உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மஸ்தலா

ஆள்கூறுகள்: 12°58′N 75°22′E / 12.96°N 75.37°E / 12.96; 75.37
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மஸ்தலம்
—  கோயில் நகரம்  —
தர்மஸ்தலம்
இருப்பிடம்: தர்மஸ்தலம்

, கர்நாடகம்

அமைவிடம் 12°58′N 75°22′E / 12.96°N 75.37°E / 12.96; 75.37
நாடு  இந்தியா
மாநிலம் கர்நாடகம்
மாவட்டம் தெற்கு கன்னடம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்[1]
முதலமைச்சர் கே. சித்தராமையா[2]
மக்களவைத் தொகுதி தர்மஸ்தலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.shridharmasthala.org/


ஸ்ரீ ரத்னவர்மஹெக்கடே அமைத்த கோவில் நுழைவாயில்
கருங்கல்லான் ஆன 39 அடி உயர கோமதீஸ்வரரின் சிலை

தர்மஸ்தலம் (துளு/கன்னடம்:ಧರ್ಮಸ್ಥಳ) கர்நாடகாவின் தெற்கு கன்னடம் மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் தர்மசாலா கோயில் அமைந்த ஊராகும்.[3]

அது தங்கத்தில் செய்யப்பட்ட சிவ லிங்கத்தைக் கொண்ட சிவபெருமானின் கோவிலாகும். இந்தக் கோவில் சமணர்கள் நிர்வாகத்தில் இயங்குகிறது. ஆனால் மாதவா வம்சாவழியைச் சேர்ந்த இந்து குருக்கள் பூஜைகள் செய்கின்றனர். இதுவே இக்கோவிலின் வழக்கத்திற்கு மாறான அம்சமாகும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் லக்‌ட்சதீபா என்னும் தீபத் திருவிழா தர்மஸ்தலத்தின் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திருவிழாவாகும்.[4] அச்சமயத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 பேர் இந்தக் கோவிலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். நவீன வசதிகளுடன் கூடிய விருந்தினர் இல்லங்கள் மற்றும் புனித பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் எந்திரமயமாக்கப்பட்ட சமையலறைகளும் இங்கு உள்ளன.

தர்மஸ்தலம் மத ஒற்றுமைக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது, இங்கு புனிதப் பயணம் செய்பவர்களின் ஜாதி, கொள்கைகள் மற்றும் நம்பிக்கை போன்றவை இங்கு தடையாக இருப்பதில்லை. உள்ளூர் தெய்வங்கள் மற்றும் மஞ்சுநாதா (சிவன்) தெய்வங்களுக்கு இணையாக சமண தீர்தங்காராவும் இங்கு வழிபடப்படுகிறார். வைஷ்ணவிதே பிராமணர்கள் குருக்களாகவும், சமண மதத்தவரான ஹெக்கடே கோவிலின் பாதுகாவலராகவும் உள்ளனர்.

பிணக்குகளை தீர்த்துக்கொள்ள நீதி வேண்டி இங்கு சுற்றுப்புற மக்கள் வருகின்றனர். அவர்களின் சிக்கல்களுக்கு ஹெக்கடே தீர்ப்பு வழுங்குகிறார். ஹெக்கடே குடும்பத்தினர் வழிவழியாக இவ்வாறு இக்கோயிலில் தீர்ப்பு வேண்டுபவர்களுக்கு தீர்ப்பு கூறுகின்றனர். இத்தீர்ப்பு எந்த சட்ட பாதுகாப்பையும் அளிக்ககூடியதல்ல, இதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.

தர்ம தெய்வங்களின் உறைவிடமாக தர்மஸ்தலா நம்பப்படுவதால், கர்நாடகா மக்களிடையே மிகுந்த நம்பிக்கை பெற்றுள்ள கோவிலாக உள்ளது.2011 ஆம் ஆண்டு கர்நாடக அரசியலில் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் ஹச்.டி.குமாரசுவாமி ஆகியோரிடையே ஏற்பட்ட பிரச்சனையில், இருதரப்பினரும் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமிகள் சன்னதியில் தத்தம் தரப்பு உண்மை என்று மக்கள் உணர சத்தியம் செய்ய முன்வந்ததும், கோவிலில் கடைசி நேரத்தில் பி.எஸ்.எடியூரப்பா சத்தியத்திற்கு பதில் பூஜை மட்டும் செய்தும் பின்வாங்கியதும் கர்நாடக மக்களுக்கு தர்மஸ்தலாவின் மீதுள்ள அளப்பரிய நம்பிக்கையை காட்டும்.[5]

800 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெக்கடே குடும்பத்தினர் இக்கோயிலை பராமரித்து வருகின்றனர். கோயிலுக்கு எத்தீங்கும் வராமல் பாதுகாப்பது அவர்களின் தலையாய பணியாகும்.

