உள்ளடக்கத்துக்குச் செல்

தரியா-இ-நூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரியா-இ-நூர்
ஈரானிய தேசிய நகைகளின் தொகுப்பிலிக்கும் தரியா-இ-நூர் வைரம்
எடை182 காரட்டுகள் (36.4 g)
நிறம்இளஞ்சிவப்பு[1]
வெட்டுகட்டற்ற வடிவமைப்பு
மூல நாடுஇந்தியா
எடுக்கப்பட்ட சுரங்கம்= கொல்லூர் சுரங்கம், நவீன ஆந்திரப் பிரதேசம்
தற்போதைய உடைமையாளர்ஈரானின் மத்திய வங்கி, தெகுரான், ஈரான்

தரியா-இ-நூர் (Daria-i-Noor) ( அல்லது ஒளியின் பெருங்கடல்[2]) மேலும் தர்யா-யே நூர் மற்றும் தரியா-ஐ-நூர் என்றும் உச்சரிக்கப்படும் இது உலகின் மிகப்பெரிய வெட்டு வைரங்களில் ஒன்றாகும். இது 182 காரட் (36 கிராம்) எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3] வெளிர் இளஞ்சிவப்பான இதன் நிறம், வைரங்களில் காணப்படும் அரிதான ஒன்றாகும். இந்த வைரம் தற்போது தெகுரானில் உள்ள ஈரான் மத்திய வங்கியின் ஈரானிய தேசிய நகைகள் சேகரிப்பில் உள்ளது.[4] நாசர் அல்-தின் ஷா கஜாரின் ஆட்சியின் போது, 457 சிறிய வைரங்கள் மற்றும் நான்கு மாணிக்கங்கள் கொண்டு ஒரு விரிவான சட்டகம் வடிவமைக்கப்பட்டது. இது ஈரானின் ஆட்சியாளர்களின் தலையை அலங்கரித்தது.[5][6] இருப்பினும், அதே பெயரில் மற்றொரு வைரம் வங்காளதேசத்தில் உள்ள ஒரு தனியார் சேகரிப்பில் உள்ளது.

பரிமாணங்கள்

[தொகு]

இது 41.40 மிமீ × 29.50 மிமீ × 12.15 மிமீ (1.630 அங்குலம் × 1.161 அங்குலம் × 0.478 அங்குலம்) மற்றும் சுமார் 182 மெட்ரிக் காரட் எடை கொண்டது. இது உலகின் மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரமாகும்.[7] முதலில், இது இன்னும் பெரிய கல்லிலிருந்து வெட்டப்பட்டிருக்கலாம்.[8]

வரலாறு

[தொகு]

இந்த வைரம், கோ-இ-நூர் என்ற பெயரைப் போலவே கருதப்படுகிறது. இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கோல்கொண்டா பிராந்தியத்தில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் வெட்டப்பட்டது.[9] இதன் ஆரம்பகால தோற்றம் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால் இது முகலாயப் பேரரசின் மயிலாசனத்தின் கண்களில் ஒன்றாக இருந்ததாக நம்பப்படுகிறது.

1739இல் ஈரானின் நாதிர் ஷா (ஆட்சி. 1736-1747) வட இந்தியாவின் மீது படையெடுத்து தில்லியை ஆக்கிரமித்தார். அப்போது தில்லியை ஆண்டுவந்த முகலாயப் பேரரசர் முகமது ஷா தன்னை காப்பாற்றிக்கொள்ள தரியா-இ-நூர், கோ-இ-நூர், மயிலாசனம் உள்ளிட்ட முகலாயர்களின் முழு பொக்கிசங்களையும் அவருக்கு அளித்தார்.

1747-இல் நாதிர் ஷா இறந்த பிறகு, வைரங்கள் அவரது பேரன் ஷாரோக் ஷாவிடம் சென்றது. அங்கிருந்து அது இலோட்ஃப் அலி கானின் கைகளுக்குச் சென்றது. ஈரானின் ஆளும் கஜார் வம்சத்தை நிறுவிய அகா முகமது கான் கஜாரின் கைகளில் லோட்ஃப் அலி கான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தரியா-இ-நூர் கஜார் கருவூலத்தில் நுழைந்தது. இந்த நேரத்தில், நாசர் அல்-தின் ஷா கஜார் இந்த வைரத்தை மிகவும் விரும்பியதாகக் கருதப்பட்டது, பெரும்பாலும் அதை வளையமாக்கி தனது கையில் அணிந்திருந்தார். வைரத்தை பராமரிப்பது என்பது உயர் பதவியில் உள்ள நபர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவமாகும்.

இந்த வைரம் அல்லது அதே பெயரில் உள்ள மற்றொரு வைரம் 19 ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக் கண்டத்திற்குத் திரும்பியதாக மற்றொரு கதை கூறப்படுகிறது.

