தமிழ் நாட்டார் பாடல்கள்
தமிழில் அமையும் நாட்டார் பாடல்கள் தமிழ் நாட்டார் பாடல்கள் அல்லது தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படுகின்றன.
தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. காலம் காலமாக, வாய்மொழியாக, வாழ்கையின் பகுதியாக பாடப் பெற்றனவே இந்த நாட்டுப்புறப் பாடல்கள். இன்று எமக்கு எழுத்தில் கிடைப்பவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், அதற்குப் பின்பும் சில அறிஞர்களின் அயராத பணியால் ஆவணப்படுத்தப்பட்டவை ஆகும். இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட பாடல்கள் தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் ஒரு துளி என்றால் மிகையாகாது.
ஆய்வுகள்[தொகு]
தமிழ் நாட்டார் பாடல்களைப் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் நா. வானமாமலை அவர்களின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. அவர் வட்டாரங்கள் வாரியாக தொகுத்த நாட்டார் பாடல்களை தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
அவரது தொகுப்பில் நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்:[1]
நாலு மூலை வயலுக்குள்ளே நாத்து நடும் பொம்பிளே நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு நண்டு சாறு காய்ச்சி விட்டு நடு வரப்பில் போற பெண்ணே - உன் தண்டைக் காலு அழகைக் கண்டு கெஞ்சுறானாம் அஞ்சு மாசம் நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு பெண்டுகளே! பெண்டுகளே! தண்டு போட்ட பெண்டுகளே! - உன் கொண்டை அழகைக் கண்டு கெஞ்சுறானாம் அஞ்சு மாசம் நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
பின்னர் விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன் தம்பதியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைகள் துறையின் உட்பிரிவான கலை வரலாறு மற்றும் நாட்டார் கலைகள் துறையின்கீழ் ஆய்வுகள் மேற்கொண்டனர்.[2]
பாடல் வகைகள்[தொகு]
கமு. அருணாச்சலம் வகைப்பாடு
- தாலாட்டுப்பாட்டு
- விடுகதைப்பாட்டு
- ஏற்றப்பாட்டு
- வள்ளைப்பாட்டு
- கண்ணன்பாட்டு
- நடவுப்பாட்டு
- ஒப்பாரிப்பாட்டு
- பரிகாசப்பாட்டு
- கும்மிப்பாட்டு
- ஏசல்பாட்டு
- வேல்பாட்டு
- இசைப்பாட்டு
கி. வா செயகாந்தன் வகைப்பாடு
- தெம்மாங்கு
- தங்கரத்தினமே
- ராசாத்தி
- ஆண், பெண் தர்க்கம்
- கள்ளன் பாட்டு
- தொழிலாளர் பாட்டு
- குடும்பம்
- தாலாட்டு
- சிறுவர் உலகம்
- புலம்பல்
- கும்மி
- தெய்வம்
- பல கதம்பம்
அன்னகாமு வகைப்பாடு
- கடவுள் துதி
- மழை
- நாட்டுச் சிறப்பு
- பிறப்பு, வளர்ப்பு
- குழந்தைகளின் விளையாட்டு
- திருமணம்
- தொழில்
- நவீனம்
- களியாட்டங்கள்
- கதைப்பாடல்
- வாழ்கையில் சோதனைகள்
- வேதாந்தப் பாடல்கள்
- ஆதிவாசிப் பாடல்கள்
- மங்களம்
மா. வரதராசன் வகைப்பாடு
- தாலாட்டுப் பாடல்கள்
- குழந்தைப் பாடல்கள்
- வேடிக்கைப் பாடல்கள்
- கும்மி பாடல்கள்
- காதல் பாடல்கள்
- விவசாயப் பாடல்கள்
- தொழில் பாடல்கள்
- ஒப்பாரிப் பாடல்கள்
- வேதாந்தப் பாடல்கள்
- பல்சுவைப் பாடல்கள்
பெ. தூரன் வகைப்பாடு
- மாட்டுக்காரன் பாட்டு
- ஆக்காட்டி
- எலேலோ ஐலசா
- மழைப்பாட்டு
- மழைக் கஞ்சி
- கொடும்பாவி
- உழவுப்பாட்டு
- குலவைப்பாட்டு
- கேலிப்பாட்டு
- கும்மிப்பாட்டு
இலக்கியத்தில்[தொகு]
தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மக்களிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்களின் வாழ்க்கைமுறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் இருக்கின்றன. இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டு தமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.
நாட்டுப்பாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்தியுள்ளார். (எ.கா) பாஞ்சாலி சபதம். இவருக்கு முன்னதாக கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றுக்கான நாட்டுப்பாடல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவை இயற்றப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் நாட்டார் பாடல்களில் காணலாம்.
ஊடகங்களில்[தொகு]
விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன் ஆகியோர் ஒலி நாடாக்கள் வழியாகவும் நிகழ்ச்சிகள் ஊடாகவும் நாட்டார் பாடல்களைப் பரப்பினர். பின்னர் புசுபவனம் குப்புசாமி-அனிதா தம்பதியினரும் பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் வழியாகவும் நாட்டுப்புறப் பாடல்களைப் பரப்பினர். பரவை முனியம்மா[3] கொல்லங்குடி கருப்பாயி ஆகியோர் குறிப்பிடத்தக்க வகையில் திரைப்படங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில்[4] பங்கேற்றுள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ இப்பாடல் சேலம் மாவட்டம் மடகாசம்பட்டி என்ற இடத்திலிருந்து செல்வராஜூ என்பவரின் உதவியோடு கு. சின்னப்ப பாரதி சேகரித்தது. நா. வானமாமலை (1976) [1964]. "உழவும் தொழிலும்". தமிழர் நாட்டுப் பாடல்கள் (இரண்டாவது பதிப்பு ). சென்னை: செஞ்சுரி புக் ஹவுஸ். பக். 458.
- ↑ சந்தானம், கௌசல்யா (1999-05-02). "Simple pleasures". Folio (The Hindu). Archived from the original on 2008-01-18. https://web.archive.org/web/20080118105913/http://www.hinduonnet.com/folio/fo9905/99050140.htm. பார்த்த நாள்: 2008-01-29.
- ↑ "Ruling with RUSTIC ragas". Metro Plus (The Hindu). 2004-12-04. Archived from the original on 2005-02-08. https://web.archive.org/web/20050208021219/http://www.hindu.com/mp/2004/12/04/stories/2004120400290300.htm. பார்த்த நாள்: 2008-01-29.
- ↑ "In tune with the times". Metro Plus (The Hindu). 2004-10-22. Archived from the original on 2005-02-08. https://web.archive.org/web/20050208021219/http://www.hindu.com/mp/2004/12/04/stories/2004120400290300.htm. பார்த்த நாள்: 2008-01-29.
உசாத்துணைகள்[தொகு]
- சு. சக்திவேல். (2003). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.