தலபுராணம்

[தொகு]

அன்னப்பா என்பவரே இங்குள்ள சிவ லிங்கத்தை தர்மஸ்தலத்திற்கு கொண்டுவந்ததாக தர்மஸ்தலத்தில் கூறப்பட்டுள்ளது. அவர் ஹெக்கடே குடும்பத்திற்காக பணிபுரிந்தார் எனப் புராணம் கூறுகிறது. ஒருமுறை ஹெக்கடே சிவபெருமானை வழிபட விரும்பியபோது அவரிடம் பணிபுரிந்துகொண்டிருந்த அன்னப்பா ஒரு சிவ லிங்கத்தைக் கொண்டு வருவதாக வாக்களித்து இடத்திலிருந்து மறைந்தார். அனைவரும் வியக்கும்படி, மறுநாள் காலை அனைவரும் எழும்பும் நேரத்தில் ஹெக்கடே வீட்டிற்கு சில மீட்டர் தூரத்தில் தர்மஸ்தலத்தில் அன்னப்பா சிவ லிங்கத்தை நிறுவியிருந்தார்.

அந்த லிங்கம் மங்களூர் அருகில் உள்ள கத்ரி என்ற இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது பின்னாளில் தெரியவந்தது. அன்று மறைந்த அன்னப்பா இன்று வரை அந்தப் பகுதியில் காணப்படவில்லை. தர்மஸ்தலத்தில் உள்ள மக்கள் தற்போது அன்னப்பாவை அன்னப்பா பஞ்சுர்லி என்ற பெயரில், உள்ளூர் கடவுள் மற்றும் நாயகனாக வணங்குகிறார்கள்.

தீவிர பக்தர்களுக்கு மிகுந்த தூண்டுதலை வழங்கும் இடமாக இருக்கவில்லை. தர்மம் என்ற சொல்லின் பொருளாக சமுதாயத்தின் பெரும் மேம்பாடு என்பதையும் உள்ளடக்கி, பரந்துபட்ட விதத்தில் விரிவாகப் பயன்படுத்தி, பரந்துபட்ட சமூகத்தினரின் வாழ்வை பெருமளவு சிறப்பித்ததில் இது செயல்மிகு பங்கு வகித்தது. அதன் தொடக்க நடவடிக்கைகள், மக்களின் ஊதியம் மற்றும் நம்பிக்கையைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால் மக்கள் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்க முடிந்தது.

800 ஆண்டுகளுக்கு முன்பு, தர்மஸ்தலம் மல்லாரமாடியில்[6] குடுமா என்று அழைக்கப்பட்டது. மல்லாரமாடி என்பது பெல்தாங்கடியில் அப்போதிருந்த ஒரு கிராமமாகும். நெல்லியாடி பீடு என்ற வீட்டில் சமண தலைவர் பிர்மன்னா பெர்கடேவும் அவரது மனைவி அம்மு பாலதியும் வாழ்ந்தனர். எளிமையான தெய்வீக குணம் பொருந்திய மற்றும் பாசமிக்க பெர்கடே குடும்பத்தினரின் ஈகையும் விருந்தோம்பலும் அனைவருமறிந்ததாகும்.

புராணங்களின் படி தர்மத்தின் தேவதைகள் மனித உருவம் கொண்டு தர்மத்தைச் செயல்படுத்தவும் தொடரவும் பரப்பவுமான இடத்தைத் தேடிய போது பெர்கடேயின் இல்லத்தை அடைந்தனர். இந்தத் தம்பதியரும் தங்கள் பழக்கத்தின்படியே அந்த பிரபலமான விருந்தினர்களை மிகுந்த ஈடுபாட்டுடனும் மரியாதையுடனும் உபசரித்தனர். அவர்களின் உண்மை மற்றும் ஈகையினால் மகிழ்ந்த தர்ம தெய்வங்கள் அன்று பெர்கடேவின் கனவில் தோன்றினர். அவர்கள் தாம் வருகை தந்த நோக்கத்தை தம்பதியினரிடம் விவரித்துவிட்டு, அந்த வீட்டை தெய்வங்களின் வழிபாட்டிற்கு விட்டுத் தருமாறும் தர்மத்தைப் பரப்ப அவர்களது வாழ்வை அர்ப்பணிக்குமாறும் கூறினர்.

