தமிழ் உயர்கல்வி வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் உயர்கல்வி வரலாறு என்பது முறைசார்ந்த உயர்கல்வியில் தமிழ் இடம்பெற்றதைக் குறிப்பது ஆகும்.

வரலாறு[தொகு]

தமிழ்ச் சங்கங்களின் முயற்சிகள்[தொகு]

ஆங்கிலேயர் காலத்தில் முறையான பள்ளிப்படிப்பைத் துவக்கி அது வளர்வதற்கு முன்பு தமிழகத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாகவே தமிழ் கற்பிக்கப்பட்டது. மேற்கொண்டு தமிழை ஆழமாக படிக்கவேண்டுமானால் கவிராயர்களிடம் மாணாக்கராக சேர்ந்தே கற்கவேண்டி இருந்தது. தமிழ்நாட்டுக்கு முறையான பள்ளிப் படிப்பானது 1831இல் ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகமானது. அப்போது பள்ளியில் தமிழ் கற்பிக்க தேவைப்பட்ட ஆசிரியர்களை கவிராயர்கள் அளிக்கும் சான்றைக் கொண்டு நியமிக்கப்பட்டனர். காரணம் தமிழைக் கற்பிக்க முறையான கல்லூரிப் படிப்பும், கல்லூரி சான்றுகளும் இல்லாத நிலையே ஆகும்.

மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901 செப்டம்பர் 14 இல் துவக்கப்பட்டபிறகு தமிழ்ப் புலவருக்கான பண்டித‍த் தேர்வை அது முதலில் தொடங்கியது. இதில் பிரவேசம், பாலபண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று தேர்வுகள் நடத்தப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கடுத்து திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப்புலவர் தேர்வை நடத்தத் தொடங்கியது. இந்த சங்கம் சங்க நூற் சிறப்புப் புலவர், கப்பியச் சிறப்புப் புலவர், சமய நூற் சிறப்புப் புலவர், நீதி நூற் சிறப்புப் புலவர் என்னும் நான்குவகை சிறப்புப்புலவர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த இரண்டு இடங்களிலும் தேர்வுக்கு வருபவர்கள் நூல்பட்டியலைப் பெற்று அவர்களின் சொந்த முயற்சியில் படிக்கவேண்டிய சூழல் நிலவியது. இவை கல்லூரி, வகுப்பறை போன்ற ஏற்பாடுகளைச் சொய்துகொள்ளாமல் தேர்ச்சியை மதிப்பிட்டு பட்டம் தரும் பணியை மட்டும் செய்தன. இதனால் இவை நடத்திய தேர்வுகளும் தந்த பட்டங்களும் பல்கலைக்கழக ஏற்பு பெறாதவையாக இருந்தன.

கலப்புப்பாடம்[தொகு]

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் புலமைக்கான வித்துவான் தேர்வை 1910இல் நடத்த‍த் தொடங்கியது. அங்கு தமிழும் சமசுகிருதமும் கலந்த மூவகைப் பாடத்திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டன. வித்துவான் (2அ, 2ஆ, 2இ) என மூன்றுவிதமான பட்டங்கள் தரப்பட்டன. தமிழ் மட்டும் கற்பிக்கப்படும் சூழல் எந்தக் கல்லூரியிலும், இல்லாத நிலையே இருந்த‍து.

தனித்தமிழ்க் கல்வி[தொகு]

அச்சமயம் திருவையாறு அரசர் கல்லூரியில் சென்னைப் பல்கலைக் கழகம் மேற்குறிப்பிட்டவிதமான வித்வான் படிப்பைத் துவக்கியது. இந்தக் கல்லூரி மாவட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. இந்நிலையில் 1923இல் மாவட்டக் கழகத் தலைவராக நீதிக்கட்சித் தலைவர் ஏ. டி. பன்னீர் செல்வம் பொறுப்புக்கு வந்தார். அவரின் நிர்வாகத்தின்கீழ் திருவையாறு கல்லூரி வந்தது. இதன்பிறகு திருவையாறு கல்லூரியில் தனித்தமிழ் படிப்பைத் துவக்க வேண்டுமென்ற முனைப்பில் பல தடைகளைத் தாண்டி, முதன்முதலில் தனித்தமிழ் படிப்பானது வித்வான் (2ஈ) என்ற பெயரில் அளிக்கப்பட்டது. இந்தப் பட்டம் 1972இல் தமிழ் புலவர் என மாற்றம்பெற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 'தமிழ்ப்புலவர் கல்லூரி' தந்தது திராவிட இயக்கம் (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். பக். 93-96.