தர்கன்-உல் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்கன்-உல் (மொங்கோலியம்: Дархан-Уул, பொருள் புனித மலை) என்பது மங்கோலியாவில் உள்ள 21 ஐமக்குகளில் (மாகாணங்கள்) ஒன்றாகும்.[1][1] இது மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

தர்கன் நகரமானது அக்டோபர் 17, 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நாட்டின் தலைநகரமான உலான் பத்தூர் மீது ஏற்பட்ட மனித புலம்பெயர்வு அழுத்தத்தை குறைப்பதற்காக இரண்டாவது தொழில்துறை மையமாக இது உருவாக்கப்பட்டது. இதற்காக இதே பெயரில் இருந்த மாவட்டமானது கலைக்கப்பட்டது. இதன் பகுதிகளானவை நகர ஆணையத்தால் நிர்வகிக்கப்பட்டன.

தர்கன்-உல் ஐமக் மற்றும் இதன் 4 சம்கள் (மாவட்டங்கள்) 1994 ஆம் ஆண்டு செலங்கே ஐமக்கில் இருந்து உருவாக்கப்பட்டன.

பொருளாதாரம்[தொகு]

தர்கனானது மங்கோலியாவில் உள்ள இரண்டாவது பெரிய தொழில்துறை மையமாக உள்ளது. தர்கன் உலோகவியல் ஆலையானது மிகப்பெரிய ஆலைகளில் ஒன்றாகும். மேலும் இங்கு 48 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

இந்த ஐமக்கானது அடிப்படையில் இதன் தலை நகரத்திற்கு சேவையாற்றுவதற்காக உள்ளது.

போக்குவரத்து[தொகு]

திரான்ஸ்-மங்கோலிய ரயில் போக்குவரத்தின் முதன்மை வழித்தடம் ஆனது தர்கனில் இருந்துதான் பக்கவாட்டு வழியாக எர்டெனெட்டுக்கு பிரிகிறது.

விவசாயம்[தொகு]

தர்கன் ஐமக்கானது மங்கோலியாவின் விவசாய மையப்பகுதியில் அமைந்துள்ளது. மங்கோலியாவில் உள்ள முதன்மையான விவசாய உற்பத்தி மையம் தர்கன் தான். இங்கு விவசாய வளர்ச்சிக்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மங்கோலியாவின் மற்ற பகுதிகளைவிட கடல்மட்டத்திலிருந்து குறைவான உயரத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் மற்ற பகுதிகளை விட சற்றே வெப்பமான சூழ்நிலையை இப்பகுதி கொண்டுள்ளது. காரா ஆற்று வடிநிலத்தில் தானியங்கள், காய்கறிகள் மற்றும் குறிப்பாக உருளைக்கிழங்குகளை விளைவிக்க ஏற்ற இயற்கை காலநிலையானது நிலவுகிறது. இந்த ஐமக்கில் 35 விவசாய நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு மையங்கள் செயல்படுகின்றன. இப்பகுதியில் 30,000 ஹெக்டேர் மணலானது விவசாயத்திற்கு உகந்ததாக உள்ளது. 1287.8 ஆயிரம் ஹெக்டேரானது காய்கறி உற்பத்திக்கு உகந்ததாக உள்ளது. நகர பொருளாதாரமானது வளர்ச்சியடைந்த போதிலும் இந்த ஐமக்கில் உள்ளூர் மக்கள் கால்நடைகளை தொடர்ந்து வளர்த்து வருகின்றனர். இங்கு சுமார் 1,30,000 கால்நடைகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Darkhan-Uul Aimas Statistical Office 2009 Annual Report". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்கன்-உல்_மாகாணம்&oldid=3557317" இலிருந்து மீள்விக்கப்பட்டது