பெர்கடே எந்தக் கேள்வியும் கேட்காமல், தாங்கள் இருந்த நெல்லியாடி பீடு என்ற வீட்டை தெய்வ வழிபாட்டிற்கு விட்டுவிட்டு தங்களுக்கு என்று புதிய வீட்டை அவர்கள் கட்டிக் கொண்டனர். இது இன்றும் தொடர்கிறது. அந்தக் குடும்பத்தினர் அவர்களின் வழிபாட்டையும் உபசரிப்பையும் தொடர்ந்த நிலையில், தர்ம தெய்வங்கள் பெர்கடே தம்பதியினரின் முன் மீண்டும் தோன்றி கலராகு, கலர்காயி, குமாரசாமி மற்றும் கன்னியாகுமாரி என்ற நான்கு தெய்வங்களுக்கு தனித்தனியாக சிறு கோவில்களை கட்டி பிரதிஷ்டை செய்யுமாறு கூறினர். மேலும் தெய்வப் பணிகளைச் செய்ய பிறப்பிலேயே புனிதமானவர்கள் இருவரையும், பெர்கடே கோவிலின் தலைமைச் செயலராக தனது கடமைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்க நான்கு தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேவதைகளால் பணிக்கப்பட்டார். தெய்வங்களுக்கு பணிவிடை செய்பவர்கள் தேலம்படிதயா என்றும் மனவோலிதயா என்றும் அழைக்கப்பட்டனர். அதற்கு பிரதிபலனாக, பெர்கடே குடும்பத்தைப் பாதுகாப்பதாகவும், கோவிலுக்கு நிறைந்த தருமத்தையும் புகழையும் வழங்குவதாகவும் தெய்வங்கள் உறுதி அளித்தனர். பெர்கடே இவற்றை ஏற்றுக் கொண்டு கோவில்களைக் கட்டி பிராமண குருக்களை அழைத்து சடங்குகளை நிறைவேற்றினர். இயற்கை தெய்வங்களுடன் சிவலிங்கத்தையும் அமைக்குமாறு இந்த குருக்கள் பெர்கடேவைக் கேட்டுக் கொண்டனர். மங்களூர் அருகில் உள்ள கத்ரியிலிருந்து மஞ்சுநாதேஸசுவரா ஆலயத்தின் லிங்கத்தைக் கொண்டு வர தம் பணியாளான அன்னப்ப சுவாமியை தெய்வங்கள் அனுப்பின. பின்னர் லிங்கத்தைச் சுற்றி மஞ்சுநாதா ஆலயம் கட்டப்பட்டது.

16 ஆம் நூற்றாண்டில் தேவராஜா ஹெக்கடே, உடுப்பியின் ஸ்ரீ வதிராஜா சுவாமியை இந்தக் கோவிலைக் காண வருகை தருமாறு அழைத்தார். அவரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று வந்த சுவாமிஜி, மஞ்சுநாதா கடவுளின் தெய்வச்சிலையை வேத சடங்குகளின்படி அமைக்கவில்லை என்பதால் தனக்கு வழங்கிய பிக்ஷையை(உணவு) மறுத்துவிட்டார். பின்னர் சிறீ ஹெக்கடே சுவாமியே சிவலிங்கத்தை மறுபிரதிஷ்டை செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்த பின்னர், சுவாமி அவர்கள் சிவலிங்கத்திற்கு மாதவா முறையின் படி பூசைகளைச் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார்.

வேதமுறைப்படியான சடங்குகளையும் ஹெக்கடேவின் தரும செயல்களையும் கண்ட பின்னர், சுவாமி அவர்கள் தருமம் மற்றும் ஈகையின் இருப்பிடம் என்ற பொருள்படும்படி அந்த இடத்திற்கு தர்மஸ்தலம் என்று பெயரிட்டார். 600 ஆண்டுகளுக்கு முன்பு பெர்கடேக்கள் உருவாக்கிய தருமச் செயல்களையும் சமய ஒற்றுமையையும் ஹெக்கடே குடும்பத்தினர் வளர்த்து உறுதிப்படுத்தி வருகின்றனர். ஹெக்கடே குடும்பத்தினர் பெர்கடே குடும்பத்தின் வழிவந்தவர்களாவர். இந்தத் தன்னலமற்ற அர்ப்பணிப்பின் பலனாக தர்மஸ்தலம் இன்று பூத்துக் குலுங்குகிறது.

