தருமபுரம் ப. சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தருமபுரம் ப. சுவாமிநாதன்
TSwaminathan.jpg
பிறப்புஇராஜகோபால்
மே 29, 1923
வீராக்கண், நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு,இந்தியா
இறப்புஅக்டோபர் 15, 2009(2009-10-15) (அகவை 86)
குன்றத்தூர், சென்னை
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விசங்கீத பூசணம்(அண்ணாமலை இசைக்கல்லூரி, சிதம்பரம்)
பணிஓதுவார்
அறியப்படுவதுபண்ணிசை
பெற்றோர்மு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
சுலோச்சனா அம்மாள்

தருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசையில் பெரும் புலமை பெற்றிருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தருமபுரம் ப. சுவாமிநாதன் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு. பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால். ஐந்தாம் வகுப்புவரை படித்தார். அந்தக்கால திரைப்படப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இராஜகோபாலை திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபர் அருள்நந்தி தம்பிரான் தேவாரம் கற்க அனுப்பினார்.

தனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, "தேவார இசைமணி" பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி "சங்கீத பூசணம்" பட்டத்தைப் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்.[1]. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் இவர் ஈடுபட்டார். தேவார இசையை குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தார்.[1] யாழ்ப்பாணத்தில், 1960களில் "சைவ பரிபாலன சபை" ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார்.[2]

1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் (தருமபுர ஆதீனம், தமிழக அரசு, கொலம்பியா நிறுவனம் அகியவை வெளியிட்டு) வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார்.

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

 • சங்கீத பூசணம் (சிதம்பரம் அண்ணாமலை இசைக்கல்லூரி)
 • இசைப்பேரறிஞர், வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
 • கலைமாமணி (தமிழ்நாடு அரசு)
 • தமிழ்நாடு அரசவைக் கலைஞர் (எம்.ஜி.ஆர். அரசில்)
 • குடியரசுத் தலைவர் விருது
 • தருமபுரம், குன்றக்குடி, மதுரை, மற்றும் தஞ்சை ஆதீன விருதுகளும் பட்டங்களும்.
 • இராஜா அண்ணாமலை செட்டியார் விருது. (விருதின்போது கிடைத்த ரூபாய் ஒரு லட்சத்தை, தான் படித்த தருமபுர ஆதீன தேவார பாடசாலைக்குக் கொடுத்தார்.)[4]

குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமை இவரைச் சாரும்.

மறைவு[தொகு]

தருமபுரம் சுவாமிநாதன் நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சில காலம் இருந்த அவர் 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) அளவில் காலமானார்[2].

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Honour for tradition (த ஹிண்டு) பரணிடப்பட்டது 2010-09-03 at the வந்தவழி இயந்திரம், டிசம்பர் 13, 2002
 2. 2.0 2.1 அஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், மறவன்புலவு க. சச்சிதானந்தம்
 3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்111

வெளி இணைப்புகள்[தொகு]

தருமபுரம் சுவாமிநாதனின் பாடல்கள்[தொகு]

வேறு[தொகு]