உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் எழுத்துச் சீரமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால வளர்ச்சியில் தமிழ் வரிவடிவங்கள்
தமிழ் எழுத்துக்களின் வரலாறு
வள்ளுவர் எழுதிய வரிவடிவம்

தமிழ் எழுத்துச் சீரமைப்பு என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுமான முயற்சிகளாகும். தமிழை முதலில் தாமிழி எழுத்து வடிவம் கொண்டு எழுதினர். பின்பு தமிழின் எழுத்து வடிவம் பல மாற்றங்களை கண்டு இன்றைய நிலையில் நிலைத்துள்ளது. அச்சுத் துறை வளர்ந்த பின் அதன் தேவைக்கேற்ப அச்சுக் கோர்க்கவும், தட்டச்சு முறைக்காகவும் தமிழ் எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளன.

21ம் நூற்றாண்டில் கணினியில் தமிழ் பயன்பாடு அதிகரித்த பின்னர் மீண்டும் தமிழ் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆங்கிலம் முதலான மொழிகளைப் போல் குறைந்த எண்ணிக்கையில் எளிய வகையில் தமிழ் எழுத்துக்கள் இல்லாமல் மிகுதியான எண்ணிக்கை கொண்டிருப்பது கணிப்பொறி காலத்திற்கு ஏற்றதன்று என்று வழக்காடித் தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க வேண்டுமென்று பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

தொல்காப்பியம் காலத்தில் தமிழ்

[தொகு]

தொல்காப்பியம் முதலெழுத்துக்கள் முப்பது என்றும், சார்பெழுத்துக்கள் மூன்று என்றும் வரையறை செய்கிறது. “மெய்யோ டியையினும் உயிரியல் திரியா” என்று உயிர்மெய் எழுத்துக்களுக்கு அளவு மட்டும் கூறி அவற்றின் எண்ணிக்கையை உய்த்துணர வைக்கிறது. எனவே உயிர்-12, மெய்-18, சார்பு-3, உயிர்மெய்-216 என எழுத்து வடிவங்களைத் தொல்காப்பியம் சுட்டி நிற்கிறது.

பனையோலை எழுத்து

[தொகு]

பனை ஓலையில் தமிழ் எழுத்துக்களை எழுதிய காலத்தில் சார்பெழுத்துக்களில் ஒன்றான ஆய்தம் மட்டும் எழுத்தாகக் கொள்ளப்பட்டுத் தமிழ் எழுத்துக்கள் 247 எண்ணிக்கையினவாகும். எழுதும் பொருட்கள் மாறியபோதெல்லாம், எழுத்துக்களை மாற்றும் முயற்சிகளும் நடந்துள்ளன.

வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம்

[தொகு]

தமிழ்நாட்டில் அச்சிடல் பரவலான பின்னால் பனையோலையில் எழுதுவதற்கு ஏற்றாற்போல இருந்த தமிழ் எழுத்துகள் சிலவற்றை வீரமாமுனிவர் மாற்றியமைத்தார். ஏகார ஓகார ஒலிகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு முறை (”தே”, தோ); எகர-ஏகார; ஒகர-ஓகார முறைகளை வேறுபடுத்த காலில் கொம்புகளையும் சுழிகளையும் பயன்படுத்துதல், நெடிலைச் சுட்டும் காலை வளைவு கொடுத்து ரகரத்திலிருந்து வேறுபடுத்தும் முறை ஆகியவை அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஆகும்.

20ம் நூற்றாண்டு முயற்சிகள்

[தொகு]
  • திருக்களர் மு. சாமிநாத மாதவராயர் உபாத்தியாயர் எனும் சைவசமய அறிஞரால் 1921 இல் எழுதப்பட்டு திருக்கோட்டூர் மு. சீனிவாச தேவர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு 1922 இல் வெளியான நூல் "சைவசமயமும் தமிழ்ப்பாடையும்" . இந்த நூலில் தமிழர்கள் அனைவரும் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.[1]
  • 1930 காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர் கருத்தை வரவேற்றார்.
  • 1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.
  • 1935 குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா 1930ல் பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடர்நது குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினர். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ)
  • 1941 சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1948 பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.
  • 1975 பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர் குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச் சீர்திருத்த ஆய்வுத் தீர்மானம் நிறைவேற்றியது. (இப்பொழுது தமிழகப் புலவர் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. குழு உறுப்பினர்களில் எழுத்துச் சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உள்ளனர்)
  • 1977 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தது.
  • 1978-79 ல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.
  • 1983 ல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.

21ம் நூற்றாண்டு முயற்சிகள்

[தொகு]
  • முனைவர் வா. செ. குழந்தைசாமி தமிழ் எழுத்துச் சீர்மை என்றதொரு முன்மொழிவை வெளியிட்டார். தமிழில் உகர ஊகார வடிவங்களின் எண்ணிக்கையை குறைக்க இது முன்மொழிந்தது.

ஆதாரம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. சைவசமயமும் தமிழ்ப்பாடையும். 1922. pp. 23.