண்டு. இத்தகைய பக்கங்களில் எழுத்துக்களுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பகுதி அழகூட்டல் வேலைப்பாடுகளிடையே வட்டம், நீள்வட்டம் முதலிய பல்வேறு வடிவங்களிலான ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக இருப்பதும் உண்டு. எனினும் தற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள் எழுத்துக்களை மட்டும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் முழுப்பக்கத்தையும் அடக்கும்படி அமைந்திருக்கும். பக்கத்தின் மேற்பகுதியில் முதன்மைத் தலைப்பு அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக் கீழே துணைத்தலைப்புக்கள் அல்லது விளக்கங்கள் இருப்பின் அவை இடம்பெறும். அவற்றுக்குக் கீழ் ஏறத்தாழப் பக்கத்தின் நடுப் பகுதியில் ஆக்குனரின் அல்லது ஆக்குனர்களின் பெயர் கொடுக்கப்படும். தொகுப்பு நூல்களில் அல்லது தொடர் நூல்களில் இவ்விடத்தில் பதிப்பாசிரியரின் பெயரே காணப்படும். ஆக்குனரின் பெயருடன் அவருடைய கல்வித் தகைமைகள், அவருடைய பதவி போன்ற விபரங்களும் இடம்பெறுவது உண்டு. பக்கத்தின் கீழ்ப் பகுதியில் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தின் பெயரும், சில வேளைகளில் முகவரி போன்ற விபரங்களும், வணிகச் சின்னமும் இடம்பெறும். இதற்குச் சற்றுக் கீழ் பதிப்பித்த ஆண்டு அச்சிடப்படுவது உண்டு.

தலைப்புப் பக்கத்தில் உள்ளடங்கும் மேற்குறித்த கூறுகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, எழுத்துக்களி.ன் அளவு, அவற்றின் தடிப்பு என்பவை தெரிவு செய்யப்படும். பொதுவாக முதன்மைத் தலைப்புக்குப் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துவர். அதற்கு அடுத்தபடியான பெரிய எழுத்துக்கள் ஆக்குனரின் பெயருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும். பதிப்பகத்தின் பெயரும் தெளிவாக அமையக்கூடிய வகையில் எழுத்தின் அளவும், தடிப்பும் தெரிவு செய்யப்படும்.

தமிழ் நூல் எடுத்துக்காட்டுகள்[தொகு]

க.வேலுப்பிள்ளை என்பவர் எழுதி, 1918 ஆம் ஆண்டில் வெளியிட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் நூலின் தலைப்புப் பக்கம்.

இன்றைய தமிழ் நூல்கள் அனைத்துலக வழிமுறைகளைப் பின்பற்றியே பதிப்பிக்கப் படுவதனால் பிற மொழி நூல்களைப்போலவே தமிழ் நூல்களின் தலைப்புப் பக்கங்களும் அமைகின்றன. எனினும் 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் சிலவற்றிலுள்ள தலைப்புப் பக்கங்களின் அமைப்பும், எழுதப்பட்டுள்ள முறைகளும் கவனிக்கத்தக்கவை.

1918 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் தமிழ் நூலில் தகவல்களின் அமைவிடங்கள் தற்போதைய முறையை ஒட்டியே காணப்படுகின்றன. ஆனால், பக்கத்தின் மேற்பகுதியில் இந்துக்களின் அக்கால வழக்கத்தையொட்டி பிள்ளையார் சுழியும், அதன் கீழ் "சிவமயம்" என்னும் சொல்லும் காணப்படுகின்றன. அதன் கீழ் நூலின் தலைப்பு இரண்டு வரிகளில் தரப்பட்டுள்ளது. அதன் கீழ் தகவல்கள் பல வரிகளில் வழமையான இடங்களிலேயே காணப்படினும்,

"இது வண. சா. ஞானப்பிரகாசர் (O.M.I) கனம் C.D.வேலுப்பிள்ளை (போதகர்) மெஸ். குமாரசுவாமி (கிளாக்கு) என்பவர்களின் பேருதவி கொண்டு வசாவிளான் சுதேச நாட்டிய மானேசர் மெஸ். க. வேலுப்பிள்ளை என்பவராலியற்றப்பட்டு தமது ஜயசிறீ சாரதா பீடேந்திர சாலையில் முத்திரீகரணஞ் செய்விக்கப்பட்டது"

என முழுத்தகவலும் ஒரே சொற்றொடராக அமைந்திருப்பதைக் காணலாம். இத்தகவல்கள் அனைத்தும் அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் அடக்கப்பட்டுள்ளன.

சென்னையில் வெளியிடப்பட்ட மனையடி சாஸ்திரம் என்னும் தமிழ் நூலின் அட்டையும், தலைப்புப் பக்கமும் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளது. இரண்டிலும் ஏறத்தாழ ஒரே தகவல்களே இருக்கின்றன.

சென்னையில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூலான மனையடி சாஸ்திரம் என்னும் நூலின் தலைப்புப் பக்கமும் முன் காட்டிய யாழ்ப்பாணத்து நூலைப்போலவே பிள்ளையார் சுழியுடனும் "கடவுள் துணை" என்னும் இறை வணக்கத்துடனும் தொடங்குகிறது. இதிலும் தகவல்கள் ஒரு அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் தரப்பட்டுள்ளன. ஆனால், இப் பண்டைய நூலின் ஆக்கியோன் பெயர் தலைப்பு, துணைத்தலைப்பு என்பவற்றுடன் "மயனென்பவர் அருளிய சிற்பநூல் என்னும் மனையடி சாஸ்திரம்" என ஒரே சொற்றொடராகத் தரப்பட்டுள்ளது. பதிப்பகத்தின் பெயர், அச்சகப் பெயர், பதிப்பித்த இடம் என்பவை பக்கத்தின் கீழ்ப் பகுதியில் தரப்பட்டுள்ன. இவற்றின் கீழ் நூலின் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பதிப்பாசிரியரின் அல்லது தொகுத்தவரின் பெயர், பதிப்பித்த ஆண்டு என்பன தலைப்புப் பக்கத்தில் தரப்படவில்லை. பக்கத்தின் நடுப்பகுதியில் மயனைக் குறிக்கும் படம் அச்சிடப்பட்டுள்ளது.

அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இத் தலைப்புப் பக்கம் ஏறத்தாள நூலின் அட்டையை ஒத்துள்ளது. எழுத்துப் பகுதியைச் சுற்றியுள்ள பெட்டி கூடுதல் அலங்காரத்துடன் இருப்பதும், அட்டையில் பிள்ளையார் சுழி, "கடவுள் துணை" என்பனவும், "மயனென்பவர் அருளிச்செய்த" என்ற தொடர் இல்லாமல் இருப்பதுவுமே வேறுபாடு ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Title pages
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைப்புப்_பக்கம்&oldid=3604863" இலிருந்து மீள்விக்கப்பட்டது