அன்னக் கொடை

[தொகு]

இங்கு தினந்தோறும் சராசரியாக சுமார் 10,000 புனிதப் பயணிகள் வருகை தருகின்றனர். இக் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணகான புனிதப் பயணிகளின் ஜாதி, நம்பிக்கை, கலாச்சாரம் அல்லது நிலை ஆகியவை எதுவாக இருப்பினும் அவர்கள் ஒவ்வொருவரும் தர்மஸ்தலத்தின் மதிப்புமிக்க விருந்தினர்களே ஆவர். இந்தப் புனிதமான கோவிலின் நிகழ்வுகளில் "அன்னதானமே" (இலவச உணவு) சிறப்பு மிக்க ஒன்றாகும். தினந்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இங்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. கோவிலில் அதிநவீன கருவிகளைக் கொண்டு நாள் முழுவதும் தரமான உணவு தயாரிக்கப்படுகிறது. இந்தக் கோவில் அன்னதானத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டைப் பார்ப்பதில்லை. உணவு உண்ணும் இடம் "அன்னப்பூர்ணா" என்று அழைக்கப்படுகிறது.

கல்வி கொடை

[தொகு]

தர்மஸ்தலம் SDMCET சங்கத்தின் மூலம் 25 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவற்றில் ஆரம்பப் பள்ளிகள், யோகக்கலை, சமஸ்கிருதம் போன்றவற்றைக் கற்றுத்தரும் குருகுலம், பொறியியல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற தொழில்முறைக் கல்வித்திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்வி நிறுவனங்கள் தர்மஸ்தலம், உஜிரி, மங்களூர், உடுப்பி, தர்வாத், ஹசன், மைசூர் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ளன.

காலம் சென்ற மஞ்சைய்யா ஹெக்கடே உருவாக்கிய சித்தவானா குருகுலம் கல்வி நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக அமைந்தது. இவற்றில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச உணவும் இருப்பிடமும் வழங்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படைப் பள்ளிக் கல்வித்திட்டத்துடன் சேர்த்து யோகா, சமஸ்கிருதம் போன்றவையும் கற்றுத்தரப்படுகின்றன. இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையிலான கொள்கைகளைக் கற்றுத் தருவதே இந்தக் கல்வி நிலையங்களின் சிறப்பாகும்.


உடல்நலக் கொடை

[தொகு]

உடல் நலப் பாதுகாப்பு துறையில் அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் பல நோய்களை முழுவதும் அழிக்கவும் தடுக்கவும் மருத்துவ அறக்கட்டளையானது பல சேவைகளை வழங்குகிறது. பூஜ்ய சிறீ ஹெக்கடே நிறுவிய நடமாடும் மருத்துவமனையானது மல்நாட் பகுதியின் தொலைவிலுள்ள இடங்களில் கிராமப்புறவாசிகளுக்கு அவசர நிலைகளைச் சமாளிக்கவும் மருத்துவ சிகிச்சை வழங்கவும் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. தர்மஸ்தலம் மஞ்சுநாதேசுவரா மருத்துவ அறக்கட்டளையானது காசநோயாளிகளுக்கு நிவாரணமளிப்பதற்காக ஒரு நவீன காசநோய் துப்புரவு மருத்துவமனையை நிறுவியுள்ளது. அப்போதிலிருந்து அது ஒரு பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது. ஹசன் மற்றும் உடுப்பியில் உள்ள ஆயூர்வேத மருத்துவமனைகள் பண்டைய வேத நூல்களின்படி ஆயூர்வேத மருந்துகளை வழங்குகிறது. நேத்ராவதி ஆற்றங்கரைகயில் நிறுவப்பட்டுள்ள இயற்கைத் தீர்வு மருத்துவமனையானது காற்று, நிலம், நீர், ஆகாயம் மற்றும் ஒளி ஆகிய பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறையை மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிறது.

மங்களூரில் உள்ள SDM கண் மருத்துவமனையானது நவீன அறிவியல் நுட்ப கண் சிகிச்சை மையமாகும். SDM பல் மருத்துவமனையானது வழக்கமான பல் தொடர்பான சிகிச்சைகளையும் வாய் தொடர்பான திசுப் பதிய சிகிச்சைகள், உதட்டுப்பிளவிற்கான அறுவைசிகிச்சை மற்றும் பிற பற்சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் போன்ற தனிச்சிறப்பு சிகிச்சைகளையும் வழங்குகிறது.

