உள்ளடக்கத்துக்குச் செல்

தற்காலிக ஓய்வூதியம் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு ஊழியர் ஒருவர் அரசுப்பணியில் இருந்து பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியப் பயன்கள் அவருக்கு வழங்கப்படவேண்டும். பல்வேறு வகையான நிர்வாகக் காரணங்கள் அல்லது அலுவலக நடைமுறைகளில் ஏற்படும் தாமதம் அல்லது மாநிலக் கணக்காயரிடமிருந்து உரிய நேரத்தில் ஓய்வூதிய அங்கீகரிப்பு ஆணை பெறப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஓய்வூதியம் அன்றைய தினத்தில் வழங்க இயலாமல் போகலாம். அவ்வாறான நிலையில், ஓய்வூதியர்களின் இச்சிரமத்தைக் குறைப்பதற்காக அவர்களுக்குத் தகுதியுள்ள ஓய்வூதியத்தில் பெரும்பகுதியை உடனடியாக அலுவலகத் தலைவரே (Head of Department) ஆணையிட்டு வழங்கும் ஓய்வூதியமே தற்காலிக ஓய்வூதியம் (Provisional Pension) எனப்படும். தற்காலிகப் பணிக்கொடையையும் இவ்வாறு அலுவலகத் தலைவர் வழங்குவார்.[1]

பணியிலுள்ளபோது இறந்து போன தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வாரிசுதாரர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு முன்பும் இந்த தற்காலிக ஓய்வூதியத் திட்டம் செல்லுபடியாகும்.[2]

பணி ஓய்வும் தற்காலிக ஓய்வூதியமும்

[தொகு]

தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியக் கருத்துரு மாநிலக் கணக்காயர் அலுவலகம் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு தாமதமாகப் பெறப்படும் கருத்துருக்களை பரிசீலனை செய்து ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை உரிய நேரத்தில் அங்கீகரித்து ஆணை வெளியிட மாநிலக் கணக்காயருக்கு அவகாசமும் கிடைப்பதில்லை.இத்தகைய தாமத நிகழ்வுகளில் அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் தலைவரே தற்காலிக ஓய்வூதியம் மற்றும் தற்காலிக பணிக்கொடை வழங்கி ஆணையிடுவார்.

குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள காரணத்தால் நிபந்தனையின் பேரில் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டவருக்கும் தற்காலிக ஓய்வூதியம் மற்றும் தற்காலிக பணிக்கொடை வழங்க அலுவலகத் தலைவர் ஆணையிடுவார். ஓருவேளை ஓய்வூதியரால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருக்குமேயானால் இழப்பிற்கு சமமான தொகையை நிறுத்தி வைத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை வழங்க அலுவலகத் தலைவர் நடவடிக்கை எடுப்பார்.

மாநிலக் கணக்காயருக்கு ஓய்வூதியக் கருத்துரு அனுப்ப இயலாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியருக்கும் தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும்.

தற்காலிக ஓய்வூதியம் பெற நிபந்தனைகள்

[தொகு]

1. ஓய்வூதியர் தற்காலிகப் பணிநீக்கத்தில் இருக்கக் கூடாது. இந்நேர்வில் பிழைப்பூதியம் வழங்கப்படும்

2. அரசுக்கு நிதிஇழப்பு ஏற்படுத்திய ஓய்வூதியர் எனில் அவருக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைவிட இழப்புத்தொகை கூடுதலாக இருக்கக் கூடாது.

3. தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர் எங்கும் பணி செய்யக்கூடாது.

4. ஒழுங்கு நடவடிக்கையினை முடிப்பதற்கு ஓய்வூதியரே முட்டுக்கட்டையாக இருந்தால் அவருக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்கக்கூடாது.

தற்காலிக ஓய்வூதியம் பெற ஒப்பளிப்பு ஆணை

[தொகு]
பணியாளர் வகை ஆணை வழங்கும் அலுவலர்
துறைத்தலைவர் அரசு
தானே பணம் பெறும் அலுவலர் அலுவலகத் தலைவர்
பிறவகைப் பணியாளர்கள் அலுவலகத் தலைவர்

பணிக்காலத்தில் ஒரு அரசுஊழியர் இறக்க நேரிட்டால் தகுதியான அவருடைய குடும்ப உறுப்பினருக்கு அலுவலகத் தலைவர் தற்காலிக குடும்ப ஓய்வூதியம் வழங்கி ஆணையிடுவார், இவ்வாணை உரிய நேரத்தில் மாநிலக் கணக்காயர் மற்றும் தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒப்புதல் ஆணையில் பின்வரும் தகவல்கள் கண்டிப்பாக இடம்பெறும்.

1. குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய நபரின் புகைப்படம்

2. நிர்ணயம் செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகை

3. நிரந்தர முகவரி

4. வங்கிக் கணக்கு எண்

5. மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்று

6. பணம் பெற்று வழங்க வேண்டிய அலுவலர்

7. பணம் பெற்று வழங்கப்பட வேண்டிய கணக்குத்தலைப்பு

8.அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை ஏதாவது இருப்பின் பிடிக்க வேண்டிய தொகை

அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தற்காலிக ஓய்வூதியம் மற்றும் தற்காலிக குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர் ஒப்புதல் ஆணை வழங்குவார்.

தற்காலிக ஓய்வூதியத்துடன் படிகள் மற்றும் பிடித்தம்

[தொகு]

தற்காலிக ஓய்வூதியம், ஓய்வூதியர் பின்னாளில் அவர் பெறப்போகும் தகுதியுடைய ஓய்வூதியத்தைக் காட்டிலும் அதிகமானதாக இருக்காது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத்துடன் அன்றைய தினம் நடைமுறையிலுள்ள அகவிலைப்படி மற்றும் மருத்துவப்படி முதலியனவும் சேர்ந்து கிடைக்கும்.

தற்காலிக ஓய்வூதியர் விரும்பினால் அவருடைய ஓய்வூதியத்தில் குடும்பப் பாதுகாப்பு நிதிக்கான சந்தா பிடித்தம் செய்யப்படும்.

தற்காலிக ஓய்வூதியத்தில் மருத்துவ நிதி உதவி பெறுவதற்கான சந்தா தொகை மற்றும் ஒப்பளிப்பு ஆணையில் சுட்டிக்காட்டப்பட்ட பிற பிடித்தங்கள் செய்யப்படும்.


மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tn.gov.in/dop/p2.htm - 2.11 Provisional Pension
  2. [http://www.tnrd.gov.in/Establishment/linkfiles/go_fin_085_02_pg627.pdf Provisional Family Pension to the family of Government Servants who die in harness

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]