சுமார், 1841-42 வாக்கில் வரையப்பட்ட சேர் சிங்கின் ஓவியத்தில் இடம் பெற்ற தரியா-இ-நூரின் ஓவியம்

இறுதியில் இந்த வைரம் சீக்கியப் பேரரசின் மகாராஜா இரஞ்சித் சிங்கின் கைகளில் சென்றது. கம்பெனி ஆட்சியுடன் சீக்கியப் பேரரசு இணைக்கப்பட்ட பிறகு, இந்தக் கல் ஆங்கிலேயர்களால் சீக்கியக் கருவூலத்தில் இருந்து பிற மதிப்புமிக்க பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.[2] கருவூலத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.[2] வைரத்தின் அப்போதைய மதிப்பு 63,000 ரூபாயாக இருந்தது. இது 1840 இல் £ 6,000 க்கு சமமானது. இது 2012 இல் £ 100 மில்லியனுக்கும் அதிகமாக மாறியது.[2] பதினொரு முத்துக்கள், பதினொரு கூடுதல் வைரங்கள் மற்றும் பதினொரு கார்னெட்டுகள் (உள்ளூரில் சூனி என்று அழைக்கப்படுகின்றன) போன்றவையும் வைரத்துடன் தொடர்புடைய நகைகளாக கணக்கிடப்பட்டன. இதன் உள்ளூர் எடை அளவீட்டு அமைப்பில் மொத்த எடை 10.8 தோலா ஆகும். தரியா-இ-நூர் இலண்டனுக்குச் சென்றாலும் பிரித்தானிய பிரபுக்களின் ஈர்ப்பைப் பெறத் தவறிவிட்டது. பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏலம் விடுவதற்காக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. டாக்காவைச் சேர்ந்த நவாப் இதனை ஏலத்தில் தனதாக்கிக் கொண்டார். இன்றுவரை இது வங்காளதேச வங்கியின் பெட்டகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தரியா-இ-நூரின் ஒரு ஓவியம்

1965 ஆம் ஆண்டில், ஈரானிய கிரீடம் நகைகள் குறித்து ஆராய்ச்சி நடத்திய ஒரு கனேடிய குழு, முகலாயப் பேரரசர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் பதிக்கப்பட்ட ஒரு பெரிய இளஞ்சிவப்பு வைரத்தின் ஒரு பகுதியாக தரியா-இ-நூர் இருந்திருக்கலாம் என்று முடிவு செய்தது. பிரெஞ்சு இரத்தின வியாபாரி ஜீன்-பாப்டிஸ்ட் டேவெர்னியர் தனது பயணக்குறிப்பில் இதை விவத்துள்ளார். அவர் இதை பெரிய மேசை டேபிள் வைரம் என்று அழைத்தார். இந்த வைரம் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கலாம்-பெரிய பகுதி தரியா-இ-நூர் ஆகும். சிறிய பகுதி 60 காரட் (12 கிராம் நூர்-உல்-ஐன் வைரம் என்று நம்பப்படுகிறது. தற்போது ஈரானின் தேசியக் கருவூலத்தின் சேகரிப்பில் ஒரு தலைப்பாகையில் பதிக்கப்பட்டுள்ளது.[1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Darya-e Nur". Britannica. (27 October 2022). 
  2. 2.0 2.1 2.2 2.3 Bhatia, Shyam (28 March 2012). "Meet Daria-i-Noor, the Koh-i-Noor's little-known sibling". The Tribune. https://www.tribuneindia.com/2012/20120328/main8.htm. 
  3. Malecka, Anna (2017). "Daryā-ye Nur: History and Myth of a Crown Jewel of Iran". Iranian Studies 51 (1): 69–96. doi:10.1080/00210862.2017.1362952. https://zenodo.org/record/6678030. 
  4. "Collections". cbi.ir. Archived from the original on 26 February 2014. Retrieved 1 March 2014.
  5. "The Darya-i-Noor Diamond - Israeli Diamond". Israeli Diamond Industry (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-10-06. Retrieved 2024-12-20.
  6. Staff (2009-09-22). "Darya-i-noor Pink Diamond: World Famous Diamonds". jewellermagazine.com. Retrieved 2024-12-20.
  7. Malecka, Anna (2017). "Daryā-ye Nur: History and Myth of a Crown Jewel of Iran". Iranian Studies 51 (1): 69–96. doi:10.1080/00210862.2017.1362952. https://zenodo.org/record/6678030. 
  8. "Largest pink diamond in 300 years discovered in Angola". The Tribune. 28 July 2022. https://www.tribuneindia.com/news/world/largest-pink-diamond-in-300-years-discovered-in-angola-416490. 
  9. Satyanarayana, S. V. (2000). "Diamonds in the Deccan: An Overview". In Gupta, Harsh K.; Parasher, A.; Balasubramanian, D. (eds.). Deccan Heritage (in ஆங்கிலம்). INSA and Universities Press (India). p. 144. ISBN 978-81-7371-285-2.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரியா-இ-நூர்&oldid=4336092" இலிருந்து மீள்விக்கப்பட்டது