ஹெக்கடே பண்டைய உடல் ஆரோக்கிய முறையான யோகக்கலையைப் பரப்புவதில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகிறார். யோகா கற்றுத்தரும் மையங்களில் சூர்ய நமஸ்கார முகாம்கள் வழக்கமாக நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 250 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100 மாணவர்களுக்கு கற்றுத்தருகின்றனர்.

பாதுகாப்பு கொடை

[தொகு]

1972 ஆம் ஆண்டு தொடங்கிய இலவச மொத்தத் திருமணங்களை நடத்தி வைக்கும் நிகழ்வு புகழடைந்துள்ளது. இந்நிகழ்வில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் (சாமூகிக விவாக மஹோத்சவம்) செய்து கொள்கின்றனர். அனைத்து மதங்களும் இனங்களும் வரவேற்கப்படும் இந்த புனிதத் தலத்தின் மரபினைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான தம்பதிகள் தங்கள் மத வழக்கப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமண ஆடை, தாலி மற்றும் தம்பதியரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விருந்தினர்களுக்கான திருமண விருந்து ஆகியவற்றின் செலவை ஆலயமே ஏற்றுக்கொள்கிறது. [7]

ஹெக்கடே குடும்பம்

[தொகு]

தர்மஸ்தலத்தின் தற்போதைய தலைவரான பத்ம பூசன் டாக்டர். டி. வீரேந்த்ர ஹெக்கடே, தர்மாதிகாரி பீடத்தின் 21 ஆம் அதிகாரியாவார். 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச மொத்தத் திருமணம் போன்ற பல சமூக பொருளாதாரத் திட்டங்களை இவர் தொடங்கியுள்ளார்.

1973 ஆம் ஆண்டு ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பாகுபலி கடவுளின் சிலை ஒன்று, தர்மஸ்தலத்தில் மஞ்சுநாதா ஆலயத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய குன்றின் மீது நிறுவப்பட்டது. அந்தச் சிலை 39 அடி (12 மீ) உயரமும், 175 டன் எடையும் கொண்டிருந்தது.

தர்மஸ்தலத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆரம்பப் பள்ளிகள் முதல் தொழில்முறைக் கல்லூரிகள் வரையிலான 25 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் இயங்கிவருகின்றன. பாரம்பரிய கட்டடக்கலையைப் பாதுகாக்கப்பதில் அக்கறை எடுத்துக்கொள்வதால் பழைய மற்றும் வலுவற்ற கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

மஞ்சுஷா மியூசியம்

[தொகு]

எதிர்கால தலைமுறையினருக்காக பண்டைய கால சுவடிகள் மற்றும் ஓவியங்கள் மிகுந்த சிரத்தை மற்றும் கவனத்துடன் மீட்கப்பட்டுள்ளன. பண்டைய காலப் பொருள்களின் அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அரிய பழங்கால கார்கள் பலவற்றைக் கொண்டுள்ள கார் அருங்காட்சியகமும் உள்ளது.பழங்கால மரத் தேர்களும் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[8]

சர்வ தர்ம சம்மேளனம்

[தொகு]

ஒவ்வோர் ஆண்டும் தர்மஸ்தலத்தில் நடைபெறும் சர்வ தர்ம சம்மேளனத்தில் (அனைத்து சமயக் கூட்டம்), பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் கொண்ட ஆன்மீகத் தலைவர்களும் கலை மற்றும் இலக்கிய ஆதரவாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

வருகை தரும் எல்லா பக்தர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் வழங்கும் ஒரு சில யாத்திரைத் தலங்களில் தர்மஸ்தலமும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-10-24.
  4. லக்‌ட்சதீபா http://www.ourkarnataka.com/temples/dharmasthala2.htm பரணிடப்பட்டது 2009-03-08 at the வந்தவழி இயந்திரம்
  5. தர்மஸ்தலா- எடியூரப்பா மற்றும் குமாரசுவாமி தரிசனம்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. மங்களூர் தகவல்கள் |http://www.mangalore.com/documents/dharmasthala.html
  7. "தர்மஸ்தலம்". Archived from the original on 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2010-05-12.
  8. "மஞ்சுஷா மியூசியம்". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மஸ்தலா&oldid=3557344" இலிருந்து மீள்விக்கப்பட்டது