தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் 1972 முதல் ஆண்டுதோறும் சிறந்த நூல்களை தேர்வு செய்து பணம் மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது. இதன்படி சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர்களுக்கும், நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தினருக்கும் பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் அளிக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

தமிழ் மொழியிலான சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் 1947 ஆம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1960 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தை தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், விதிமுறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. பின்னர் தமிழ்நாடு அரசின் அரசாணை நிலை எண் 842 கல்வி (தமிழ் வளர்ச்சிப் பிரிவு 2) நாள்: 31-5-1971 ல் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன. இவ்வாணையின்படி தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நூல்கள் 20 தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டது. பின்னர், அரசாணை நிலை எண் 49, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு மற்றும் அறநிலையத்துறை நாள்:27-02-1995ன் படி 20 தலைப்புகள் 23 தலைப்புகளாக மாற்றம் செய்யப்பட்டன. அதன் பின்னர், அரசாணை நிலை எண் 157, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு மற்றும் அறநிலையத்துறை நாள்:20-07-2001 ன் படி 23 தலைப்புகள் 30 தலைப்புகளாக மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர், அரசாணை நிலை எண் 75, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு மற்றும் அறநிலையத்துறை நாள்:16-03-2004 ன் படி விளையாட்டு எனும் புதிய தலைப்பு சேர்க்கப்பட்டு மொத்தம் 31 தலைப்புகளாக்கப்பட்டன. தற்போது தமிழர் வாழ்வியல், மகளிர் இலக்கியம் எனும் இரு தலைப்புகள் சேர்க்கப்பட்டு 33 தலைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

வகைப்பாடுகள்[தொகு]

கீழ்காணும் 33 வகைப்பாடுகளிலான தலைப்புகளில் கீழ் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

  1. மரபுக்கவிதை
  2. புதுக்கவிதை
  3. புதினம்
  4. சிறுகதை
  5. நாடகம் (உரைநடை, கவிதை)
  6. சிறுவர் இலக்கியம்
  7. திறனாய்வு
  8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
  9. பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
  10. நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
  11. அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித்தமிழ்
  12. பயண இலக்கியம்
  13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
  14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக அகழாய்வுகளும்
  15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
  16. பொறியியல், தொழில்நுட்பவியல்
  17. மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
  18. சட்டவியல், அரசியல்
  19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
  20. மருந்தியல், உடலியல், நலவியல்
  21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
  22. சமயம், ஆன்மிகம், அளவையியல்
  23. கல்வியியல், உளவியல்
  24. வேளாண்மையியல், கால்நடையியல்
  25. சுற்றுப்புறவியல்
  26. கணினியியல்
  27. நாட்டுப்புறவியல்
  28. வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்
  29. இதழியல், தகவல் தொடர்பு
  30. விளையாட்டு
  31. பிற சிறப்பு வெளியீடுகள்
  32. தமிழர் வாழ்வியல்
  33. மகளிர் இலக்கியம்

பரிசுத் தொகை[தொகு]

பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களின் நூலாசிரியர்களுக்கு 1972-ல் 2000/- பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. பின்னர் 1991-ல் நூலாசிரியர்களுக்கான தொகை 5,000/- ஆகவும், 1998-ல் 10,000/- ஆகவும், 2008 ஆம் ஆண்டில் நூலாசிரியருக்கு 20,000 மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு 5,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது.[1]. பின்பு, 2011 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் பரிசளிப்பு விழாவில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி இத்தொகையை நூலாசிரியர்களுக்கு 30,000/- என்றும், பதிப்பகத்தினருக்கு 10, 000/- என்றும் உயர்த்தி அறிவித்தார்.[2]

பரிசளிப்பு விழா[தொகு]

பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தினருக்கு பரிசுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், திருவள்ளுவர் தினத்தன்று சென்னையில் நடத்தப் பெறுகிறது. இவ்விழா சில ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த ஆண்டுகளில் சேர்த்து நடத்தப் பெற்றிருக்கின்றன. 2012 ஆம் ஆண்டு இந்தப் பரிசளிப்பு விழா சித்திரை மாதம் முதலாம் தேதியில் நடத்தப் பெற்றது.

பரிசு பெற்ற நூல்களின் பட்டியல்[தொகு]

(இப்பட்டியலில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் 1973, 1974, 1998, 2001, 2003 ஆம் ஆண்டுகளுக்கான பரிசு பெற்ற நூல்கள் பட்டியல் இல்லை. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவர்களுக்கு இதுகுறித்து மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே சிகப்பு நிறத்திலுள்ள கட்டுரைகள் உருவாக்கப்படும் வரை இப்பட்டியலிலிருந்து நீக்கம் செய்துவிட வேண்டாம். இப்பட்டியல் முழுமையாக இடம் பெற இன்னும் சிறிது காலம் ஆகலாம்.)

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் (மற்றும்) செய்தித்துறை அரசாணை (ப)எண்:30, நாள்: 17-01-2008[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ["சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசுத் தொகை 30 ஆயிரமாக உயர்வு". 2011-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-04 அன்று பார்க்கப்பட்டது. சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசுத் தொகை 30 ஆயிரமாக உயர்வு]

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசு வழங்கும் திட்டம்