தர்மதுரை (1991 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தர்மதுரை
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஎஸ். ராமநாதன்
எஸ். சிவராமன்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புரசினிகாந்த்
மது
கெளதமி
நிழல்கள் ரவி
சரண்ராஜ்
ஒளிப்பதிவுவி. லக்ஷ்மண்
படத்தொகுப்புவிட்டல்
கலையகம்ராசி கலாமந்திர் இன்டர்நேஷனல்
விநியோகம்ராசி கலாமந்திர் இன்டர்நேஷனல்
வெளியீடு14 சனவரி 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தர்மதுரை (Tharmadurai) 1991 ஆம் ஆண்டு ரசினிகாந்த் மற்றும் கௌதமி நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1] இப்படம் 1989 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் நடிப்பில் வெளியான தேவா என்ற கன்னட திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[2] இப்படம் தெலுங்கில் கைதி அன்னய்யா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது[3]. இந்தியில் தியாகி என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிக்க மறு ஆக்கம் செய்யப்பட்டது. திரையரங்குகளில் 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய வெற்றித் திரைப்படம்.

கதைச்சுருக்கம்[தொகு]

பாலுவும் ஐஸ்வர்யாவும் வீட்டைவிட்டு வெளியேறிய காதலர்கள். அவர்களைத் தேடிவரும் ஐஸ்வர்யாவின் தந்தை ராஜதுரையும் (சரண்ராஜ்) அவனது சகோதரன் ராமதுரையும் (நிழல்கள் ரவி) காதலர்கள் மறைந்துள்ள இடத்தைக் கண்டுபிடித்து பாலுவை அடிக்கும்பொழுது அங்குவரும் தர்மதுரையைப் (ரஜினிகாந்த்) பார்த்ததும் ராஜதுரை, ராமதுரை இருவரும் அங்கிருந்து ஓடிவிடுகின்றனர். இதைக்கண்டு வியக்கும் காதலர்கள் தர்மதுரையின் வீட்டிற்குச் சென்றதும் அவர் மனைவி பார்வதியிடம் (கெளதமி) அதற்கானக் காரணத்தைக் கேட்கின்றனர். பார்வதி கடந்தகாலக் கதையைக் கூறுகிறாள்.

தர்மதுரையின் உடன்பிறந்த தம்பிகள் ராஜதுரை மற்றும் ராமதுரை. தன் தம்பிகளின் மீது அதிக பாசம் கொண்ட தர்மதுரை அவர்களை அதிக செலவு செய்து படிக்கவைக்கிறான். ஆனால் அவர்களோ அப்பாவியான அண்ணனை ஏமாற்றி பணத்தை வாங்கி வீண்செலவு செய்கின்றனர். தொழில் செய்வதாக பொய் சொல்லி தர்மதுரையிடம் 6 லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் ராஜதுரை மற்றும் ராமதுரை அங்கு சட்டத்திற்குப் புறம்பான தொழில்கள் செய்து விரைவில் பணக்காரர்கள் ஆகின்றனர். தர்மதுரைக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கிறது. தன் தம்பிகளைப் பார்ப்பதற்கு சென்னை வரும் தர்மதுரை அவர்கள் வீட்டில் தங்குகிறான். ராமதுரை செய்யும் கொலையை தான் செய்ததாக பழியேற்று சிறைக்குச் செல்கிறான் தர்மதுரை.

தங்களுடைய பணத்தேவைக்காக கிராமத்து வீட்டை விற்க முயலும் ராஜதுரை மற்றும் ராமதுரையை அவர்களது தந்தை தடுக்கிறார். இருவரும் அவரைக் கொலை செய்கின்றனர். அந்தக் கொலையைக் கண்ட சாட்சியான தர்மதுரையின் மகனையும் கொன்றுவிடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்கும் பார்வதி சென்னைக்கு வந்து வீட்டுவேலை செய்து பிழைக்கிறாள். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் தர்மதுரை, பார்வதியின் மூலம் உண்மைகளை அறிந்து, கோபமாக தம்பிகளின் வீட்டுக்குச் சென்று அவர்களைக் கொல்ல எத்தனிக்கும்போது அவர்களுடைய மனைவிகளின் வேண்டுகோளுக்காக மன்னித்தாலும், அவர்கள் இருவரையும் வெறுத்து ஒதுக்கிவிடுகிறார். பின்பு இந்தக் காட்டிலுள்ள வீட்டில் வசித்துவருவதாக சொல்லி முடிக்கிறார் பார்வதி.

இதன் பின் ராஜதுரையும் ராமதுரையும் எதிரிகளிடம் சிக்கிக்கொள்ள அவர்களை தர்மதுரை காப்பாற்றினாரா? மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டாரா? என்பதே முடிவு

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

"காலம் மாறிப்போச்சு" என்ற பெயரில் ரஜினிகாந்த், மஞ்சுளா, ரமேஷ் அரவிந்த் மற்றும் செந்தில் நடிப்பில் வேறு ஒரு கதையை படமாக்கத் துவங்கிய நிறுவனம் பிறகு அதைக் கைவிட்டு கன்னடத் திரைப்படமான தேவாவை மறு ஆக்கம் செய்தனர். படவெளியீட்டில் தாமதம் ஏற்படும் சூழலில் ரஜினியின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, இயக்குனர் ராஜசேகரின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் மட்டுமே இப்படம் சரியான நேரத்தில் வெளியானது.[4][5]

படவெளியீடு[தொகு]

1991 ஆம் ஆண்டு பொங்கல் நாளன்று வெளியான படங்களில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தர்மதுரை. இப்படம் வெளியாகி 100வது நாளில் இயக்குனர் ராஜசேகர் வாகன விபத்தில் மரணமடைந்தார்.[6][7]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பஞ்சு அருணாச்சலம் பாடல்களை எழுதியுள்ளார். 'ஆணென்ன பெண்ணென்ன' பாடலை மட்டும் கங்கை அமரன் எழுதியுள்ளார்[8]. இளையராஜா "மாசி மாசம்" பாடலின் இசையை தர்மக்ஷேத்ரம் என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற பாடலான " என்னோ ராத்திரி"யில் பயன்படுத்தி உள்ளார்.[9] இதே பாடல் 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாண்டி திரைப்படத்தில் சிறீகாந்த் தேவா இசையில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[10]

வ. எண் பாடல் பாடகர்கள்
1 ஆணென்ன பெண்ணென்ன எஸ். பி. பாலசுப்ரமணியன்
2 அண்ணன் என்ன தம்பி என்ன கே. ஜே. ஏசுதாஸ்
3 மாசிமாசம் ஆளான பொண்ணு கே. ஜே. ஏசுதாஸ், சுவர்ணலதா
4 ஒன்னு ரெண்டு மனோ, எஸ். ஜானகி
5 சந்தைக்கு வந்த கிளி எஸ். பி. பாலசுப்ரமணியன், எஸ். ஜானகி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தர்மதுரை".
  2. "தர்மதுரை imdb".
  3. "கைதி அன்னய்யா திரைப்படம்".
  4. "படவெளியீடு".
  5. "படவெளியீடு".
  6. "இயக்குனர் ராஜசேகர்".
  7. "இயக்குனர் ராஜசேகர்".
  8. "கங்கை அமரன்".
  9. "மாசி மாசம் - என்னோ ராத்திரி". மூல முகவரியிலிருந்து 2012-02-21 அன்று பரணிடப்பட்டது.
  10. "மாசி மாசம் - பாண்டி (2008 திரைப்படம்)".

வெளி இணைப்புகள்[தொகு]